மன பதற்றத்தால் ஏற்படும் மார்பு இறுக்கம்!
எதிர்பாராத சமயத்தில் மார்பு இறுக்கம், வயிற்றில் அசவுகரியம், இதயத் துடிப்பு அதிகமாவது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, ஏதோ பெரிய பிரச்னை இருப்பதாக பயந்து டாக்டர்களிடம் ஆலோசனை, பலவித பரிசோதனைகள் செய்து, 'எல்லாம் நார்மல்' என்று தெரிந்த பின்னரும், பிரச்னை அப்படியே தான் இருக்கிறது என்றால், அது முழுக்க மனப் பதற்றம், கவலையால் ஏற்படும் உடல் அறிகுறிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற உடல் அறிகுறிகளை தினமும் சந்திப்பவர்கள் உள்ளனர்.பதற்றம் என்றால் என்ன?பய உணர்வின் வெளிப்பாடு பதற்றம். ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்ற பய உணர்வால் உடலில் ஏற்படும் இயல்பான எதிர்வினையாகும். உதாரணமாக, தேர்வு, நேர்க் காணல், மருத்துவமனை வருகைக்கு முன் பதற்றமாக இருப்பது இயல்பானது. இது, காரியத்தில் கவனம் செலுத்த உதவும். ஆனால், சிலர் எந்தவித காரணமும் இல்லாமல் பதற்றம் அடைவர். அது, சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அன்றாட வாழ்க்கை, ஆரோக்கியம், மகிழ்ச்சியை பாதிக்கத் துவங்கும்.இந்த பதற்றம், மனதை மட்டுமல்ல, உடலையும் பாதிக்கும். மனதின் அறிகுறிகள் தொடர்ச்சியான கவலை, பயம், பதற்றமாக உணருதல், அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், கவனம் செலுத்துவதில் சிரமம், ஏதோ மோசமானது நடக்கப் போவது போல் உணருதல், துாங்குவதில் சிரமம், எளிதில் எரிச்சல், கோபம், பயம் காரணமாக சூழ்நிலைகள் அல்லது பிறரை தவிர்ப்பது.உடலின் அறிகுறிகள்மார்பு இறுக்கம், வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், வயிற்று வலி, குமட்டல், அமிலத்தன்மை, தலைவலி, தலைச்சுற்றல், வியர்வை, உடல் வலி, உணர்வின்மை, நடுக்கம், எப்போதும் சோர்வாக உணர்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்.ஏன் உடலை பாதிக்கிறது?ஆபத்து, அவசர காலங்களில் நம்மை தற்காத்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உடலுக்கு உண்டு. இந்த செயல், நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும் போது, ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்க, உடல் செயல்பாடுகள் வழக்கத்தை விட வேகமாக இருக்கும். இதற்கு வசதியாக, மன அழுத்த ஹார்மோன்களான 'அட்ரினலின், கார்டிசால்' அதிக அளவில் சுரந்து ரத்தத்தில் கலக்கும்.இதனால், தசைகளுக்கு அதிக ரத்தத்தை 'பம்ப்' செய்ய, இதயம் வேகமாக துடிக்கும்.அதிக ஆக்சிஜனுக்காக சுவாசம் அதிகரிக்கும். தசைகள் இறுக்கமடையும்.உயிர் பிழைக்க வேண்டும் என்ற இந்த போராட்டத்தில், செரிமான திறன் குறையும். உடல் எதிர்வினையாற்றும்போது வியர்க்கலாம். உடலில் நடுக்கம் ஏற்படலாம்.என்ன செய்ய வேண்டும்?மனதும், உடலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்பதை புரிந்து, முதலில் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அதற்கு, சுவாசத்தை கவனித்து, மூச்சை 4 வினாடிகள் உள்ளிழுத்து, 2 வினாடிகள் பிடித்து, 6 வினாடிகள் வாய் வழியாக வெளியில் விட வேண்டும்.நிதானமாக இதை செய்யும் போது, மூளை பாதுகாப்பாக உணர்கிறது. இதயத் துடிப்பை குறைக்கவும், தசைகளை தளர்த்தவும் இது உதவும். சுற்றி நடப்பதை நிதானமாக கவனிப்பதும் பய உணர்விலிருந்து மாற உதவும்.நிபுணரிடம் ஆலோசனைதினசரி உடற்பயிற்சி, தினமும் 20 நிமிட நடைபயிற்சி, பதற்ற அறிகுறிகளை குறைத்து, அதிகப்படியான அட்ரினலினை எரிக்க உதவும். வலியைப் போக்கி, மகிழ்ச்சியான உணர்வை தரும் 'எண்டோர்பின்'கள் ரசாயனங்கள் மூளையில் அதிக அளவு சுரக்கும்.தொடர்ந்து இது போன்ற அறிகுறிகள் இருந்தால், மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. டாக்டர் வி.மிருதுல்லா அபிராமி,மனநல மருத்துவ ஆலோசகர்,ஐஸ்வர்யா மருத்துவமனை, சென்னை044 - 2025 2025, 98401 05510 cc@iswarya.in