உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / குட்கா விற்கிறாங்க தில்லா: போலீசும், ஆளுங்கட்சியும் கட்டுறாங்க கல்லா

குட்கா விற்கிறாங்க தில்லா: போலீசும், ஆளுங்கட்சியும் கட்டுறாங்க கல்லா

மங்கலத்தில் உள்ள தோழி வீட்டு விசேஷத்துக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், விருந்து சாப்பிட்டு கிளம்பிய இருவரும், ஆண்டிபாளையம் குளத்தருகே வந்த போது, ''அக்கா, இந்த குளத்தை 'டெவலப்' பண்ணி, சுற்றுலா தலமாக மாத்தப் போறாங்களமே. அப்படியே உள்ள போய் பார்த்துட்டு, போகலாம்'' என்றாள் மித்ரா.''சரி மித்து...'' என்ற சித்ரா, ஸ்கூட்டரை ஓரங்கட்டி விட்டு, குளத்தை நோக்கி சென்றனர். சுற்றுலா துறை சார்பில், சில கட்டுமான வேலைகள் நடந்துக் கொண்டிருந்ததை பார்த்து, ''ம்ம்ம்...வேலை நடக்குது போல; அடுத்த மாசம், இங்க படகு சவாரி கூட விடறாங்களாம்,'' என்றாள் சித்ரா. பின், அங்கிருந்து இருக்கையில் அமர, இயற்கையை ரசிக்க துவங்கினர்.''சுற்றுலா தலமாக மாத்தறது நல்ல விஷயம் தான்; இந்த பசங்க தான், இந்த மாதிரி இடங்களுக்கு வந்து 'தண்ணி' அடிக்கிறது, குட்கா போடறதுன்னு, சேட்டை பண்ணுவாங்க,'' என்றாள் சித்ரா.

ஆளுங்கட்சியே துணை!

''இந்த குளத்துக்கு, 24 மணி நேரம் கண்காணிக்கிற மாதிரி 'செக்யூரிட்டி' போடப் போறாங்களாம்க்கா. பான் பராக், குட்கான்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது என்ற மித்ரா, ''சேவூரில் நேர்மையான முறையில் பணியாற்றி வந்த போலீஸ் அதிகாரி ஒருத்தர், குட்கா வியாபாரிகளை தேடித்தேடி புடுச்சு உள்ளே போட்டார்,''''திடீர்ன்னு பார்த்தா, அவரை 'டிரான்ஸ்பர்'ல அலங்கியத்துக்கு துாக்கியடிச்சுட்டாங்க. என்ன காரணம்ன்னு விசாரிச்சா,குட்கா விக்கிற ஆட்களுக்கு, ஆளுங்கட்சி பொறுப்பாளர் ஒருத்தர், குட்கா விக்கிறவங்க மேல 'ஆக்ஷன்' எடுக்க வேண்டாம்'ன்னு, அவருக்கு தொடர்ந்து 'பிரஷர்' கொடுத்திட்டே இருந்திருக்காரு,''''ஆனா, அவர் தன்னோட அதிரடியை காண்பிச்சிட்டே இருந்திருக்காரு. இதனால, 'பால்' போல 'ராஜ்' தன்னோட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த அதிகாரிக்கு 'டிரான்ஸ்பர்' வாங்கி குடுத்திட்டாருன்னு ஊரரெல்லாம் ஒரே பேச்சுங்க்கா...'' என, விவகாரத்தை விளக்கினாள் மித்ரா.''சிட்டிக்குள்ள, மதுக்கடை பார் வாங்கித்தர்றதா சொல்லி நெறைய பேர்கிட்ட இருந்து, 2 கோடி வரை வசூல் பண்ண ஒரு 'தங்க'மான 'ராஜ' அரசியல்வாதி' பத்தி போன வாரம் பேசினோம்ல. உஷாரான ரகசிய போலீஸ், பணத்தை பறிகொடுத்தவங்களோட விவரத்தை சேகரிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்,''''இருந்தாலும், அசராத அவர், 'என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. கட்சி மேலிடம் வரை கவனிச்சுட்டேன்னு கெத்து காண்பிச்சிட்டு இருக்காராம்,'' என்ற சித்ரா, தண்ணீரை குடித்து தொடர்ந்தாள்.''அவரை பத்தின விசாரணையில, குட்கா விற்பனையில ஈடுபடற மொத்த வியாபாரிங்க சிலருக்கு அவரு தான், 'தொழில் பாதுகாப்பு' தர்றாராம். அந்த வியாபாரிங்க, சொகுசு கார்ல மூட்டை, மூட்டையா குட்கா எடுத்து போய், சிட்டிக்குள்ள முக்கியமான இடத்துல பதுக்கி வைச்சு, கேரளாவுக்கு கடத்தறதாவும் பேசிக்கிறாங்க. இதெல்லாம் லோக்கல் போலீசுக்கு தெரிஞ்சும், 'கவனிப்பு' அவங்களோட கண்ணை மறைச்சு வைச்சிருக்குன்னும் சொல்றாங்க,'' என ரகசியம் உடைத்தாள் சித்ரா.''ஆமாங்க்கா, நானும் கேள்விப்பட்டேன். இந்த இல்லீகல் விவகாரத்தை மேலிடம் வரைக்கும் கொண்டு போக, அவங்களோட 'ஆப்போசிட் டீம்' கூட தயாராகிட்டு இருக்காமே,'' என்ற மித்ரா, ''கணக்கம்பாளையத்துல ஒரு இளைஞர், சிறுமியர் வீடியோக்களை எடுத்து வைச்சிருந்ததாவும், அவரோட நண்பர்களாலேயே அவரு கொல்லப்பட்ட செய்தி வந்துச்சுல்ல. இதில, ஏக்கப்பட்ட மேட்டர் இருக்குதுங்க்கா....'' என்றார்.

