டாக்டரின் டைரி குறிப்பு
ஜூன் 6,2016: நளினி சாப்பிட்டு, 10 நாட்களாகி விட்டதாம்; பேசக்கூட முடியவில்லையாம். வெறும் நீராகாரமாக தான் சாப்பிட்டு வருகிறாராம். என்னை சந்திக்க வந்த அன்று மிகவும் சோர்வாக காணப்பட்டார். அருகிலிருந்த கணவரிடம், 'என்ன பிரச்னை?' என்று கேட்டபோது, 'மனைவியால் பேச முடியவில்லையென்றால், கணவன் சந்தோஷப்படத் தானே செய்வான்' என்று ஜோக்கடித்தவரிடம், 'சரி பிரச்னை என்னவென்று கூறுங்கள்' என்றேன் நளினியிடம். 'டாக்டர், 10 நாட்களாகப் பல் வலி, இடது பக்க தாடையில் கீழ் வரிசையில், ஞானப்பல் (wisdom teeth) வளர்கிறது. அது நேராக வளராமல், ஈறினை கிழித்துக் கொண்டு வளர்வதால், ஈறு வீங்கி விட்டது. அந்த இடத்தில் சரியாக பிரஷ் செய்ய முடியவில்லை' என்றார். இடது பக்கம் எந்த உணவையும் மென்று சாப்பிட முடியாததால், சிரமத்தை அனுபவித்து இருக்கிறார். சில நாட்களாக வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அருகிலிருந்த பல் மருத்துவரிடம் சென்று, ஆலோசனை கேட்டிருக்கிறார். அவரும், 'இந்த பல் குறுக்காக வளர்வதால், இதை உடனடியாக எடுக்க வேண்டும். இதனால் பாதிப்பேதும் வராது'. 'அறுவை சிகிச்சை செய்ய வேறு மருத்துவரை வரவழைக்க வேண்டும்; யோசித்து சொல்லுங்கள்' என்றிருக்கிறார். நளினி இரண்டாவது ஆலோசனை பெற, என்னிடம் வந்தார். நான் ஸ்கேன் செய்து பார்த்ததில், நளினியின் பிரச்னை தெளிவாகப் புரிந்தது. சொல்லப் போனால் அது பெரிதாக பயப்படும்படியான பிரச்னையே அல்ல. இடது பக்கம் கீழ் தாடையில் வளரும் பல், சரியாக வளராததால் இடது பக்க மேல் தாடையில் முற்றிலுமாக வளர்ந்த பல் கீழ் தாடையிலுள்ள ஈறுகளை அழுத்தியிருக்கிறது; இதனால் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, வலி ஆரம்பித்து இருக்கிறது. இது பல் வலியே அல்ல; ஈறுகளில் ஏற்பட்ட வலியே அது. இதற்கு தற்சமயம் இடது பக்கம் மேல் தாடையிலுள்ள கடைவாய் பல்லை சிறிதளவு தேய்த்து விட்டேன். காரணம், கீழ் தாடையில் கடைவாய் பல் முற்றிலும் வளராததால் தான், ஈறுகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கீழ், மேல் தாடையில் பற்கள் இரண்டும் கடிக்கும் அளவிற்கு சீராக வளர்ந்துவிட்டால் இப்பாதிப்பு ஏற்படாது அல்லது கீழ் தாடையில் பாதிக்கப்படும் ஈறினை, சிறிதளவு வெட்டிவிட்டால் போதும். தேவையிருந்தால் மட்டுமே பிரச்னைக்குரிய பல்லை எடுக்க வேண்டியதிருக்கும். பற்கள் எல்லாம் எலும்புகளின் பிடிமானத்தில் இருப்பதால், எலும்புகளை சிறிதளவு வெட்டிய பின்பே பல்லை எடுக்க முடியும். அப்படி வளராத பல்லை எடுப்பதால், காயம் ஆறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆகலாம். அதுவரை சரியாக பேச முடியாது சாப்பிட முடியாது. நளினிக்கு பிரச்னை தீர்க்கப்பட்டது. தேய்த்துவிட்ட பல் மீண்டும் வளர ஆரம்பித்து பிரச்னை வந்தால் மட்டுமே, அதை எடுக்க வேண்டியதிருக்கும். ஈறுகளில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு, சில மருந்துகளை எழுதி கொடுத்தேன். இனி நளினி சந்தோஷமாக இருப்பார்.டாக்டர் பாஸ்கர்பல் மற்றும் ஈறுகள் சிறப்பு நிபுணர் 98706 68529