உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கிரைய பத்திரம் தயாரிக்க சரியான ஆவண எழுத்தரை தேர்வு செய்வது எப்படி?

கிரைய பத்திரம் தயாரிக்க சரியான ஆவண எழுத்தரை தேர்வு செய்வது எப்படி?

சொந்தமாக வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவு முறையாக, பிரச்னை இன்றி நடந்து முடிய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். இதில் பெரும்பாலான மக்கள் ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களையே பிரதானமாக நம்புகின்றனர். ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் தினமும் ஏராளமான பத்திரங்களை கையாள்வதால், விரைவாகவும், துல்லியமாகவும் பத்திரங்களை சரி பார்ப்பார்கள் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களிடம் அதிக நம்பகத்தன்மையுடன் பொது மக்கள் செல்கின்றனர். இதில் உங்கள் சொத்து பரிவர்த்தனையை பதிவு செய்ய ஒரு ஆவண எழுத்தரை தேர்வு செய்யும் போது அடிப்படையாக குறிப்பிட்ட சில விஷயங்களை பார்க்க வேண்டும். உங்கள் பகுதிக்கான சார் பதிவாளர் அலுவலகத்தை ஒட்டி கடை வைத்திருந்தால் போதும் என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து கொண்டு அவரை அணுகுவது நல்லதல்ல.பதிவுத்துறையில் முறையாக உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை மட்டுமே பத்திரப்பதிவு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதனால், பத்திரப்பதிவுக்காக செல்லும் போது, சார் பதிவாளர் அலுவலகம் அருகில் கடை வைத்திருக்கிறார் என்பதுடன் அவருக்கு முறையான உரிமம் உள்ளதா என்று பாருங்கள். பெரும்பாலான சார் பதிவாளர் அலுவகங்களுக்கு நேரில் சென்று அறிவிப்பு பலகையை பார்த்தால் அந்த பகுதியில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் யார் விபரங்கள் தெரியவரும். அதில் ஆவண எழுத்தர்கள் பெயர், உரிம எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் கிடைக்கும். இதை பயன்படுத்தி அங்கு தொழில் செய்யும் ஆவண எழுத்தர்களில் ஒருவரை நீங்கள் அணுகலாம். இதில் பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சில தவறுகளை தொடர்ந்து செய்வதால் பத்திரப்பதிவு பணிகளில் பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, சொத்து வேறு ஊரில் இருக்கும் நிலையில், அதை வாங்குவோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, பழக்கமான ஆவண எழுத்தரை அணுகுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு அணுகுதில் அடிப்படையில் தவறு எதுவும் இல்லை என்றாலும் எதார்த்த சூழலில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும் முன், சொத்தின் மதிப்பு தொடர்பாக தற்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் என்ன என்பது அப்பகுதியில் உள்ள ஆவண எழுத்தருக்கு தான் தெரியும். வெளியூரில் இருப்பவர்களால் இதை மிக துல்லியமாக குறிப்பிட முடியாது. மேலும், சார் பதிவாளர் அலுவலக சூழல் என்ன என்பது அருகில் இருப்பவருக்கு தெளிவாக தெரியும் என்பதால் அவரை பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது. சொத்து வாங்குவோர் இது விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை