காய்ச்சலுடன் ஆர்த்ரைடிசுக்கு சினேக, கஷாய வஸ்தி சிகிச்சை
பல வகையான காய்ச்சல்கள் கபத்தாலும், வாயுவாலும் ஏற்படுகின்றன. கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, டைபாய்டு காய்ச்சல்களும் இச்சமயத்தில் ஏற்படும். மூட்டுகளை பாதிக்கும் வாத காய்ச்சலான சிக்குன் குனியாவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிக்குன் குனியா வந்தால், 3 - 5 நாட்களில் காய்ச்சல் சரியானாலும், மூட்டுகளில் ஏற்பட்ட அழற்சியால், மூட்டு வலி தொடர்ந்து பல மாதங்கள் வரையும் இருக்கும். ஏற்கனவே ஆர்த்ரைடிஸ் எனப்படும் முழங்கால் மூட்டு வாத பாதிப்பு இருந்தால், வலி மேலும் அதிகமாகலாம். ஆயுர்வேத- சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மட்டுமல்லாமல் மூட்டு வாதத்திற்கும் சேர்த்தே சிகிச்சை முதல் நாளிலிருந்து செய்வோம். அப்படி செய்தால் மட்டுமே முழுமையாக பலன் கிடைக்கும். மாறாக, அறிகுறிகளை வைத்து வெறும் வலி நிவாரணிகளையோ, காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை மட்டுமே கொடுத்தால், காய்ச்சல் சரியாகி விடும்; ஆனால் மூட்டு வலி போகாது.காய்ச்சல் சரியான பின், முழங்கால், மூட்டு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு வருபவர்களில், காய்ச்சல் காரணமாக மட்டும் முழங்கால் வலி இருந்தால், மருந்துகள் சாப்பிடக் கொடுத்து, முழங்கால் மூட்டுகளில் எண்ணெய் தடவி கிழி ஒத்தடம் தரும் போது, 2 - 3 வாரங்களில் முழங்கால் வலி முழுமையாக சரியாகி விடும். ஆர்த்ரைடிஸ் பாதிப்பில் முழங்காலில் தாக்குதல் ஏற்பட்டு எலும்பு மஜ்ஜை பலவீனமாக இருந்தால், பஞ்சகர்மா சிகிச்சை தேவைப்படும். குறிப்பாக பஞ்சகர்மா சிகிச்சையில் ஒன்றான வஸ்தி செய்யப்பட வேண்டும். இதில் தன்வந்திர தைலம், ஷீரபலா தைலம் உட்பட பல தைலங்கள் சேர்த்து செய்யப்படும் சினேக வஸ்தியை முதல் நாளிலும், தேன், எண்ணெய், சதகுப்பை, இந்துப்பு, பல வேர்கள் சேர்ந்த கஷாயங்கள் சேர்த்து தயார் செய்த கஷாய வஸ்தியை அடுத்த நாளில் சிகிச்சை தருவோம். இந்த இரு வகை வஸ்திகளையும் எட்டு முறை தர வேண்டியிருக்கும்.பிரச்னை தீவிரமாக இருந்தால் உள் நோயாளியாக இருந்து வஸ்தி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் வெளி நோயாளியாகவே சிகிச்சை பெறலாம். தனி நபரின் உடல் தன்மைக்கு ஏற்ப, தேர்வு செய்யப்படும் மருந்துகளை பொருத்தும் உள்நோயாளியா, வெளி நோயாளியா என்பதை முடிவு செய்ய வேண்டும். காய்ச்சலால் ஏற்பட்ட முழங்கால் வலியை மருந்தால் சரி செய்ய முடியாத நிலையில், பாதித்த திசுக்களை சரி செய்து, 100 சதவீதம் குணப்படுத்த வேண்டிய நிலையில் வஸ்தி சிகிச்சை செய்வோம். ஏற்கனவே ஆர்த்ரைடிஸ் இருப்பவர்களுக்கு வஸ்தி செய்வது மிக்க பலன் அளிக்கும். சீந்தல் கொடி, சித்தரத்தை சேர்த்த, சித்தா முட்டி சேர்த்த கஷாயங்கள் நல்ல பலனை தரக்கூடியவை.டாக்டர் சுதீர் அய்யப்பன், டாக்டர் மீரா சுதீர், சென்னை 99623 50351, 86101 77899