30 மார்ச் 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
இன்று தினசரி பத்திரிகையில் வந்த என் பெயரை பார்த்து, என் மனைவி சந்தோஷப்பட்டு கொண்டு, 'ஒரு நோய் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது எளிமையான காரியமா?' என, என்னிடம் கேள்வி கேட்டார்.காரணம், நானும், மருத்துவர் ஜெ. ஸ்ரீநிஷா மற்றும் மருத்துவர் அரவிந்த் ராமநாதன் ஆகியோர் இணைந்து, ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ், மகேஷ், ராஜேஷ் மூவருக்கும், பற்களில் பல, சொத்தை ஆகியிருந்தன. அவர்களது குழந்தைகள் நான்கு பேரின் எச்சிலை ஆராய்ந்த போது, அதற்கான காரணிகள் இருப்பதை கண்டறிந்தோம்.அவர்களை சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு, ஏதோ மருத்துவ ரீதியான பிரச்னை இருந்து, மரபியல் காரணமாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டிருந்தாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சகோதரர்கள் மூவருக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளுக்கும், பற் சொத்தை இருப்பதை கண்டு அதிர்ந்து போய், ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அதில், சகோதரர்களின் எச்சிலில், பற்சொத்தைக்கு காரணமான ஆறு கிருமிகள் இருப்பதை கண்டுபிடித்தோம். வாயின் உட்புறத்தில் ஈறு, பல் இடுக்குகளில் தங்கும் கிருமிகள், பற்சொத்தைக்கு காரணியாக விளங்குகின்றன.'ஸ்டெப்போகாக்கஸ்' மற்றும் 'லக்டோ பஸிலர்ஸ்' ஆகிய இரண்டு பாக்டீரியாக்களும், பொதுவாக மனிதர்களிடம் காணப்படும். 'ஸ்டெப்போகாக்கஸ்' கிருமி, தன் எண்ணிக்கையை பெருக்கும் போது அமிலத்தை வெளியேற்றுவதால், அவை தங்கியுள்ள பற்கள் அரிக்கப்பட்டு, பற்கள் சொத்தையாகின்றன. நாங்கள் செய்த ஆய்வில் 'ரோதியா, ஸெலினோமோ, ஜெமேலா கிரேனுலிக்கடேல்லா, செலினோ மோனாஸ், ஆக்டினோமைசிஸ், கிமோபிலர்ஸ்' போன்ற பாக்டீரியாக்கள் இருப்பதை முதன்முதலாக கண்டுபிடித்தோம். அதிலும் குறிப்பாக, 'ரோதியா மற்றும் ஸெலினோமோனாஸ்' கிருமிகள், ஆக்சிஜன் இல்லாத இடத்தில், பெருகும் திறன் கொண்டவை. சகோதரர்கள் மூவருக்கும், சொத்தையான பற்களை சுத்தம் செய்து, பற்களின் வேரை பாதுகாக்க, வேர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினோம். அவர்களின் குழந்தைகள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, பல் மருத்துவரை சந்தித்து பல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினோம். 'மருத்துவ துறையில், வெற்றிகரமான ஆராய்ச்சிகள் தான் வருங்கால சந்ததிகளை சங்கடமில்லாமல் வாழ செய்யும்' என, என் மனைவியிடம் கூறினேன். என் கருத்து சரிதான் என்பதற்கு அடையாளமாக, என் மனைவி, புன்னகைத்தார். - ராகவேந்திரா ஜெயேஷ்பல் மருத்துவ நிபுணர் பாலாஜி பல் மருத்துவமனை, சென்னை 94980 22215