கருச்சிதைவிற்கு ரத்த உறைவும் காரணமாகலாம்!
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அபார்ஷன் - கருச்சிதைவு ஏற்படும். இது, முதல் மூன்று மாதங்களில் ஆகலாம்; சிலருக்கு குழந்தை பிறப்பதற்கு முன், கருவிலேயே இறந்து போகலாம். இரண்டு முறைக்கு மேல் அபார்ஷன் ஆனால், அந்த நிலைக்கு மருத்துவத்தில், 'ஆன்டி பாஸ்போலிப்பிட்ஸ் ஆன்டிபாடீஸ் சிண்டரோம்' என்று பெயர். இப்பிரச்னைக்கு ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் டாக்டர்கள் தான் சிகிச்சை தர வேண்டும்.சில காரணங்களால் இப்பிரச்னை இருக்கும் கர்ப்பிணியருக்கு, உடலில் ரத்த உறைவு ஏற்படும். இதனால், உடலின் சில பகுதிகளில் ரத்தம் கட்டிக் கொள்ளும். இதற்கு 'திராம்போசிஸ்' என்று பெயர்.கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் தாய் சாப்பிடும் உணவில் இருந்தே கிடைக்கின்றன. குழந்தைக்கு நேரடியாக உணவு போகாது. தாய் சாப்பிட்டு, செரிமானம் ஆகி, ஊட்டச் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து, குழந்தையின் உடலுக்கு ரத்தம் செல்லும் போது, அதன் வாயிலாகவே சத்துக்கள் கிடைக்கின்றன. இது இயல்பான நடைமுறை.கர்ப்பப்பைக்கு செல்ல வேண்டிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கருவுக்கு ரத்தம் செல்லாமல், கரு வளர்வதற்கு போதிய ஊட்டச் சத்து கிடைக்காமல் போனால், வளர்ச்சி இல்லாமல் அபார்ஷன் ஏற்பட்டு விடும்.அபார்ஷன் ஆவதற்கு பல காரணிகள் இருந்தாலும், இரண்டு தடவைக்கு மேல் அபார்ஷன் ஆகும் போது, ஆன்டி பாஸ்போலிப்பிட்ஸ் சிண்ட்ரோம் இருக்கிறதா என்ற உறுதி செய்வது நல்லது. பிரச்னை இருப்பது தெரிந்தால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே, ஆஸ்பிரின், ஹைட்ராக்சிகுளோரோகுயின், ஹெப்பாரின் மாத்திரைகள் தருவோம்.இதனுடன் சேர்த்து, ரத்த உறைவைத் தடுக்கும் மாத்திரைகளும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இப்பிரச்னை இருப்பதே தெரியாமல் இருந்தால், தொடர்ந்து அபார்ஷன் ஆவதற்கு 80 சதவீத வாய்ப்பு உள்ளது.டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், 80 சதவீதம் வெற்றிகரமான கர்ப்பத்திற்கு வாய்ப்பு உள்ளது. இது உலகம் முழுதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.என்னுடைய அனுபவத்தில், இப்பிரச்னையில் இருந்த 4,000 பேருக்கு சிகிச்சை அளித்து உள்ளேன். திருமணம் ஆன பெண், குழந்தை பெற முடியவில்லை என்றால் மொத்த குடும்பமும் மன அழுத்தத்திற்கு உள்ளாவது இயல்பு. 1994ம் ஆண்டில் தான் இந்தப் பிரச்னையை கண்டுபிடித்தனர்.நவீன மருத்துவத்தில், இதற்கு நல்ல மருந்துகள் உள்ளன. ஆறு முறை, எட்டு முறை அபார்ஷன் ஆனவர்களுக்கும் குணப்படுத்தி உள்ளோம். தொடர்ந்து பல மாதங்களுக்கு சிகிச்சை பெற வேண்டிஇருக்கும்.எனவே, டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டியது தான் இதில் முக்கியம்.டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்,ருமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் சிறப்பு மருத்துவர்,அப்பல்லோ மருத்துவமனை, சென்னை