ஆகஸ்ட் 21: 2015 ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு
ரவிக்கு வயது, 40. நல்ல திடகாத்திரமான உடம்பு. அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணிபுரிகிறார். ஓய்வு நேரத்தில் கூட, அவருக்கு சும்மா இருக்கப் பிடிக்காது. அதனால், பகுதி நேர வேலையும் செய்து வந்தார். திடீரென, தன் உடல் நலத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக உணர்ந்தார். காரணம், அவருக்கு ஏற்பட்ட அதிகப்படியான மூச்சுத்திணறல்.கல்பாக்கத்தில் உள்ள பொது மருத்துவர் ஒருவரிடம் சென்றார். இதய செயல்பாடு சீராக இருக்கிறதா என்பதை சோதிக்க, 'எக்கோ' எனப்படும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இதயத்தில் உள்ள, 'மைட்ரல்' எனப்படும் வால்வில், ரத்தக் கசிவு உள்ளது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள, என்னை சந்திக்க வந்தார். மைட்ரல் வால்வில் ஏற்பட்டிருக்கும் ரத்தக் கசிவை, இரண்டு முறைகளில் சரி செய்யலாம். ஒன்று, மைட்ரல் வால்வில், பாதிப்படைந்த திசுக்களை சீர் செய்வது; மற்றொன்று, மைட்ரல் வால்வுகளை முழுமையாக மாற்றுவது. முதல் நிலை சிகிச்சையில், நோயாளிக்கு சாதகமாக நிறைய அம்சங்கள் உள்ளன.காரணம், நோயாளியின் சொந்த திசுக்களையே சீர் செய்வதால், மறுமுறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது; இதய செயல்பாடும் நன்றாக இருக்கும். செயற்கையாக மைட்ரல் வால்வை மாற்றும்போது, 'ஆன்ட்டி கோயாகுலேஷன்' எனும் ரத்த உறைவு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ரத்தம் அதன் தன்மையை விட, சற்றே இலகுவான நிலையில் இருப்பதற்கு, இம்மாத்திரை தேவைப்படுகிறது.ஆன்ட்டி கோயாகுலேஷன் மருந்தை, வாழ்நாள் முழுவதும், ஒரே அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு, அடிக்கடி ரத்தப் பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், இதயத்திற்கு செல்லும் ரத்தம் இறுகி, வால்வுகளில் ரத்தம் உறைந்து விடும். ரத்த உறைவு ஏற்பட்டால், பக்கவாதத்துக்கு வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், ஆன்ட்டி கோயாகுலேஷன் மாத்திரைகளை அதிகளவில் எடுத்தால், ரத்தம் நீர்த்துப் போய், உடலுக்குள்ளேயோ அல்லது உடலுக்கு வெளியேவோ, எங்கு வேண்டுமானாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலை ஏற்பட்டால், நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக மாறும். நோயாளியின் பழுதடைந்த மைட்ரல் வால்வை சீர்செய்ய, இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ரவிக்கு, நடுத்தர வயது என்பதால், இதய நுண்துளை அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தி, 6 செ.மீ., அளவில் மிக மெல்லிய துளையிட்டு, மைட்ரல் வால்வை சீர் செய்தேன். மூன்று வாரங்களில், ரவி பழைய நிலைக்கு திரும்பியதோடு, பணிக்கும் சென்றுவிட்டார்.மேலை நாடுகளில் மட்டுமே செய்யக்கூடிய அறுவை சிகிச்சை இது. தற்போது, இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே, நுண்துளை அறுவை சிகிச்சை முறையில், இதய வால்வுகளை சரி செய்கின்றனர். அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் அடைவதோடு, இறைவனுக்கு நன்றியும் சொல்கிறேன். எம்.எம்.யூசுப், நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.82206 69911