டாக்டரின் டைரி குறிப்பு
ஜனவரி 2, 2016: இந்தப் புத்தாண்டில், என்னென்ன புது மருத்துவ முறைகள் வரவிருக்கின்றன என்பது பற்றி, என்னுடைய சக நண்பர் மருத்துவர் முகிலிடம் பேசினேன். அப்போது, என்னை சந்திக்க, ஒரு நோயாளி வந்திருப்பதாக நர்ஸ் கூறியவுடன் நண்பர் விடைபெற்றார். கிராமத்திலிருந்து வந்திருந்த அவர், ரொம்ப இயல்பாக தன் பிரச்னையை கூறினார். நான் விவசாயி; என் பெயர் கோபால். விதை நெல் வாங்க சென்னை வந்தேன். அப்படியே உங்களையும் பார்க்க வந்தேன் என்றார். கால், தொடை பகுதியில் தாங்க முடியாத வலி இருப்பதாக கூறினார். ஏற்கனவே சி.டி., மற்றும் எம்.ஆர். ஐ., ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வைத்திருந்தார். அதில், நான் தெரிந்து கொண்ட விஷயம், கால், தொடைகளில் இருக்கும் லேட்ரல் மற்றும் கொட்டேனியஸ் எனும் நரம்புகளின் அழுத்தத்தினால் தான், கால் தொடைகளில் வலி இருக்கிறது. இதுபோன்ற பாதிப்பு வருவது மிகவும் அரிது என்பதால், காரணத்தை தெரிந்து கொள்ள, அவரது பழக்க வழக்கங்கள் குறித்து, அவரிடம் பல கேள்விகள் கேட்டேன் அப்போது அவர், எப்போதும் வேட்டி, சட்டை அணிவேன் என்றார். வேட்டி அணியும் போது, அவிழாமல் இருப்பதற்கு பெல்ட் அணிவதாக கூறினார். உடனே பெல்ட்டை கழற்றி, அவரது வேட்டியை தளர்த்தி கட்டச் சொன்னேன். இப்போது வலி தெரியவில்லை என்றார். மருத்துவராக என் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். பின் சி.டி., ஸ்கேன் பரிசோதனையில், கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும், 'ரோபோடிக் அசிஸ்டென்ஸ்' கருவிக்கு எந்த இடத்தில் அழுத்தம் இருக்கிறது என்ற தகவல் வந்துவிடும். பின், அழுத்தம் கொடுக்கும் நரம்புகளுக்குள் அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்தை, ஊசியின் மூலம் செலுத்தி, அவரது பிரச்னையை சரிசெய்தேன். கோபால் என்ன தான் பாரம்பரிய உடையை அணிந்தாலும், அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தனக்குத்தானே பிரச்னையை தேடிக் கொண்டார். இப்பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு, நாம் உடுத்தும் உடை முதலில் சவுகரியமாக இருக்க வேண்டும். பிறகுதான் அழகு எல்லாமே.கோபாலுக்கு சிகிச்சை முடிந்த அன்றே, கல்லுாரி மாணவி பிரீத்தி, இதே பிரச்னையோடு வந்தார். விசாரித்ததில், அவர் மிகவும் இறுக்கமான பென்சில் பிட் எனப்படும் ஜீன்ஸ் பேன்ட்டை விரும்பி அணிவதாக கூறினார். அவருக்கும், கோபாலுக்கு செய்த சிகிச்சை முறையை செய்து, பிரச்னையை சரிசெய்தேன். நாம் உடுத்தும் உடையால் அழகாக, தன்னம்பிக்கையுடன் இருக்கலாம். ஆனால், அணியும் உடையால், நம் உடலுக்கு பிரச்னைகள் வரக்கூடாது என்றேன். இன்று, பல இளைஞர்கள் மாடர்னாக உடை அணிகிறேன் என்று, பாதிப்புகள் ஏற்படுத்தும் விதமாக ஆடை அணிகின்றனர் என்பதற்கு, பிரீத்தி ஒரு உதாரணம்.ர.மதன்குமார்,வலி நிவாரண சிகிச்சை சிறப்பு நிபுணர்குளோபல் ஹெல்த் சிட்டி96007 59402