உள்ளூர் செய்திகள்

பற்கள், தாடைகளின் பாதுகாப்பிற்கு மவுத் கார்டு!

விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகளின் போது, கை, கால்களில் அடிபடுவதை விடவும் முகத்தில் அதிலும் குறிப்பாக தாடையில் அடிபடுவது தான் அதிகம். சிலருக்கு மேல் வரிசை பற்கள் சற்று துாக்கலாக இருக்கும். இவர்களுக்கு முகத்தில் அடிபடும் போது, பல் உடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அதே போன்று சாலை விபத்துகளின் போதும், முகத்தில் அடிபட்டு, பற்கள், தாடை உடைவது தான் அதிகம். நம் நாட்டில், விபத்துகளால் ஒரு வருடத்திற்கு 50 லட்சம் பேருக்கு பற்கள் அடிபடுகின்றன. முழுதும் கால்சியத்தால் உருவான பற்கள் எலும்பை விடவும் பலமானவை. பற்கள் அடிபடும் போது அதைச் சுற்றயுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, தலைவலி உட்பட பல பிரச்னைகள் வருகின்றன.'பல்லு போனால் சொல்லு போச்சு' என்று சொலவடை சொல்வார்கள். பேச்சு மட்டுமல்ல, பற்கள் அடிபட்டால் முகத்தின் அமைப்பே முழுமையாக மாறி விடும். பற்கள், தாடைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் இப்போது தான் புரிய ஆரம்பித்துள்ளது. பற்கள், தாடைகள் பராமரிப்பு, சிகிச்சைக்கென்றே 'ஸ்போர்ட்ஸ் டென்டிஸ்ட்ரி' என்ற பிரத்யேக பிரிவு கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.விளையாடும் போது, முகம், வாய், தாடைப் பகுதி அடிபடாமல் இருக்க, கிரிக்கெட் வீரர்கள் ஹெல்மெட், கால்பந்து வீரர்கள் மவுத் கார்டு (Mouth Guard) போடுவார்கள். இது போன்று, குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பும் போது, அந்தந்த விளையாட்டுக்கு தகுந்த பாதுகாப்பு கவசத்தை அணியப் பழக்க வேண்டும்.தற்காலிகமாக வாங்கி பயன்படுத்தாமல், டாக்டரின் ஆலோசனையை கேட்டு, அவரவரின் முக அமைப்பை அளவெடுத்து, மட்டுமே போட்டால் பாதுகாப்பாக இருக்கும். குழந்தைகள் விளையாடும் போது பற்களில் அடிபட்டால், 'பால் பற்கள் தானே விழுந்து முளைக்கப்போகிறது' என்று அலட்சியம் செய்கிறோம். அடிபட்ட பல்லில் ரத்த ஓட்டம் இல்லாமல் கருப்பாகி விடும். கருத்த, ஓட்டைப் பல்லை, அவர்கள் வயதையொத்த குழந்தை கள் கேலி, கிண்டல் செய்யும் போது மன பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதை வெளியில் சொல்லவும் குழந்தைகளுக்குத் தெரியாது. அடிபட்ட பல் தானாக தனியே விழுந்து விட்டால், பால், உப்புத் தண்ணீரில் பல்லைப் போட்டு, 30 நிமிடங்களுக்குள் டாக்டரிடம் எடுத்துச் சென்றால், அதே பல்லை பொருத்தி விடலாம். பல் அடிபட்டால், உடலின் எல்லா அமைப்புகளும் பாதிக்கப்படும். சாப்பிட, மெல்ல முடியாது. இதனால் சத்து குறைபாடு வரலாம்.சில நேரங்களில் பாதி பல் மட்டும் உடைந்தால், ரத்த ஓட்டம் இல்லாததால் கருப்பாகி விடும். ஆனால், சமயங்களில் வலி இருக்காது. இதை கவனிக்காமல் விட்டால், சிலருக்கு, நாளடைவில், பல்லின் மேல் ஈறில் உள்ள எலும்பில் நீர்க்கட்டி போன்று உருவாகும். புண் ஆறும் போது அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு, மற்ற பற்களும் பரவும். முகம் வீங்கும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது இதய வால்வுகள் தான். மூளை, நுரையீரல், உணவுக் குழாய்,என்று எந்தப் பகுதிக்கும் தொற்று பரவலாம்.பற்களால் உள்ள தொற்றல் தோள்களில் வலி, கேட்ராக்ட் பிரச்னை வரும் வாய்ப்பும் உள்ளது. குழந்தைப் பருவத்தில் இருந்தே பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். இதன் அவசியத்தை குழந்தைகளின் பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சொல்கிறோம். பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று இலவசமாக பரிசோதனையும் செய்கிறோம்.டாக்டர் ஹெச்.தமிழ்செல்வன், டீன், ஸ்ரீராமசந்திரா பல் மருத்துவக் கல்லுாரி, சென்னை044-45928000dean.dental@sriramachandra.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்