உறுதி செய்யப்பட்ட உயிர் பாதுகாப்பு!
கொரோனாவிற்கு, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' என்ற இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. இதில், எதை போட்டால் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று, பெரிய விவாதமே நடக்கிறது.ஒவ்வொரு தடுப்பூசியும் இத்தனை சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு தரும் என்று, உறுதி செய்யப்பட்டு உள்ளது.கொரோனா வைரசிலேயே நிறைய வகைகள் உள்ளன. முதலில் உருவான வைரஸ், அதிலிருந்து மரபியல் மாற்றம் ஆன வைரஸ், தென் ஆப்ரிக்காவில் ஒரு வித வைரஸ், இங்கிலாந்தில் வேறு ஒன்று, அமெரிக்காவில் வேறு, நம் நாட்டில் வேறு. இப்படி, நாட்டுக்கு நாடு கொரோனா வைரசின் அமைப்பில் வேறுபாடு உள்ளது; பல நுாறு முறை, மரபியல் மாற்றமும் அடைகிறது.தடுப்பு மருந்து கண்டுபிடித்த போது இருந்த வைரசில் இருந்து, தடுப்பு மருந்து இத்தனை சதவீதம் பாதுகாப்பு தரும் என்று சொல்ல முடியும். ஆனால், ஒவ்வொரு முறை மரபணு அமைப்பில் மாற்றம் அடைந்த வைரசிற்கு எதிராக, எந்த அளவு பாதுகாப்பு என்று சொல்வது கடினம்.ஒரு தடுப்பூசி, ஒரு வகை கொரோனாவிற்கு பாதுகாப்பாக இருந்தால், மற்றதுக்கு பாதுகாப்பு இல்லாமலும் போகலாம். கல்லை எறியும் போது, அது எங்கிருக்கிறது என்று தெரியும். விழுந்த இடத்திலேயே கல் இருந்தாலும் இருக்கும். இடத்தை உறுதியாக சொல்ல முடியும். எறிந்த இடத்தில் இருந்து, கல் நகர்ந்து கொண்டே இருந்தால், எங்கிருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?நகரும் கொரோனாவைத் தான், இலக்கு வைத்து துரத்தி வருகிறோம். அதனால், தடுப்பூசி எந்த அளவு பாதுகாப்பு தரும் என்று ஆராய்வதை விட, நம் கண் முன் அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்ட, இரண்டு தடுப்பூசிகள் உள்ளன.இரண்டு தடுப்பூசிகளில் எதைப் போட்டுக் கொண்டாலும், உயிரிழப்பை முழுமையாக தவிர்க்க முடியும் என்று உறுதியாக கூற முடியும். 'முதல் டோஸ் போட்டதில் இருந்து, 90 நாட்களுக்கு பின், கொரோனா வைரசால் உயிர் சேதம் இல்லை; கொரோனா பாதிப்பு வருவது, 76 சதவீதம் குறைகிறது' என்று, ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.'இறந்த வைரசில் இருந்து தடுப்பு மருந்து தயாரித்தால் மட்டுமே, வீரியம் மிக்கதாக இருக்கும்' என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. போலியோ தடுப்பு மருந்து, உயிருடன் உள்ள வைரசில் இருந்த தயாரித்தது தான். போலியோவை முற்றிலும் ஒழிக்கவில்லையா... அதே போல, ரூபெல்லா, பொன்னுக்கு வீங்கி, அம்மை ஆகிய மூன்று வைரஸ் தொற்றுக்கு போடப்படும் முத்தடுப்பூசியும், உயிருள்ள வைரசில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.உயிருள்ள வைரசா, இறந்த வைரசா என்பதை விட, தடுப்பூசி எதற்கு போடுகிறோமோ, அதற்கான பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதே முக்கியம்.இந்த இரண்டு தடுப்பூசியிலும், கொரோனா வைரசில் இருந்து உயிருக்கு பாதுகாப்பு உள்ளது. தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரம், அதிகமான மக்களுக்கு போடுகிறோமோ, அந்த அளவு வைரசின் வீரியம் பரவுவது குறையும். டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்,தொற்று நோய் தடுப்பு மருத்துவர்,குளோபல் மருத்துவமனை, சென்னை97898 41925