உள்ளூர் செய்திகள்

சுறுசுறுப்பாய் இருங்கள்: இதயம் பாதுகாப்பாய் இயங்கும்

'சுறுசுறுப்பாய் இருங்கள்: இதயம் பாதுகாப்பாய் இயங்கும்' உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி முக்கியம்'தற்போது நம் வாழ்க்கை முறை மாற்றமே, இதயம் சார்ந்த பல்வேறு நோய்களை உருவாக்கி விடுகிறது. உணவு கட்டுப்பாடு, எப்போதும் சுறுசுறுப்பு, நடை பயிற்சி என இருந்தால், இதயம் பாதுகாப்பாய் இயங்கும்; எந்த சிக்கலும் வராது' என்கிறார், இதய நோய் நிபுணர் கார்த்திகேயன்.செப்., 29ல், உலக இதய நாள். இதையொட்டிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:1இதய நோய்கள் ஏற்பட என்ன காரணம்; ரத்த நாள பாதிப்பு அதிகமாக வருகிறதே...?நம் வாழ்க்கை முறை மாற்றமே எல்லாவற்றுக்கும் காரணம். இயற்கை உணவை விட்டு விட்டு, 'பாஸ்ட் புட், பர்கர், பீட்சா' என, கண்ட உணவுகளையும் சாப்பிடுகிறோம். உடல் உழைப்பு இந்தியர்களிடம் குறைந்து விட்டது. இதனால், உடல் பருமன் அதிகரித்து, வயிற்றில் கொழுப்பு பரவி, இதயத்தை பாதிக்கிறது.இதயம் சார்ந்த பல பாதிப்புகள் இருந்தாலும், இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளில், இதய ரத்த நாள அடைப்பு தான், பெரிய சிக்கலாக உள்ளது. நெஞ்சு வலி, மாரடைப்பு வர இதுவே காரணம். இதய பாதிப்பு உள்ளோரில், 40 சதவீதம் பேர், ரத்த நாள அடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளோருக்கு இந்த பாதிப்பு வருகிறது.2 தற்போது, 30, 40 வயதிலேயே மாரடைப்பு வருகிறதே ஏன்? மன அழுத்தமும் இதற்கு காரணமா?இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு புகை பழக்கம் முக்கிய காரணம். ஒரு காலத்தில், 50 வயதுக்கு மேல்தான் மாரடைப்பு வந்தது. தற்போது, 30, 40 வயதிலும் வருவதற்கு, இளைஞர்களிடம் புகை பழக்கம் அதிகரித்துள்ளதே காரணம். அடுத்தது, மன அழுத்தம்.பெரும்பாலான பணியிடங்களில், 'டார்கெட்' வைத்து, அதை நோக்கி பணியாற்றும் சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் பணியாற்றும் வகையிலான, நிறைய நிறுவனங்களும் வந்துவிட்டன. இதுபோன்ற பணிச்சூழல், மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.இது, நாளடைவில் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதய நோய் வரை வந்து விடும். எப்போதும், வேலை வேலை என்றே இருக்காமல், இடை இடையே சற்று, 'ரிலாக்ஸ்' தேவை. எந்த கடினமான பணியையும், திட்டமிட்டு, எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.3 உணவு பழக்கத்தில் மாற்றம் என்பது, இந்தக் காலத்தில் சாத்தியமா?வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, 'அப்பா... திருப்தியா சாப்பிட்டேன்' என்று சொல்கிற ஒரு நிலைதான், நம் உணவு பழக்கமாக உள்ளது. அதுவும், 'கார்போ ஹைட்ரேட்' அதிகம் உள்ள, அரிசி உணவை அதிகம் சாப்பிடுகிறோம். இது சரியல்ல. மேலை நாடுகளில், 'புரோட்டீன்' சத்துள்ள உணவுகளையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.இந்த உணவு பழக்கத்தில் இருந்து கட்டாயம் மாற வேண்டும். தேவையான நேரத்தில், தேவையான அளவு மட்டுமே உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை முடிந்த அளவு தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சுத்தமான, 'பிரஷ்' காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும்.4இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன? சிகிச்சை எளிதாக கிடைக்கிறதா?லேசான நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், பணியில் சோர்வு, உடல் வலி, சுறுசுறுப்பின்மை போன்றவை, இதயம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள். மூச்சுப் பிடித்ததும், 'வாய்வு தொல்லை' என, அக்கம், பக்கத்தினர் சொல்வதைக் கேட்டு, 'ஜெலுசில்' சாப்பிடுதல், டாக்டர் ஆலோசனை பெறாமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடுவது தவறு.நோய் முற்றிப்போன நிலையில், டாக்டரிடம் செல்கின்றனர். இதயத்தின் தசைகள் தளர்ந்து, துடிப்புத்திறன் குறைந்து விடும். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பது கடினம். சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாகிறது. பொதுவாக, உடல் நல சிகிச்சைக்காகவே, இந்தியாவில் பெரும்பகுதி பணத்தை செலவிடுகிறோம்.இதற்கு காரணம், வரும்முன் காக்கும் நடைமுறை இல்லாததே. நோய் வந்த பின் வருந்தி பணத்தைக் கொட்டி செலவு செய்வதை விட, வரும் முன் காப்பது நல்லது என்பதை, உணர வேண்டும்.5 எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் உள்ளன?ஆரம்பத்தில், இ.சி.ஜி., பரிசோதனை, டிரெட் மில் வாக்கிங் பரிசோதனை, 'எக்கோ' பரிசோதனை செய்வர். இதய தசை, துடிப்பு, வால்வு பரிசோதனைகள் நடக்கும். இதெல்லாம், ஆரம்ப கட்ட பரிசோதனைகளே. 'கொரைனரி ஆஞ்சியோகிராம்' தான், சரியான பரிசோதனை. இதில், இதய தசைக்குச் செல்லும் ரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்களை துல்லியமாக அறிந்து சிகிச்சை அளிக்கலாம்.ஆஞ்சியோ பிளாஸ்டி, கத்தீட்ரல் பலுான் சிகிச்சை, பைபாஸ் அறுவைச் சிகிச்சை, இதய வால்வுகள் மாற்று அறுவைச் சிகிச்சை என, பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. பிறவியில், ஆரிக்கிள், வென்டிரிக்கள் இடையே, சிலருக்கு ஓட்டை வர வாய்ப்புள்ளது. இதை, 'அம்பர்லா டிவைசர்' மூலம் அடைக்க முடியும்.6'ருமாட்டிக்' காய்ச்சல், குழந்தைகளுக்கு இதய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்களே?குழந்தைகளுக்கு, பாக்டீரியா தாக்கத்தால், 'ருமாட்டிக்' வகை காய்ச்சல் வருவதுண்டு. இது, அவர்களின் மூட்டுகளை பாதிக்கும். உரிய சிகிச்சை அளித்தால் நிலைமை சரியாகிவிடும். ஆனால், இதன் தாக்கம் உள்ளேயே இருந்து, கொஞ்சம் கொஞ்மாக, இதயத்தை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ருமாட்டிக் காய்ச்சல் குணமானாலும், அவ்வப்போது, இதயம் சார்ந்த பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.7 இதயத்தை பாதுகாக்க பொதுவான அறிவுரைகள் என்ன?பொதுவாக, 30 வயதுக்கு மேல் உள்ளோர், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வதும் நல்லது.சோம்பேறித்தனம் கூடாது; உடற்பயிற்சி முக்கியம்.இதற்காக, 'ஜிம்'முக்கு போய், மெனக்கெட்டு பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நடைபயிற்சி போதும். அதிகாலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி நல்லது. முடியாவிட்டால் கிடைக்கும் நேரத்தில், இரவில் நடைபயிற்சி செய்யலாம்.உரிய நேரத்தில் அளவான உணவு, சரியான துாக்கம், நடைபயிற்சியுடன், எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால், எந்த சிக்கலும் இன்றி இதயமும் பாதுகாப்பாக இயங்கும். உங்கள் இதயத்தின் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.- டாக்டர் ஜி.கார்த்திகேயன்,துறைத் தலைவர், இதயவியல் துறை,அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !