முதல் தள கம்பிகள் துருப்பிடிப்பதை தவிர்க்க மெட்டல் ஆக்சைடு பெயின்ட் அடிக்கலாமா?
நாங்கள் வீடு கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. முதல் தளம் கட்டுவதற்கு கம்பிகளை நீட்டி விட்டிருந்தோம். இப்பொழுது அதன் மீது துரும்பு ஏற தொடங்கி விட்டதால், மெட்டல் ஆக்சைடு அடிக்கலாம் என, பெயின்டர் கூறுகிறார். இது சரியான வழிமுறையா? -பழனியப்பன், மாதம்பட்டி. கட்டாயம் 'மெட்டல் ஆக்சைடு' அடிக்க கூடாது. ஜன்னல் கம்பிகள், இரும்பு கதவுகள் மற்றும் கேட்டிற்கு தான் மெட்டல் ஆக்சைடு அடிப்பார்கள். 'ஆன்ட்டி கரோசின் பெயின்ட்'தான் அடிக்க வேண்டும். கடற்கரைக்கு அருகில் வீடு கட்டும் போது, கம்பிகளின் மீது இளம் பச்சை நிறத்தில் பெயின்ட் அடித்திருப்பார்கள்; அதுதான் ஆன்ட்டி கரோசிவ் பெயின்ட். இதனை அடிக்கும்போது கான்கிரீட்டிற்கும், கம்பிக்கும் இடையே பிடிமான வலிமை குறையாது. கம்பியின் மேற்பரப்பில் இதை அடிக்கும் பொழுது, துருவை தடுக்க நல்லதொரு வேதியல் பூச்சாக இருக்கும். கான்கிரீட் போடும் பொழுது, இதனை சுத்தமாக தேய்த்து எடுத்துவிட்டு பயன்படுத்தினால், வலிமை நன்றாக இருக்கும். கவர் பிளாக் என்றால் என்ன? கான்கிரீட் வேலைகளில் கவர் பிளாக்கின் முக்கியத்துவத்தையும் தெளிவாக கூறுங்கள். -லாவண்யா, ராமநாதபுரம். நாம் கட்டும் கட்டடங்களில் புட்டிங், பில்லர், பீம், லிண்டல் சன்சைட் மற்றும் மேற்கூரை அனைத்திலும் கம்பிகளை பயன்படுத்துகிறோம். கம்பி சூரிய ஒளி, மழைநீர் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றால், துரு பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். துருப்பிடிக்காமல் தடுக்க நாம் பயன்படுத்தும் கம்பியை சுற்றிலும், பொதுவாக புட்டிங்காக இருந்தால் அதன் கம்பிக்கு அடிப்பகுதி மற்றும் சைடு பகுதிகளில், 50 மி.மீ., அளவிற்கு கான்கிரீட் கட்டாயம் இருக்க வேண்டும். அதேபோல், பில்லர், பீம், லிண்டல் சன்சைட் மற்றும் மேற்கூரையில் அனைத்து கம்பி களின் அடி மற்றும் சைடு பகுதியில் முறையே, 40, 25, 20 மி.மீ., கான்கிரீட் அமைக்க வேண்டும். அவ்வாறு கம்பியை சுற்றிலும் அமைக்கப்படும் கான்கிரீட்டை, கவரிங் என்று அழைப்பார்கள். அந்த கவரிங்கை மேலே கூறியவாறு, சரியான அளவுகளில் வைப்பதற்கு, கடைகளில் ரெடிமேடாக சிமென்டினால் செய்யப்பட்ட கட்டிகள் விற்கப்படுகின்றன. இதையே கவர் பிளாக் என்று அழைக்கிறோம். எங்கள் வீட்டில் சில நேரங்களில், குளியலறையில் உள்ள எலக்ட்ரிக்கல் பெட்டிகளை தொட்டால் சிறிய அளவில் ஷாக் அடிக்கும் உணர்வு ஏற்படுகிறது. அடிக்கடி வாட்டர் ஹீட்டரில் பிரச்னை ஏற்படுகிறது; இது எதனால்? -சஞ்சய், சுந்தராபுரம். குளியலறையில் பயன்படுத்தும் எலக்ட்ரிக் பெட்டிகளில், 'வாட்டர் புரூப்பிங் ஸ்விட்ச்'களையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வீட்டில் வாட்டர் ஹீட்டர், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது, நாம் சரியான முறையில் எர்த்திங் செய்திருக்க வேண்டும். சரியான எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் ஆலோசனை செய்து, சரியான முறையில் எர்த்திங் அமைத்தால் இதனை தவிர்க்கலாம். தளத்திற்கு டைல்ஸ் பதிக்கும் போது, ஸ்கட்டிங் டைல்ஸ் ஏன் பொருத்த வேண்டும்? -கண்ணன், சின்னியம்பாளையம். ஒவ்வொரு தளத்திற்கும் சுவற்றின் கீழ் இருந்து மேலாக, மூன்று முதல் நான்கு இன்ச் உயரம் 'ஸ்கட்டிங் டைல்ஸ்' ஒட்டப்படுகிறது. இது தரையை தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது அதன் ஈரப்பதம் சுவற்றில் உறிஞ்சப்பட்டு, பெயின்ட் உறிந்து வரும் பாதிப்பை தடுக்கவும், தரையில் உள்ள துாசி மற்றும் குப்பையை சுத்தம் செய்ய, ஈரத்துணி கொண்டு துடைக்கும்போதும், சுவற்றில் கரை படியாமல் இருக்கவும் பயன்படுகிறது. ஸ்கட்டிங் டைல்ஸ் பூச்சு மட்டத்திற்கு பொருத்தும் பொழுது பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கும். எலக்ட்ரிகல் பைப் லைன் இருக்கும் இடத்தில், வெடிப்புகள் வருவதற்கு காரணம் என்ன? அதை எப்படி தவிர்ப்பது? - ரமேஷ், சுங்கம். எலக்ட்ரிகல் பைப் லைன் வரும் இடங்களில், காடி எடுக்கும் பொழுது முடிந்தவரை செங்குத்தாகவோ அல்லது சரிவாகவோ எடுக்க வேண்டும். கிடைமட்டமா க எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு எலக்ட்ரிக்கல் காடி எடுத்து, பைப்லைன் பொருத்திய பிறகு, அதன் மீதும் மற்றும் சுவர் பில்லர் இணையும் இடத்திலும், இப் பொழுது மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய, 4 அல்லது 6 இன்ஞ் அகலம் உள்ள 'பைபர் மெஸ்' வைத்து அதை சிமென்ட் கலவையால் பேக் செய்து, பிறகு பூச்சு வேலை செய்து சரியான முறையில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் நீர் பாய்ச்சும் பொழுது, வெ டிப்புகள் வருவதை தவி ர்க்கலாம். - பொறியாளர் லோ கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).