டாக்டரின் டைரி குறிப்பு
12, ஜனவரி, 2016 காலை, 8:00 மணி இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அவசரமாக என்னை நோக்கி வந்த, 'டியூட்டி' நர்ஸ், நினைவிழந்த நிலையில் குழந்தை ஒன்று, அவசரப் பிரிவில் இருப்பதாக தகவல் சொன்னார்; உடனடியாக சென்று பார்த்தேன். குழந்தையை படுக்க வைத்திருந்த கட்டிலின் அருகே பதற்றத்துடன் காத்திருந்த குழந்தையின் தந்தை, 'டாக்டர் என் குழந்தை நிகிதா; ஆறு வயது. திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்' என்றார். சொல்லும் போதே, கண்களில் நீர் கசிந்து கொண்டிருந்தது அவருக்கு. 'குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததா?' என்றேன்; 'இல்லை' என்றார். 'பிறந்தவுடன் வலிப்பு ஏதும் வந்ததா?' என்று கேட்டேன்; 'அப்படி எதுவும் இல்லை சார்' என்றார்.குழந்தையை பரிசோதித்த போது உடல் சற்று வியர்த்திருந்ததே தவிர, இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாம் சீராகவே இருந்தது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தொற்றாத பல உடல் பிரச்னைகள் குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதனால் உடனடியாக, ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கச் சொன்னேன். நான் எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு, என்னை கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிறந்து, 28 நாட்கள் வரை உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு, சர்க்கரையின் அளவு, ஒரு டெசி லிட்டருக்கு, 45 மில்லி கிராம் என்றளவில் இருக்க வேண்டும். ஒரு மாதம் முதல், 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 54 மி.கி / 1 டெ.லி., எனவும், 12 வயதிற்கு மேல், 60 மி.கி / டெசி.லி., எனவும் இருக்க வேண்டும். ஆனால் நிகிதாவிற்கு, 20 மி.கி., என்றளவில் மிகக்குறைவாக இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து, தேவையான மருத்துவ சிகிச்சையை உடனடியாகச் செய்தேன். அடுத்த, 15 நிமிடங்களில் குழந்தைக்கு மயக்கம் தெளிந்து நினைவு திரும்பியது. பிறந்தவுடன் சர்க்கரை நோய் பிரச்னை இருந்திருந்தால், அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே இருந்திருக்கும். நிகிதா விஷயத்தில் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பதால், 'வீட்டில் யாருக்காவது சர்க்கரை நோய் உள்ளதா?' என்றவுடன், நிகிதவின் பாட்டி தனக்கு இருப்பதாகச் சொன்னார். அதோடு சற்று தயங்கியபடியே, 'இன்று காலை, மாத்திரை போடுவதற்காக கட்டில் அருகில் வைத்த இரு மாத்திரைகளை காணவில்லை' என்றார். இயல்புநிலைக்கு திரும்பியிருந்த குழந்தையிடம், 'காலையில என்ன சாப்பிட்டே பாப்பா?' என்று கேட்டேன். கொஞ்ச நேரத்திலேயே என்னோடு சிநேகமாகிவிட்ட குழந்தை, உற்சாகமாக, 'இரண்டு இட்லி, அப்புறம் பாட்டி கட்டில்ல வச்சிருந்த மிட்டாய்' என்றது.சில மாதங்களுக்கு முன், கர்ப்பிணியான தாய், தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த மாத்திரைகளை, நிகிதா போலவே மிட்டாய் என்று நினைத்து சாப்பிட்ட குழந்தை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் எவ்வளவு முயன்றும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தி, என் நினைவிற்கு வந்தது.குழந்தைகளுக்கு சம்பந்தமில்லாத பொருட்களை, அவர்களின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற விதி, ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றில், 'கீப் அவே பிரம் சில்ரன்' என அச்சிடப்படுகிறது, பெற்றோர் இதை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.எஸ்.நூர்தீன்குழந்தைகள் நல மருத்துவர், அரசு பொது மருத்துவமனை, ராஜபாளையம்.04563 - 225935