திரைமறைவு வேலை!

ஆர்வமான சித்ரா. ''அப்படியா...?'' என காதுகளை கூர்மையாக்கினாள் மித்ரா.''கொலை செய்யப்பட்ட அன்பு, படிக்கிற சின்ன பொண்ணுக, குடும்ப பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, நம்பற மாதிரி நட்பா பழகுவானாம். அவர்களை, தன்னோட தொடர்புல இருக்க அரசியல் வி.ஐ.பி.,ஸ், தொழிலதிபர்ங்க, அவங்களோட வாரிசுகள்கிட்ட அறிமுகம் செஞ்சு வைச்சு, தப்பான விஷயங்களுக்கு தள்ளிடுவனாம்,''''இதுக்காக, வி.ஐ.பி.,ங்ககிட்ட இருந்து பெரிய 'அமவுன்ட்' வாங்கிக்குவானாம். இந்த விவகாரத்துல சம்மந்தப்பட்ட வி.ஐ.பி.,ங்க எல்லாம், இப்போ 'கிலி'யில இருக்காங்களாம். இதனை விட கொடுமை என்னன்னா, அன்பு கொலை செய்யப்படறதுக்கு ஒரு மாசம் முன், இந்தப்புகார், அவிநாசி மகளிர் ஸ்டேஷனுக்கு போயிருக்கு...''''ஆனா, அதப்பத்தி சரியா விசாரிக்காத, 'ரோச'மான அதிகாரி, அந்தப்புகாரை பெரிசா கண்டுக்கலையாம். ஒருவேளை அவங்க முறையா விசாரித்திருந்தால், இந்த கொலை நடந்திருக்காதுன்னு போலீசே சொல்றாங்கன்னா பார்த்துக்கோ...'' ''எல்லாம் 'கவனிப்பு' தான் காரணமா இருக்கலாம்...'' என்ற மித்ரா, ''வரவர போலீஸ் மேல இருந்த பயமே போயிடுச்சு சித்ராக்கா. பல்லடம் போலீஸ் குவார்ட்டர்ஸ்ல கொஞ்ச நாள் முன்னாடி திருட்டு முயற்சி நடந்துச்சு. அத இன்னும் கண்டுபிடிக்கலை. இப்போ மறுபடியும், அதே மாதிரி போலீஸ் குடியிருப்புல இருந்த உண்டியலை யாரோ துாக்கிட்டு போயிட்டாங்களாம். இத்தனைக்கும் போலீஸ் ஸ்டேஷன் பின்னாடி தான், குவார்ட்டர்ஸ் இருக்குது,'' என அங்கலாய்த்தாள் சித்ரா.

