உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டுமானம் நீண்டகாலம் நிலைத்து நிற்கணுமா? இதோ... இந்த வழிமுறைகளை படிங்க

கட்டுமானம் நீண்டகாலம் நிலைத்து நிற்கணுமா? இதோ... இந்த வழிமுறைகளை படிங்க

நவீன கட்டுமான துறையில், ரசாயன பொருட்களின் பயன்பாடு தற்போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றை பயன்படுத்துவதால், பல நன்மைகள் கிடைக்கின்றன. இவற்றால் வேலையின் செயல்திறன், பொருள்களின் வலிமை, நீடித்துழைக்கும் தன்மை, நீர் கசிவு தடுப்பு உள்ளிட்ட பலன்களை பெறலாம்.ரசாயன பொருள்களை, நமக்கு தேவையான பயன்பாடுகளை பொறுத்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இந்திய தர கட்டுப்பாடு, IS 9103:1999ன் வரையறைக்கு உட்பட்டு ரசாயன பொருள்களை, தேவையான இடத்தில் முறையான அளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) உறுப்பினர் ரமேஷ்குமார் கூறியதாவது:ஈரப்பதம் மற்றும் சரிவாக உள்ள இடங்களில், கான்கிரீட் இடும் வேலையில் 'பிளாஸ்டிசைசர்' என்ற ரசாயன பொருட்களை கான்கிரீட் உடன் சேர்க்கும் பொழுது, எளிதாக கான்கிரீட் இடுவதற்கு வழிவகுக்கிறது. இவை கான்கிரீட்டில் நீர் - சிமென்ட் விகிதத்தை, 5 முதல் 12 சதவீதம் வரை குறைத்து, தேவையான நிலைத்தன்மை மற்றும் வலிமையை கொடுக்கிறது.பெரிய வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் கான்கிரீட் உபயோகிக்கும் போது, 'சூப்பர் பிளாஸ்டிசைசர்' ரசாயன பொருட்களை பயன்படுத்தலாம். கான்கிரீட் பம்ப் செய்யும் போது சுலபமாக பாயக்கூடிய தன்மையை பெறுவதால், வேலைத்திறன் எளிமையாக்கப்படுகிறது.கட்டடங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது நீர்க்கசிவு. இதனால், கட்டடங்கள் மெல்ல பலவீனம் அடைகின்றன. வீடுகளில் உள்அலங்காரங்கள் பாதிக்கப்படுகின்றன. பெயின்ட் உரிந்து விடுகின்றன. இவற்றையெல்லாம் நாம் வீடு கட்டும் போது சரி செய்ய முடியும்.காரிசன் ஏஜென்ட்ஸ் அரிப்பு தடுப்பான்களை, கான்கிரீட்டில் சேர்ப்பதால் கான்க்ரீட்டிற்குள் உள்ள எக்கு, இரும்பு கம்பிகளை அரிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இவை இரும்பு கம்பிகளை சுற்றி, ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகின்றன.குளோரைடு அயனிகள் ஊடுருவலை தடுக்கின்றன. ரசாயன பொருட்கள் பயன்படுத்தும்போது, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும். அவற்றை சேமித்து வைக்கும் இடங்கள், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.ரசாயன பொருள்கள் சேர்த்த, கான்கிரீட் மாதிரிகளை சேகரித்து முறையான அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசு செயல்படுத்தும் ஆய்வகங்களில் கொடுத்து, அதன் தன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பொறியாளர் துணை கொண்டு, இவற்றை பயன்படுத்துவது, நமது கட்டடங்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்க வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கான்கிரீட் எளிதில் 'செட்' ஆகி விடும்

''வெப்பமான காலநிலை அல்லது நீண்ட துாரத்திற்கு, கான்கிரீட் கொண்டு செல்ல நேரிடும் போது, 'ரிடார்டர்ஸ்' என்ற ரசாயன பொருட்கள் சேர்ப்பதால், கான்கிரீட் செட் ஆகும் காலத்தை நீட்டித்துக்கொடுக்கிறது. இதனால் நமக்கு ஏற்படும் காலதாமதத்தில் இருந்து விடுபடலாம். குளிர்கால நிலை மற்றும் விரைவாக முடிக்க வேண்டிய கான்கிரீட் வேலைகளில், 'ஏக்சலரேட்டர்ஸ்' என்ற ரசாயன பொருள்கள் சேர்ப்பதால், கான்கிரீட் விரைவில் செட் ஆகும். இவை கான்கிரீட்டின் ஆரம்ப வலிமையை மேம்படுத்துகின்றன,'' என்றார் ரமேஷ் குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !