ஆயுர்வேத மருத்துவம்: அனைத்திற்கும் தோஷமே காரணம்
ஆயுர்வேத மருத்துவம், வெறும் நோயின் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாகக் குணப்படுத்தாமல், நோயின் அடிப்படைக் காரணத்தைக் களைந்து, வியாதியையும் குணப்படுத்துகிறது. நோயாளிகளைத் தலையிலிருந்து, கால் வரை அங்கம் அங்கமாகப் பிரித்துப் பார்க்காமல், உடல் முழுவதையும் ஒன்றாகக் கருதி, சிகிச்சை செய்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் சில முக்கிய அம்சங்களைச் சற்று கவனிப்போம்.
ஆயுர்வேதத்தில், எல்லா நோய்களுக்கும் சிகிச்சை உண்டு. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை தான் ஆரோக்கியம் என்பதே, ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம். நோய் என்பது, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத் தாழ்வால் தோன்றும். இதையே வள்ளுவர், 'மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலாவெண்ணிய மூன்று' என விளக்கியுள்ளார்.ஆகவே, சிகிச்சை என்பது, தோஷங்களை மீண்டும் சம நிலைக்குக் கொண்டு வருவதேயாகும். தோஷங்கள் சம நிலையில் இருக்கின்றனவா அல்லது எந்த தோஷம் சீற்றமடைந்திருக்கிறது என்பதை, நாடியின் மூலமாகவும், நோயின் அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.ஆயுர்வேதத்தில், உணவுப் பொருட்களின் குணங்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உணவு மிகவும் இன்றியமையாதது.
நாம் உட்கொள்ளும், அறுசுவை உணவுப் பண்டங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தோஷத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கிறது. எனவே சிகிச்சையில், 'பத்தியம்' ஒரு மிக முக்கியமான இடத்தைப் பெறும். உதாரணமாக, வயிற்றில் வலி (சூலம்) வாயுவின் சீற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு, வாயுவைச் சீற்றமடையச் செய்யும் உணவுகளைத் தவிர்த்து, உகந்த உணவை உண்பது அவசியம். ஆயுர்வேத மருந்துகள், நோயை உடனடியாகக் குணப்படுத்துமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. நோய் தோன்றிய உடனே, தகுந்த சிகிச்சை அளித்தால், நிச்சயமாகச் சட்டென்று குணமாகும். பல வருடங்கள் நோயால் அவதிப்பட்டு விட்டு, நாள்பட்ட வியாதிக்கு உடனே குணத்தை எதிர்ப்பார்ப்பது, அரசமரத்தைச் சுற்றி வந்து, அடி வயிற்றைத் தடவுவதைப் போன்றது.படித்தவர்கள் கேட்கும் மற்றுமொரு கேள்வி, இன்றைய சமுதாயத்தில், புதுப் புது நோய்கள் தோன்றுகின்றன. ஆயுர்வேதம் மிகப் பழைய முறை. இந்த முறையில், புது நோய்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என்பது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் பதில், எல்லா நோய்களுக்கும் உடலின் தோஷங்களான வாதம், பித்தம், கபங்கள் தான் அடிப்படைக் காரணம். புதிதாகத் தோன்றும் நோய்களுக்குக் காரணம் இவையேதான். எனவே, தோஷங்களின் சீற்றத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்.
-டாக்டர். பி.எல். டி.கிரிஜா, சஞ்சீவனி, ஆயுர்வேத யோகா மையம், சென்னை.