ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான் சர்க்கரை கோளாறு. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படுவது 'டைப் - 1' சர்க்கரை கோளாறு. இதற்கு வாழ்நாள் முழுதும் இன்சுலின் சார்ந்து இருக்க வேண்டும். தவிர, குளூக்கோ மீட்டரை வைத்து, அவ்வப்போது ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டியதும் அவசியம். இன்னொரு விஷயம்... எதிர்காலத்தில் வேறு எந்தவித உடல் கோளாறுகளும், சிக்கல்களும் வராமல் தடுக்க, கட்டுப்பாடான உணவு முறையை பழக்குவது, தவிர்க்கவே முடியாதது!சர்க்கரை கோளாறு உள்ள குழந்தைகளுக்கு 'பேசல் போலுஸ் ரெஜிமென்' என்ற இன்சுலின் ஊசியை செலுத்துகிறோம். இது, நாள் முழுதும் உடலில் இன்சுலின் இருப்பதை உறுதி செய்கிறது. இன்சுலினுக்கு ஏற்றவாறு உணவு என்று இல்லாமல், என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதற்கு ஏற்ப தேவையான இன்சுலின் வெளிப்படும்.
'இன்சுலின் டோஸ்'
இந்த புதிய இன்சுலின் உதவியால், எந்த நேரத்தில், என்ன உணவு, எந்த அளவு சாப்பிட விரும்பினாலும், அதை தாராளமாக குழந்தை சாப்பிடலாம். ஒரு துண்டு கேக் அல்லது ஒரு கப் பால் என்று, எந்த அளவு கார்போ ஹைட்ரேட் உணவை குழந்தைக்கு தருகிறோமோ, அதற்கேற்ப பேசல் போலுஸ் இன்சுலின் மருந்தின் டோஸ் தரலாம். பிறந்த நாள், பார்ட்டி போன்று என்றாவது விசேஷ நாட்களில், கேக், ஐஸ் கிரீம் சாப்பிட விரும்பினால், தயங்க வேண்டியதில்லை. கார்போ ஹைட்ரேட் அளவையும், அதற்கேற்ற இன்சுலின் டோசையும், டாக்டரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.தற்போது வந்துள்ள இன்சுலின் பம்ப், ஊசிக்கு மாற்றாக உள்ளது. பலமுறை ஊசி குத்துவதற்கு பதிலாக, சிறிய அளவில் அவ்வப்போது இந்த பம்ப்பிலிருந்து உடலுக்கு தேவையான இன்சுலின் செலுத்த முடிகிறது.
கணிக்க முடியாது
ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க, பேசில் போலுஸ் ரெஜிமென் என்பது, வழக்கத்தில் உள்ள அடிப்படையான ஒரு விஷயம் என்பதை மறக்க வேண்டாம்.பொதுவாக, உணவு சாப்பிடுவதற்கு முன் இன்சுலின் ஊசி போட வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை, பசித்தால் உடனே சாப்பிட வேண்டும்; பொறுமை இருக்காது; தட்டில் வைத்த உணவை முழுமையாக சாப்பிட்டனரா என்பதும் கணிக்க முடியாது. போதுமான அளவு சாப்பிடாவிட்டால், ரத்த சர்க்கரை அளவு குறைந்து விடும்; அதிகம் சாப்பிட்டால், அளவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, தேவையான போதும், சாப்பிட்ட பின்னும் போடக் கூடிய இன்சுலின் ஊசி வந்து விட்டது. குழந்தை நல மருத்துவரிடம் இது பற்றி கேட்டு, தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.தற்போதுள்ள தொடர் குளூக்கோஸ் கண்காணிப்பு மீட்டரில், ஒவ்வொரு முறையும் கையில் குத்தி, ரத்தம் எடுத்து பார்ப்பதற்கு பதிலாக, தோலின் அடியில் சிறிய அளவில் பொருத்தி, குழந்தையின் ரத்த குளூக்கோஸ் அளவை வீடியோ ரெக்கார்டிங் செய்து பார்க்கலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை, ரத்த சர்க்கரையின் அளவு அவ்வப்போது குறைவது சகஜம். இதைத் தவிர்க்க, தற்போது குளூக்காகோன் என்ற ஊசி மருந்து உள்ளது. குறைந்த ரத்த சர்க்கரையின் விளைவாக சரியாக சாப்பிட முடியாமல், சமயங்களில் நினைவிழந்த நிலையில் இருந்தால், இந்த ஊசியை வீட்டிலேயே போடலாம்.குழந்தைகளுக்கு வரும் எல்லா சர்க்கரை கோளாறும் 'டைப் - 1' கிடையாது; சிலருக்கு 'டைப் - 2' வரலாம். சிலருக்கு 'மோனோஜெனிக்' வகை இருக்கலாம். மரபணு சோதனையில் மட்டுமே, என்ன வகை என்று தெரியும்.டாக்டர் ஹேம்சந்த்கே.பிரசாத், குழந்தைகள் நல நாளமில்லா சுரப்பி மருத்துவ ஆலோசகர், சென்னை. 73977 76331