உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய பழம் என்றால் அது அத்திப்பழம்தான்

'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரை சந்திக்க வேண்டிய தேவையிருக்காது' என்பர். ஆனால் ஆப்பிளையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது, அத்திப்பழம். பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும் ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாக பழுத்து உதிரும் நிலையில், இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களை, தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி, சிறிது கந்தகப்புகை காட்டி, பின்னர் வெயிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாக மாற்றி, நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள் கொண்டவை என்றாலும், பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியை காட்டிலும் சீமை அத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை. அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நன்கு சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றி, சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி, குடலை மிருதுவாகச் செய்கிறது. தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பலம் பெறும். மலச்சிக்கலை நீக்க, உணவுக்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க, 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க, அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின், தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பருமன் கிடைக்கும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கிறது. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஆய்வுகள் கூறுகின்றன. இதைத் தவிர, வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு. சீமை அத்திப்பழம், வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை, தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோல் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதை பவுடராக்கி பன்னீரில் கலந்து, வெண் புள்ளிகள் மீது பூசலாம். வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோல் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்