மஞ்சள், வேப்பிலை கேன்சருக்கு தீர்வு தருமா?
இளம் வயதில் கேன்சர் வராது என்ற நம்பிக்கையில் ஆரம்ப கட்ட அறிகுறிகளை அலட்சியம் செய்கிறோம். இந்த காலகட்டத்தில் எந்த வயதில் யாருக்கு வேண்டுமானாலும் கேன்சர் வரலாம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தவறான நம்பிக்கையில் இருக்கக் கூடாது.பத்து ஆண்டுகளுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, வயிறு பொருமல், மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் வந்தால், கேன்சர் என்று நினைத்தோம். 40 வயதில் இதே அறகுறிகள் இருந்தால், நார்ச்சத்து நிறைந்த உணவு சாப்பிடாததால் வந்த பிரச்னை என்று சொல்லுவோம்.தற்போது எந்த வயதினராக இருந்தாலும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால், எல்லா பரிசோதனைகளையும் செய்யச் சொல்கிறோம்.இளம் வயதில் கேன்சர் உறுதியானால், டாக்டர் நான் காபி, டீ கூட குடிக்க மாட்டேன். நேரத்திற்கு, நானே சமைத்து சாப்பிடுவேன். ஒன்பது மணிக்கு உறங்கி விடுவேன். மது, சிகரெட் பழக்கம் இல்லை. மன அழுத்தம் என்ற ஒன்று எனக்கு இல்லவே இல்லை, எனக்கு ஏன் வந்தது என்று அதிர்ச்சி அடைகிறார்கள். பொதுவாக இது நியாயமான கேள்வி தான். செரிமான மண்டலத்தைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக பலவித கேன்சர் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் 60 வயதிற்கு மேல் வரக் கூடிய உணவுக் குழாய், கணையம், கல்லீரல், இரைப்பை, பெருங்குடல், மலக்குடல் கேன்சர் பாதிப்புகள் 30 வயதிலேயே வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பாதிப்பு வர ஆரம்பித்து, ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளன. இதற்கு விஞ்ஞான பூர்வமாக காரணம் சொல்ல முடியாவிட்டாலும், வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, பிளாஸ்டிக் பயன்பாடு, இவற்றின் ஒட்டு மொத்த பாதிப்பாக இருக்கலாம். இதில் துரித, கொழுப்பு நிறைந்த உணவு அதிகம் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மாட்டிறைச்சி சாப்பிட்டால், பெருங்குடல் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.டாக்டர் பி.செந்தில்நாதன், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர், ஜெம் மருத்துவமனை, சென்னை 95002 00600, 044-61666666chennai@geminstitute.inசமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நான்காம் நிலையில், குணப்படுத்த முடியாத கேன்சரில் இருந்து மீண்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில், பால் பொருட்கள், வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து, மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தி, கேன்சரில் இருந்து குணம் பெற்றதாக கூறியிருந்தார். இது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.இதைப் பார்ப்பவர்கள், நான்காம் நிலை கேன்சர் உள்ள ஒருவருக்கே பலன் தந்தது என்றால், இதற்கு முந்தைய நிலையில் உள்ள நாம் ஏன் செய்யக் கூடாது என்று நினைக்கலாம். இந்த மூலிகைகள் மீது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால், கேன்சரை குணப்படுத்தும் தன்மை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.தணிக்கை இல்லாமல் வெளிவரும் சமூக ஊடக தகவல்களில் நல்ல அனுபவங்களும் உள்ளது. அவற்றுக்கு இணையாக தவறான தகவல்கள், கட்டுக்கதைகளும் உள்ளன.