மின் ஊழியருக்கே 'ஷாக்'

''கொஞ்ச நாள் முன்னாடி, ஊரக வளர்ச்சித்துறைல வேல செய்ற, பி.டி.ஓ., துணை பி.டி.ஓ.,க்களுக்கு 'டிரான்ஸ்பர்' போட்டாங்கள்ல'' என வேறு விஷயத்துக்கு தாவிய மித்ரா, ''இதுல, நிறைய குளறுபடி இருக்குன்னு பேசிக்கிறாங்க. கலெக்டரோட நேர்முக உதவியாளரா இருக்க ஒரு ஆபீசர் தான், 'டிரான்ஸ்பர் லிஸ்ட்' ரெடி பண்ணுவாராம்,''''தன்னை 'கவனிக்கற'வங்களுக்கு அவங்க கேட்கற இடத்துல, வீட்டுக்கு பக்கமா 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காங்களாம். மத்தவங்களுக்கு உடுமலை, அங்க, இங்கன்னு ரொம்ப துாரமா 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காங்களாம். 'டிரான்ஸ்பர்' நடைமுறையில, ஆபீசர்ங்க விதிமுறை மீறிட்டாங்கன்னு சொல்லி, அசோசியேஷன்காரங்க, கலெக்டர்கிட்ட 'பெட்டிஷன்' கொடுத்திருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.''இதே மாதிரி மின்வாரியத்திலயும், கணக்கீட்டாளர் 'டிரான்ஸ்பர்' விவகாரத்துல, விதிமுறை மீறிட்டாங்கன்னு பி.எம்.எஸ்.,காரங்க போராட்டம் அறிவிச்சாங்க. அவங்கள சமாதானப்படுத்தின அதிகாரிங்க, பேசி தீர்த்துக்கலாம்ன்னு, சொல்லியிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''ஆபீசர்ஸ், அவங்க அவங்க வேலையை சரியா செஞ்சாங்கன்னா, இந்த மாதிரி பிரச்னையெல்லாம் வராது'' என்ற சித்ரா, ''இப்படி தான், மூலனுார் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல சீருடை அணியாத ஒருத்தரு வண்டிகளுக்கு 'பைன்' போடறாராம். போலீஸ் ஆபீசர்ங்க மாதிரி 'சீன்' காண்பிக்கிறார்ன்னு பேசிக்கிறாங்க. விசாரிச்சுதல அந்த ஊர் காவல்துறைக்கு, ரொம்ப உதவியா இருக்காராம். கட்டப்பஞ்சாயத்து, வசூல்னு....அவங்களுக்கான வேலையை சாமார்த்தியமா செஞ்சு கொடுத்திடறார்ன்னும் பேசிக்கிறாங்க,'' என்றாள்.''ஆபீசர்ன்னு சொல்லவும் தான், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது'' என்ற மித்ரா, ''எஜூகேஷன் சி.இ.ஓ.,வா இருந்தவங்க 'ரிட்டயர்டு' ஆகிட்டாங்கள்ல. அதுக்கப்புறம் நிரந்தரமா சி.இ.ஓ., போடாம, 'இன்சார்ஜ்' தான் போட்டிருக்காங்க,''''அவரும் உடம்பு சரியில்லைன்னு சொல்லி, லீவுல போயிட்டாரு. பக்கத்து மாவட்ட சி.இ.ஓ.,வை தான் 'இன்சார்ஜ்' போட்டிருக்காங்களாம். ரெண்டும் பெரிய மாவட்டம்ங்கறதால, அவருக்கு பணிச்சுமை அதிகம்ன்னு சொல்றாங்க. கூடிய சீக்கிரம் புது ஆபீசர் போடணும்ன்னு, கல்வித்துறைல இருக்கவங்க எதிர்பார்க்கிறாங்க,'' என்றாள்.''சரிங்க அக்கா கிளம்பலாம்'' என மித்ரா சொல்ல, எழுந்தாள் சித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை