சுவரில் ஈரப்பதம் பிரச்னை; தீர்வு தரும் தார் கோட்டிங்
அஸ்திவாரம் வழியாக ஈரப்பதம் சுவர்களில் ஏறுவதால், பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, அடித்தளத்தில் மண் நிரப்பும் முன் பேஸ்மென்ட் சுவர்களை உள்ளும், புறமுமாக சிமென்ட் கலவையால் பூச வேண்டும்.நீர் நிலைகள் அருகில் இருந்தாலோ, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டாலோ, களிமண் பூமியாக இருந்தாலோ, பூசிய பேஸ்மென்ட் சுவர்களின் மேல், 'வாட்டர் புரூப் கோட்டிங்' அல்லது 'தார் கோட்டிங்' கொடுப்பது நல்லது என்கிறார், 'கொசினா' செயல்பாட்டுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார்.அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...பிட்டுமென் பெயின்ட், கோல் தார் எப்பாக்சி போன்றவை சந்தையில் எளிதாக கிடைப்பதால் அவற்றை பயன்படுத்தலாம். பிறகு வீட்டின் சுவரை கட்டும் முன், பேஸ்மென்ட் சுவரின் மேல் 'டம்ப் புரூப் கோர்ஸ்'(டி.பி.சி.,) இடவேண்டும்.டி.பி.சி.,யை எளிய முறையில் அமைக்க, பேஸ்மென்ட் சுவரின் மேல் ஒரு கெட்டியான பாலித்தீன் சீட்டை விரித்து, அதன்மேல் வாட்டர் புரூபிங் கெமிக்கல் கலந்த கான்கிரீட் கலவையை, 40 முதல் 50 மி.மீ., கனத்தில் இட வேண்டும்.அது நன்றாக காய்ந்தவுடன், மேல் சுவரை எழுப்ப வேண்டும். சுவர்கள் மற்றும் கூரையில் உள்ள விரிசல்களை, சிறந்த 'கிராக் பில்லர்' கொண்டு அடைத்து, அதன் மேல் நீர்புகா பெயின்ட் பூச வேண்டும். கழிப்பறைகளில் இருந்து நீர் கசிவது, பெரும்பாலும் தரை டைல்ஸ் இடையில் இறங்கும் நீரால் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, 3 முதல் 5 மி.மீ., இடைவெளி விட்டு, டைல்ஸ் பதிக்க வேண்டும். அந்த இடைவெளியில் 'எப்பாக்சி கிரவுட்' கொண்டு நிரப்ப வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, தொழில்நுட்பம் நன்கு அறிந்த பொறியாளர்களை கொண்டு வீடு கட்டுவதும், பராமரிப்பதும் நன்று.இவ்வாறு, அவர்கூறினார்.