உள்ளூர் செய்திகள்

"திடீரென எடையை குறைக்கலாமா

மு.கருப்பையா, மதுரை: எனது வயது 39. அளவுக்கு அதிகமான எடையை குறைக்க சில பவுடர், மாத்திரைகள் வந்துள்ளதாக நண்பர் கூறுகிறார். அவற்றை பயன்படுத்தலாமா?ஒருவரது எடை அவரது உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது எடை (கிலோவில்) = உயரம் (செ.மீ.,யில்) - 100. அதாவது ஒருவரது உயரம் 170 செ.மீ., இருந்தால், அதில் 100 ஐ கழிக்க கிடைக்கும் மீதி 70தான் அவரது எடையாக இருக்க வேண்டும். எடையை குறைப்பது எளிதானதல்ல. சரியான உணவுப் பழக்கம், சற்று கூடுதலான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் அளவாக உண்பது, அரிசி உணவை தவிர்ப்பது, இனிப்பு, சர்க்கரையை அறவே தவிர்த்தல் மூலம் எடையை குறைப்பதே சிறந்தது. திடீரென குறைந்த காலகட்டத்தில், அதிக எடையை குறைப்பதால் உடலுக்கு கேடு ஏற்படும். ஒரு மாதத்தில், ஒரு கிலோவுக்கு மேல் குறைந்தால், அது உடல் செயல்பாட்டை பாதிக்கக் கூடும். சில மருந்துகள் எடையை நன்கு குறைத்தபின், மருந்தை நிறுத்தினால், பிறகு முன்பிருந்த எடையைக் காட்டிலும் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது எடையை குறைக்க நவீன ஆப்பரேஷன்கள் உள்ளன. அதிலும்கூட சில பாதகமான அம்சங்கள் உள்ளன. நீங்களாக எடையை குறைக்க மருந்துகளை எடுப்பது தவறு. உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று, சரியான உணவை, சரியான நேரத்தில் எடுத்து, உணவு, உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். சில ஹார்மோன் பிரச்னைகளாலும் உடல் எடை அதிகரிக்கலாம்.பி. சந்தோஷ்ராஜ், விருதுநகர்: நான் எனது வாகனத்தில் செல்லும்போது, இருமுறை தலைச்சுற்றி மயக்கம் வருவது போல ஏற்பட்டது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?ரத்தஅழுத்தம் எந்தளவு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். ரத்தஅழுத்தம் கூடினாலும், குறைந்தாலும் தலைச்சுற்றல் வரலாம். நாடித்துடிப்பில் கோளாறு இருந்தாலும் வரலாம். இது தவிர ரத்தக் கோளாறு உள்ளதா என அறிய வேண்டும். அவசியம் உங்களுக்கு இ.சி.ஜி., எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை தேவைப்படும். இதில் இருதய கோளாறையும் கண்டறியலாம். இவை அனைத்தும் நார்மலாக இருந்தால், நீங்கள் நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.ஆர். சாம்பசிவம், நத்தம்: எனது மகன் வயது 21. சிறுவயதில் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர் கூறினார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாமா?இருதயத்தில் ஓட்டை என்பது ஒரு பொதுவான சொல். இருதயத்தின் எந்த இடத்தில் ஓட்டை உள்ளது, அதன் அளவு மற்றும் அதனால் இருதயத்தில் வீக்கம் ஏற்பட்டு உள்ளதா, நுரையீரல் ரத்தஅழுத்தம் போன்றவற்றை பொறுத்தே அவர், விளையாட்டில் பங்கேற்கலாமா எனக் கூறமுடியும்.எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்து, அதன்முடிவுக்கு ஏற்ப, ஒரு இருதய டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்று, போட்டியில் பங்கெடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.எஸ்.ஜோசப் அமல்ராஜ், தேனி: நான் தினமும் மாலை ஒரு கேக் மற்றும் மிக்சர் சாப்பிடுகிறேன். எனது நண்பர் இப்பழக்கம் தவறு என்கிறார். எனக்கு சர்க்கரை, ரத்தஅழுத்தம் இல்லை. நான் இப்பழக்கத்தை நிறுத்தியே ஆக வேண்டுமா?பொரித்த ஸ்னாக்ஸ், பேக்கரி பொருட்கள் போன்றவற்றால், அதிக பாதிப்புகள் ஏற்படுவது உண்மை. என்றாவது ஒருநாள், ஒரு கேக், மிக்சர் சாப்பிடுவது தவறல்ல. தினமும் சாப்பிடுவது தவறு. இப்பழக்கத்தை நீங்கள் நிறுத்துவது சரியானது. ஸ்னாக்ஸ் நேரத்தில் பழங்கள், நட்ஸ், 2 மேரி பிஸ்கட்ஸ், பழஜூஸ், காய்கறி சூப், சர்க்கரை இல்லாத டீ, காபி சாப்பிடலாம். தினமும் வடை, பஜ்ஜி, ஸ்வீட்ஸ், மிக்சர் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்