உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / போட்டி போட ஆள் தேடுறாரு மாஜி:பணத்தோட காத்திருக்காரு அதிகாரி!

போட்டி போட ஆள் தேடுறாரு மாஜி:பணத்தோட காத்திருக்காரு அதிகாரி!

பணி நிமித்தமாக, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டுக்குச் சென்றிருந்த சித்ரா, தி.மு.க., அலுவலகம் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள். கட்சி நிர்வாகிகள் பலரும், உதயநிதி வருகையை சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.''என்ன மித்து, பில்லுார்-3 திட்ட துவக்க விழாவுக்கு போயிருந்தியே; ஏதாச்சும் விசேஷம் இருக்குதா,'' என, பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா.''என்னக்கா... இப்படி கேட்டுட்டீங்க. சீட்ல உதயநிதி உட்கார்ந்திருந்த ஸ்டைலே வித்தியாசமா இருந்துச்சு; ஒரு பக்கம் நேரு; இன்னொரு பக்கம் முத்துசாமி உட்கார்ந்திருந்தாங்க. ரெண்டுபேர்கிட்டயும் பேசி, 'டேப்லெட்'டுல குறிப்பு எழுதிக்கிட்டாரு. விளையாட்டுத்தனம் இல்லாம, உதயநிதி பேச்சுல பக்குவம் தெரிஞ்சுச்சு,''''அரசு விழாவா இருந்தாலும் கூட, மாவட்ட செயலாளர்களுக்கு மேடையில சீட் குடுத்து உட்கார வச்சிருந்தாங்க; நேரு சொன்னபடி, அவங்களுக்கும் பொன்னாடை போர்த்தி, கவுரவிச்சாரு,'''செட்டிங்' டெண்டர்''எதிர்க்கட்சி 'மாஜி' வார்டுல ஜெயிச்சதுக்காக, ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தருக்கு கார்ப்பரேஷன்ல முக்கியமான பதவி கொடுத்தாங்க. அதை வச்சு, 'வாட்ஸ் ஆப்' குரூப் ஆரம்பிச்சு, 'செட்டிங் டெண்டர்' செய்ற அளவுக்கு வேலையைக் காட்டுனது, கவர்மென்டுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கு,''''இந்த விவகாரத்துல, எதிர்க்கட்சி 'மாஜி'க்கு நெருக்கமான கான்ட்ராக்டர், பிரச்னையை பூதாகரமா கிளப்பி இருக்காரு. இதுசம்பந்தமா, 'மாஜி'கிட்ட திருச்சிக்காரர் பேசியிருக்காரு. அப்போ, தன்னோட வீட்டுக்கு முன்னால, மூனு மாசத்துக்கு முன்னாடி குழியைத் தோண்டி, மூடாம இருக்காங்கன்னு, கோபத்தை கொட்டியிருக்காரு. 'எலக்சனுக்கு அப்புறம் அவரைத் துாக்கிருவோம். 'வாட்ஸ் ஆப்'ல கான்ட்ராக்ட் விட்ட விவகாரத்தை, பெருசு பண்ணாதீங்க'ன்னு சொல்லியிருக்காராம்,''''ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் மிரண்டு போயிருக்காங்களாமே...''''அதுவா... கட்சி முழுப் பொறுப்பும் உதயநிதி வசம் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்கு. இப்போ, லோக்சபா தேர்தல் வேலைகளைக் கவனிக்க, மேற்கு மண்டலத்துக்கு உதயநிதியை பொறுப்பாளரா போட்டுருக்காங்களாம். இதை கேள்விப்பட்டு, தொண்டர்கள்லாம் குஷியா இருக்காங்க.''ஆனா, முக்கிய நிர்வாகிங்க பலபேரு அரண்டு கிடக்கறாங்க. கட்சி வளர்ச்சிக்கு எந்த வேலையும் செய்யாம, சம்பாதிக்கிறதுல மட்டுமே குறியா இருக்கறதுனால, மிரண்டு போயிருக்காங்க,''சூட்கேசுடன் தவம்''பதவியை கைப்பத்துறதுக்காக, கார்ப்பரேஷன் ஆபீசர் ஒருத்தரு, சூட்கேசோட திருச்சியில தவமிருக்காராமே...''''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான்! கார்ப்பரேஷன்ல ரெண்டு உதவி கமிஷனர் போஸ்டிங் காலியா இருக்கு. இதுல, வருவாய் பிரிவு உதவி கமிஷனர் போஸ்டிங்கை கைப்பத்துறதுக்கு, ஏகப்பட்ட போட்டி நடக்குது. தற்போதைக்கு, நிர்வாக அலுவலர் ஒருத்தருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்க,''''மண்டலத்துல இருக்கற உதவி கமிஷனருக்கு, 3,000 சதுரடிக்குள்ள சொத்து வரி நிர்ணயிக்க அதிகாரம் கொடுத்திருக்காங்க. 3,000 சதுரடியில இருந்து, 5,000 சதுரடி வரைக்கும் கட்டுன பில்டிங்கிற்கு சொத்து வரி நிர்ணயிக்க, வருவாய் பிரிவு உதவி கமிஷனருக்கு பைல் போகணும். இந்த பொறுப்புல, உதவி கமிஷனருக்கு கீழே வேலை பார்க்குற நிர்வாக அலுவலரை நியமிச்சு, கூடுதல் அதிகாரம் கொடுத்திருக்கிறதுனால, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் மத்தியில, கசமுசா ஓடிட்டு இருக்கு...''''இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அ.தி.மு.க., ஆட்சியில, 'மாஜி'யோட சகோதரர் தயவுல, உதவி கமிஷனர் பதவி வகிச்சு, கரன்சியை கோடி கோடியா அள்ளுன அதிகாரி, திருப்பூர்ல இருந்து மறுபடியும் நம்மூர் கார்ப்பரேஷனுக்கு திரும்பி வர்றதுக்கு, காய் நகர்த்திட்டு இருக்காரு. இதுக்காக, பேரம் பேசிட்டு, சூட்கேசோட திருச்சியில் தவமிருக்காராம்,''நம்பிக்கையே வாழ்க்கை''அதெல்லாம் இருக்கட்டும். தேர்தல் அறிக்கை தயாரிக்கறதுக்கு, ரெண்டு திராவிட கட்சிகளும் நம்மூர்ல ஒரே நேரத்துல கருத்து கேட்பு கூட்டம் நடத்துனாங்களே... என்னாச்சு... நீங்க போயிருந்தீங்களா...''''ரெண்டு தரப்பு கூட்டத்துக்கும் தொழில்துறையை சேர்ந்தவங்களும், விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் போயி, மனு கொடுத்திருக்காங்க. எந்த கட்சி முக்கியத்துவம் கொடுக்கும்னு காத்திருக்காங்க. ஆபீசர்ஸ் சொல்ற பேச்சை கேட்காம, தொழில்துறையினர் கோரிக்கையை செஞ்சு கொடுக்கணும்னு எதிர்பார்த்து, நம்பிக்கையோட காத்துக்கிட்டு இருக்காங்களாம்,''போட்டிக்கு ஆள் இல்லை''கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டைன்னு சொல்றாங்க. ஆனா, லோக்சபா தேர்தலுக்கு போட்டி போடுறதுக்கு, ஆளே கிடைக்கலையாமே...''''அதுவா... 'வடவள்ளி'க் காரரையும், முன்னாள் மேயரையும் இப்போதைக்கு 'டிக்' பண்ணி வச்சிருக்காங்களாம். இதுல, வடவள்ளிக்காரர் 'சீட்' வேணாம்னு சொல்றாராம். ஏற்கனவே ஒரு கேஸ் 'பெண்டிங்' இருக்கு; இருந்தாலும், சட்டசபை தேர்தல்ல போட்டி போடுறேன்; எம்.பி., சீட் வேணாம்னு சொல்றாராம்,''''முன்னாள் மேயரை நிறுத்துனா, மறுபடியும் கட்சிக்குள்ள அவருக்கு செல்வாக்கு ஒசந்துருமோன்னு, 'மாஜி' பயப்படுறாரு,'' ''ஆனா, நீலகிரி தொகுதியில போட்டி போடுறதுக்கு, இலைக்கட்சிக்காரங்க ஆர்வம் இல்லாம இருக்காங்க. இதுக்கு முன்னாடி, நீலகிரியில ரெண்டு தடவை அ.தி.மு.க., நேரடியா போட்டியிட்டு ஜெயிச்சிருக்கு. அதுக்கப்புறம் அ.தி.மு.க., கூட்டணியில காங்கிரஸ் வேட்பாளரும், பா.ஜ.,வேட்பாளரும் ஜெயிச்சிருக்காங்க. அதனால, நீலகிரியில போட்டி போடுறதுக்கு முட்டி மோதுவாங்க. ஆனா, இந்த தடவை யாருமே ஆர்வம் காட்டாம, 'கப்சிப்'ன்னு இருக்காங்க,''கண்டா வரச்சொல்லுங்க''கண்டா வரச் சொல்லுங்கன்னு, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளை கிண்டலடிச்சு போஸ்டர் ஒட்டி இருந்தாங்களே... பதிலுக்கு எதிர்க்கட்சிக்காரங்களை கிண்டலடிச்சும், சமூக வலைதளத்துல தகவல் பரப்புனதா சொன்னாங்களே...''''