22 ஏப்ரல் 2008: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
சில நேரங்களில், சிலரது வாழ்வில், விதியின் பெயரில், இறைவன் சற்று அதிகமாகத்தான் விளையாடுகிறார். நான் இவ்வாறு சிந்திக்க காரணமிருக்கிறது. ராஜாவுக்கு வயது 45 தான். அதற்குள் இப்படி ஒரு துன்பத்தை இறைவன் கொடுத்திருக்க கூடாது. அவர், தனியார் நிறுவனம் ஒன்றில், குமாஸ்தாவாக பணிபுரிகிறார். ஒருநாள் நண்பரின் உதவியோடு என்னை சந்திக்க வந்தார். சில நேரங்களில் அவரால் நடக்க முடியவில்லை. அதற்காகத் தான் என்னை நாடி வந்தார். பொதுவான, பரிசோதனைகளில் எதுவும் கண்டறிய முடியவில்லை. சந்தேகத்தின் பெயரில் குறிப்பிட்ட சில மருத்துவ பரிசோதனைகளை செய்ததில் ராஜாவிற்கு... ஆமாம், நான் சந்தேகித்தது உண்மையாகி விட்டது. ராஜாவிற்கு 'டெஸ்டிஸ்' புற்றுநோய் இருக்கிறது. இதை, எப்படி ராஜாவிடம் சொல்வேன். புற்றுநோயாளிகளின் ஆயுட் காலம் குறைவு என்பது மக்கள் மத்தியில் உள்ள கருத்தாயிற்றே! சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜாவை அழைத்து, அவரின் உடல்நிலையை பற்றி விளக்கினேன். 'டெஸ்டிஸ்' என்பது ஆணின் இனப்பெருக்க உறுப்பு. இனப்பெருக்க செயல்பாட்டுக்கு, இந்த சுரப்பிதான் முக்கிய பங்காற்றுகிறது. இதுதான், ஆணின் உயிரணுக்களை சுரக்கிறது. ஆண்களுக்கே உரித்தான இந்த சுரப்பி உறுப்பில் ஏற்படும் புற்றுநோயையே, 'டெஸ்டிஸ்' புற்றுநோய் என்கிறோம். இந்த நோய்க்கு பெரிதாக, அறிகுறிகள் ஏதும் இருக்காது. சில நோயாளிகளுக்கு, காரணமே இல்லாமல் விதைகள் வீங்கியிருக்கும். அதற்காக, பரிசோதனைகள் செய்யும்போது, 'டெஸ்டிஸ்' உறுப்பில், புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவரும். 'அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' மூலம் உறுதி செய்யப்படும். மற்ற உறுப்புகளில், புற்றுநோய் பரவியிருக்கிறதா என்பதை அறிய, வயிறு மற்றும் மார்பு பகுதிக்கு சி.டி. ஸ்கேன் தேவைப்பட்டால் செய்யப்படும். பாதிக்கப்பட்ட விதையை, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, அதிலுள்ள கட்டியை 'பயாப்ஸி' எனும் பரிசோதனை செய்து, புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வோம்.தேவைப்பட்டால், 'கீமோதெரபி' சிகிச்சை முறையில், மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மற்றும் கதிரியக்க சிகிச்சையும் கொடுக்கப்படும். இவ்வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது, என்பதற்கு, ஓர் வாழும் ஆதாரம்தான் ராஜா. ஆம்; ராஜாவிற்கு முதலில் அறுவை சிகிச்சையின் மூலம், பாதிக்கப்பட்ட விதையை அகற்றியதோடு, 'கீமோதெரபி' மற்றும் கதிரியக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவையும் முடிந்து ஆரோக்கியமாக, ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றார். இடையில் துன்பங்கள் தந்தாலும், இறைவன் ராஜாவிற்கு பூரண ஆயுளை கொடுத்திருக்கிறார் என்பதில், எனக்கு மகிழ்ச்சியே.- ஜெ.ஜெயக்குமார்பேராசிரியர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை. 98402 56144