உள்ளூர் செய்திகள்

"ஆக்சிஜன் கருவியுடன் விமானப் பயணம் செய்யலாமா

எனது வயது 60. நுரையீரலில் நோய் உள்ளதால், 'ஆக்சிஜன் கான்சன்ரேட்டர்' கருவி மூலம் தொடர்ந்து ஆக்சிஜனை எடுத்து வருகிறேன். நான் அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளதால், விமான பயணம் மேற்கொள்ள இயலுமா?ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 90 சதவீதத்திற்கும் குறையும்போது, ஆக்சிஜன் 'சப்ளிமென்ட்' தேவைப்படுகிறது. வெளிநாடு செல்ல விரும்பினால், உங்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் கான்சன்ரேட்டர் கருவியுடன் விமான பயணம் செய்ய இயலும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும்போதே, விமான நிறுவனத்திடம் அதை தெரிவிக்க வேண்டும். பின், உங்கள் டாக்டரிடம், உங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன், எவ்வளவு மணி நேரத்திற்கு தேவைப்படும் என்பதை விளக்கும் மருத்துவ சான்று மிகவும் அவசியம். இடையில் நிற்காமல் செல்லும் விமானமாக இருந்தால் நல்லது. பகல் நேர பிரயாணம் மிகவும் நல்லது. ஆக்சிஜன் சிலிண்டரில் பொருத்தப்படும் டியூப் மற்றும் மாஸ்க்கை நீங்களே கையோடு எடுத்துச் செல்லுங்கள். விமானத்தில் உங்கள் இருப்பிடம், பாத்ரூம் அருகில் இருக்குமாறு டிக்கெட் பதிவு செய்யுங்கள். விமானத்தில் இருந்து தரை இறங்கியவுடன் விமான நிலைய மருத்துவ பிரிவை அணுகினால், நீங்கள் செல்லும் இருப்பிடம் வரை, உங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் கருவி மற்றும் முதலுதவி ஏதாவது தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர். எனவே, நீங்கள் தாராளமாக அமெரிக்கா செல்லலாம்.எனது வயது 30. சிலமாதங்களாக நுரையீரல் நோய் உள்ளது. நான் மாதாமாதம் டாக்டரை சந்திக்கும் போது, 'பீக் புளோ மீட்டர்' என்னும் கருவியை வாயில் வைத்து ஊதும்படிச் சொல்வார். இது ஏன்?'பீக் புளோ மீட்டர்' என்பது நம் நுரையீரல் திறனை கண்டறிய உதவும் ஒரு எளிய கருவி. இக்கருவியை நுரையீரல் நோய் உள்ள ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டியது அவசியம். தினமும் காலையில் பல் துலக்கியவுடன், இக்கருவியை வாயில் வைத்து மூச்சை நன்கு உள்ளே இழுத்து, பின் வேகமாக ஊதுவதன் மூலம் நுரையீரல் திறன் கண்டறியப்படுகிறது.இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் உள்ளபோது இக்கருவியின் அளவு குறைந்து காணப்படும். பொதுவாக உடற்பயிற்சிகள் செய்யும் ஒரு ஆணுக்கு 600 என்ற அளவிலும், பெண்ணுக்கு 400 என்ற அளவிலும் இருக்கும். நம் நுரையீரலில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பதை வீட்டில் இருந்தபடியே இந்த கருவியின் மூலம் நாமாகவே எளிதில் பரிசோதிக்க முடியும்.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்