ஈறுகளில் ரத்தம் வந்தால் பிரஷ் பயன்படுத்தலாமா?
*என் வயது 20. பின் பற்களில் உணவை சரியாக மெல்ல முடியவில்லை. கீழ்வரிசை கடைவாய் பற்கள் வெளியில் உள்ளன. இதற்கு தீர்வு என்ன?சிலருக்கு மேல்தாடை குறுகலாகவும், கீழ் தாடை அகலமாகவும் அமையும். இதனால், மேல்தாடை கடைவாய் பற்கள் உள்ளே அமுங்கி, கீழ் தாடை கடைவாய்கள் பற்கள் வெளி நோக்கி இருக்கலாம். சிலருக்கு தாடை பிரச்னை இல்லாமல், பற்கள் மட்டும் சீரற்று இருக்கும். இம்மாதிரி பற்கள் அமையும் போது, கடிமானம் மாறுபடுகிறது. உணவை சீராக மெல்ல முடியாது. தாடை பிரச்னை இருந்தால், சிறுவயதில் குழந்தைகளின் வளர்ச்சிக் கால கட்டத்தில் 7 முதல் 11 வயதிற்குள் மேல் தாடையை அகலப்படுத்தி, சரி செய்யலாம். 18 வயதிற்கு மேல், தாடை ஆப்பரேஷன் மூலம் சரி செய்யலாம். தற்போது கடைவாய் பற்களை சரியான கடிமானத்திற்கு கொண்டுவர, கிளிப் அணிந்து சரி செய்யலாம்.*ஈறுகளில் ரத்தம் வந்தால் பிரஷ் பயன்படுத்தக்கூடாதா?ஈறுகளில் ரத்தம் வர பல காரணங்கள் உண்டு. பற்காரை படியும் போது, மென்மையான ஈறுகளை அழுத்துவதால், அவை வீங்கி ரத்தம் வரக்கூடும். இதை தவிர்த்து, ஹார்மோன்கள் சீராக இல்லாவிடில், கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இருந்து ரத்தம் வரக்கூடும்.ரத்தசோகை, உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சில வகை ரத்த புற்று நோய்களால் ஈறுகளில் ரத்தம் கசியலாம். ஈறுகளில் வலி இருந்தாலோ, ரத்தக் கசிவு இருந்தாலோ மிருதுவான பிரஷ் மூலம், ஈறுகளை அழுத்தாமல் பற்களை மட்டும் பிரஷ் செய்ய வேண்டும். விரல்களினால் பற்களை தேய்த்தால், அழுக்குகள் முழுமையாக நீங்காது. இதனால், பற்களின் மீது பற்காரை படியக்கூடும். பல் டாக்டரிடம் ஈறுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்.*என் வயது 50. மேல்தாடையில் 2 சிங்க பற்கள் மட்டும் அசையாமல் உள்ளன. முழு பல்செட் கட்ட என்ன செய்ய வேண்டும்?சிங்க பற்கள் நீளமான வேருடன் உறுதியாக இருக்கும். அவை அசையாமல் இருந்தால், சிறிதாக்கி அதன் மேல் பொருத்தும் வகையில், முழு பல் செட் கட்டலாம். 'இம்ப்ளாண்ட்' களை மேல் அல்லது கீழ் தாடைகளில் பொருத்தலாம். இதனால், தாடை எலும்பு மேலும் கரையாமல் பாதுகாக்கலாம். பற்கள் உதிர்ந்தாலோ அல்லது அகற்றினாலோ தாடை எலும்பு வேகமாக கரையும். கழற்றி மாட்டுகிற முழு பல்செட் பயன்படுத்தும் போது, தாடை எலும்பு கரைந்து சிறிதாவதால், தண்ணீர் குடிக்கும் போது அல்லது சாப்பிடும்போது பல்செட் தளர வாய்ப்புள்ளது. தங்களின் இரு சிங்க பற்களும் உறுதியற்றதாக இருந்தால், அவற்றை நீக்கி விட்டு முழு பல்செட் அமைக்கலாம்.-டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை, 94430-61160.