மகளிர் பெயரில் வீட்டுமனை; ஏராளமாக குவியும் சலுகைகள்
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, யார் பெயரில் பதிவு செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்று தான்.தற்போதைய சூழலில் பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், பெண்கள் பெயரில் சொத்து வாங்குவது பரவலாக அதிகரித்து வருகிறது.ஒரு காலத்தில் வேலைக்கு செல்லாத மனைவி பெயரில் சொத்து வாங்குவதும் பெரும்பாலான குடும்பங்களில் வழக்கத்தில் இருந்தது.இது அந்தந்த குடும்பங்களில் பழக்கம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, அரசு தரப்பிலும், வங்கிகள் தரப்பிலும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பெண்கள் பெயரில் சொத்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இதனால், அரசின் நிதி உதவியை முழுமையாக பெற நினைக்கும் குடும்பங்கள், பெண்கள் பெயரில் சொத்தை பதிவு செய்ய முன்வருகின்றன.இதை தொடர்ந்து தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில் புதிதாக வீடு ஒதுக்கும் போது, சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள மகளிர் பெயரில் தான் உத்தரவு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், மகளிர் இல்லாமல், ஆண் தனியாக அரசு வீட்டை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசு துறைகள்வீடு வழங்கும் போது மட்டும் என்று இல்லாமல், தற்போது பெரும்பாலான வங்கிகள், வீட்டுவசதி நிதி நிறுவனங்களும், பெண்கள் பெயரில் தான் கடன் கொடுக்க விரும்புகின்றன.இதற்காக, சொத்துக்கள் மகளிர் பெயரில் வாங்கும் நிலையில், அதற்கான வீட்டுக்கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.குறிப்பாக, மகளிர் பெயரில் வாங்கும் சொத்துக்கான, வீட்டுக்கடனில் வட்டி விகிதங்கள் கூடுதலாக அளிக்கப்படும். கடன் தொடர்பான பிராசசிங் பணிகளுக்கான கட்டணத்திலும், பெருமளவு தொகை தள்ளுபடி செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.அதே நேரம் மகளிர் பெயரில் வாங்கப்படும் சொத்து தொடர்பான நிர்வாகத்தில், மற்றவர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.