ஆமாப்பா... மதுக்கரை நகராட்சியிலதான் இந்த கூத்து நடந்துருக்கு. நகராட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியை குறிக்கிற வகையில, 'கோலப்பொடி திருடனை கண்டா வரச்சொல்லுங்க'ன்னு, அ.தி.மு.க., - ஐ.டி., விங்க்கை சேர்ந்தவங்க பதிவு போட்டாங்க,''''இதுக்கு பதிலடி கொடுக்கறதுக்காக, போன ஆட்சிக்காலத்துல நடந்த சம்பவத்தை நினைவூட்டுற வகையில, 'மாஜி'யின் மச்சினன் போட்டோ போட்டு, 'கம்பி திருடனை கண்டா வரச் சொல்லுங்க'ன்னு பதிவு போட்டிருக்காங்க. இதனால, மதுக்கரை ஏரியாவுல தி.மு.க.,- அ.தி.மு.க.,இடையில, முட்டல் மோதல் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க,''போலீசுக்கு லீவா...இருவரும் பேசிக் கொண்டே, அருகாமையில் உள்ள பேக்கரிக்கு சென்றனர். இஞ்சி டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''இதுவரைக்கும் போலீஸ் மேட்டர் சொல்லலையே...,'' என கேட்டாள்.''ஏம்ப்பா... இப்படி சொல்றே. அவுங்க ஆபீசுக்குள்ள நடக்குற, ஒரு விஷயத்தை சொல்றேன் கேளு! நம்மூர்ல ஒரு எஸ்.பி., தலைமையில, புதுசா தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கியிருக்காங்க. ஒரு டி.எஸ்.பி., மூனு இன்ஸ்பெக்டர், 40 போலீஸ்காரங்க டூட்டி பார்க்குறாங்க. இப்போ, சிறப்பு புலனாய்வு பிரிவையும், இந்த ஆபீசோட இணைச்சிட்டாங்க,''''இந்த பிரிவுல வேலை பார்க்குறவங்க, கவர்மென்ட் ஸ்டாப் மாதிரி, சனிக்கிழமையும், ஞாயித்துக்கிழமையும் ஆபீசுக்கு வர்றதில்லை. இதை கவனிச்ச எஸ்.பி., 'போலீஸ்காரங்களுக்கு எதுக்கு லீவு'ன்னு கேட்டு, ஒழுக்கமா வேலைக்கு வரணும்னு கறாரா உத்தரவு போட்டுட்டாராம்...''''அதுக்கப்புறமும் தினமும் சாயாங்காலம், 6:00 மணியாச்சுன்னா... வீட்டுக்கு கெளம்புறதுல குறியா இருந்தாங்களாம். அதுக்கும் தடா போட்டுட்டாராம்; ஒவ்வொருத்தரும் ஒதுக்குன வேலையை முடிச்ச பிறகே கெளம்பனும்னு சொல்லிட்டாராம். இத்தனை நாள் ஜாலியா இருந்த போலீஸ்காரங்க, இப்போ நொந்து போயிருக்காங்களாம்,''டீ குடித்து விட்டு, ஸ்கூட்டரை கிளப்பிய சித்ரா, வடகோவை மேம்பாலம் ஏறி இறங்கியதும், வனக்கல்லுாரி வளாகத்துக்குள் நுழைந்தாள்.ஊதியத்தில் முறைகேடுமித்ரா, ''வனத்துறை ஆபீசுல முறைகேடு நடக்கிறதா கேள்விப்பட்டேனே. நீங்க... விசாரிச்சீங்களா...'' என, நோண்டினாள்.''அதுவா, கோவை வனக்கோட்ட அலுவலகத்துல, 21 வருஷமா ஒருத்தரு உதவியாளரா இருக்காரு. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்குறதுல முறைகேடு செய்றதா சொல்றாங்க. டிரைவர்கள், 25 நாள் வேலை செஞ்சாலும், 20 நாட்களுக்கே ஊதியம் கொடுக்குறாராம்,''''கண்காணிக்க வேண்டிய பொறுப்புல இருக்கற, அலுவலர் மேலயும் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் இருக்கு. இவரால, பெண் ஊழியர்கள் பலரும் மன உளைச்சலோட வேலை பார்க்குறாங்களாம். எலக்சன் நேரத்துல, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தா, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும்னு உடன்பிறப்புகள் பேசுறாங்க,'' என்ற மித்ரா, அவ்வளாகத்தில் உள்ள மியூசியத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை