உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்...கொட்டும் நிம்மதி! - சூரிய ஒளி மட்டுமே நிரந்தர தீர்வு!

இருபது வயதில் துவங்கி, 90 வயது வரை, அனைவரும் சொல்லும் பிரச்னை, காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை; உடம்பு வலிக்கிறது; எந்த இடம் என்று கூட குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை; இங்கே அங்கே என்று உடம்பு முழுவதும் வலிக்கிறது என்பது தான்.பொதுவான பரிசோதனைகளுக்குப் பின், ரத்தப் பரிசோதனை செய்தால், விட்டமின் - டி குறைபாடு இருக்கிறது. 1 மி.லி., ரத்தத்தில், 30 'நேனோ' கிராம் என்ற அளவில், விட்டமின் - டி இருக்க வேண்டும்; ஆனால், பெரும்பாலும், 10 'நேனோ' கிராமிற்கும் குறைவாகவே உள்ளது.காலை எழுந்ததில் இருந்து, இரவு துாங்கும் வரை, 'ஏசி' யிலேயே இருக்கிறோம்; வெயில், உடம்பில் படுவதேயில்லை. தினசரி தேவையான, விட்டமின் - டி சத்து உற்பத்தி ஆவதற்கான, இயற்கையான ஒரே வழி, சூரிய ஒளி மட்டுமே. காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம், வெயில் நன்றாக உடலில் படும்படியாக இருந்தால் மட்டுமே, விட்டமின் - டி உடலுக்கு கிடைக்கும்.சூரிய ஒளியில் நிற்கும் போது, அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள், தோலில் பட்டு, தோல் தன்னிச்சையாக, விட்டமின் - டியை உற்பத்தி செய்கிறது. அது, ரத்தத்தின் வழியே உடலுக்கு சென்று, கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்பு சத்து உற்பத்தி ஆகி, பற்கள், எலும்புகளில் படிகிறது. எவ்வளவு தான் கால்ஷியம் மாத்திரைகள் சாப்பிட்டாலும், சூரிய ஒளியில் இருந்து, இயற்கையாக தோல் உற்பத்தி செய்யும் விட்டமின் - டிக்கு இணை எதுவும் இல்லை.மருத்துவ ஆலோசனைக்கு வரும் பெண்கள், 'தினமும் இரண்டு யூனிட் கால்ஷியம் சாப்பிடுகிறேன்; அப்படியும் கை, காலெல்லாம் வலிக்கிறது' என, சொல்கின்றனர். 'வெயிலில் நடப்பீர்களா?' என்றால், 'வெளியில் செல்வதேயில்லை' என்பர். வெயிலில் போய் நின்றால் தான், கால்ஷியத்தின் முழுமையான பலன் கிடைக்கும்.விட்டமின் - டி குறைபாடுடன், 90 வயது முதியவர் வந்தார். அவரால் நடக்க முடியாத காரணத்தால், தினமும் காலையில், 30 நிமிடங்கள், நன்கு வெயில் உடலில் படும்படி, நாற்காலியில் உட்காரச் சொன்னேன்; பிரச்னை எளிதாக சரியாகி விட்டது.டாக்டர் வி.எஸ்.நடராஜன்,முதியோர் நல சிறப்பு மருத்துவர்,சென்னை.044 26412030


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !