தாய்ப்பாலை, "பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாமா?
மல்லிகா அன்பழகன், சென்னை: வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து 'பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் 'பிரிஜ்'ஜில் வைக்கலாம்?வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும். எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும். புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். 'பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, 'ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். 'பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், 'ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம். ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது. அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது. மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, 'பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், 'பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. 'பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்.வி.தனசேகரன், சென்னை: வயது: 55. ஆட்டோ டிரைவரான எனக்கு, இரண்டு கைவிரல்களும் அடிக்கடி மரத்து போகிறது. திடீரென்று உடம்பில் திட்டு திட்டாக எரிகிறது. கை, கால்களில் குத்தலும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? எந்த டாக்டரை பார்க்க வேண்டும்?நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்பதை முதலில் பரிசோதனை செய்யுங்கள். இவற்றை சரியான முறையில் சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடையுடன் இருந்தால், எடையைக் குறையுங்கள். தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியும், 20 நிமிட நீளிழு பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தினமும் நான்கு வேளை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்து உட்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொண்ட பின்பும் உங்கள் உபாதை சரியாகவில்லை எனில், மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.