தாய்ப்பால் தருவதற்கும் பயிற்சி அவசியம்!
பிரசவித்த நாளிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதற்கான பயிற்சியை, கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்கு செல்லும் டாக்டரிடம் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சிசேரியனாக இருந்தாலும், சுக பிரசவமானாலும், குழந்தை பிறந்த, 20 - 30 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தர ஆரம்பிக்க வேண்டும். எங்கள் மையத்தில் இந்த நடைமுறையை ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டில் குழந்தை பிறந்த, ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தர வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்தோம். இப்போது, 30 நிமிடங்களுக்குள் என்று குறைத்து உள்ளோம். 87 சதவீதம் தாய்மார்களால் குழந்தை பிறந்த, 30 நிமிடத்திற்குள் தாய்ப்பால் தர முடிகிறது. இதைச் செய்வதற்கு டாக்டர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு வரும் பொதுவான பிரச்னை, தாய்ப்பால் ஊட்டும் சமயத்தில் மார்பு காம்புகள் வெளியில் வராது. சரியான நிலையில் குழந்தையை வைத்து பால் கொடுக்கத் தெரியாது. சுரக்கும் தாய்ப்பால் முழுமையாக காலியாகாமல், குழந்தை பிறந்த மூன்றாவது நாளிலிருந்து பால் கட்டிக் கொள்வது, சிலருக்கு ஒரு பக்கம் காலியாகும்; இன்னொரு பக்கம் காலியாகாது. இதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்பதை முதல் நாளிலிருந்து கற்றுத் தர வேண்டும்.தாய்ப்பால் கொடுத்த பின், மார்பகத்தை தொட்டு பார்த்து, எல்லாப் பக்கத்திலும் மென்மையாக இருக்கிறதா, முழுமையாக தீர்ந்து உள்ளதா என்பதை சுய பரிசோதனையில் உறுதி செய்ய வேண்டும். பால் கட்டி இருப்பது தெரிந்தால், உடனடியாக வெந்நீர் ஒத்தடம் தரலாம். அதன் பின்னும் கட்டி கரையாமல் காய்ச்சல், நடுக்கம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். மார்பக காம்புகளில் வலி ஏற்படுவதும் பொதுவானது. வலி பொறுக்காமல் தாய்ப்பால் தருவதை நிறுத்துபவர்களும் உள்ளனர். சரியான முறையை கற்று தாய்ப்பால் தருவதால், ஒவ்வொரு முறை பால் தரும் போதும், குழந்தையின் தேவைக்கு ஏற்ப பால் சுரப்பது இயல்பாகவே நடக்கும். தாய்ப்பால் தருவது சுலபமான வழி என்று நினைக்கின்றனர். காய்ச்சல், வாந்தி போன்ற கோளாறுகளை ஒரு முறை மருந்து தந்து சரி செய்து விடலாம். சரியான வழிமுறையில் தாய்ப்பால் தர கற்றுக் கொள்வது தான் சிரமம். இதற்காகவே உள்நோயாளியாக இருந்து பயிற்சி பெறுவோரும் உண்டு.டாக்டர் சரண்யா மாணிக்கராஜ்,பச்சிளங்குழந்தைகள் நல மருத்துவர், கோவை. 0422 - 4040202