உள்ளூர் செய்திகள்

"சிறிய ரத்த நாளங்களிலும் அடைப்பு வருமா

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து போன்ற நோய்களுக்கு அவசியம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்தாக வேண்டுமா? எம். கண்ணன், மதுரை.சரியான உணவுப் பழக்கம், நிம்மதியான வாழ்க்கை முறை, தினமும் 7 மணி நேரம் தூக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை சரியாக செய்து வந்தால், இந்த 3 கொடூர நோய்களையும் தடுக்க முடியாவிட்டாலும், அவசியம் தள்ளிப் போட முடியும். ஆதிகால மனிதர்களுக்கு இந்நோய் இருந்ததில்லை. நம் வாழ்க்கை முறை மாற்றங்களால், நாமாக இந்நோய்களை உற்பத்தி செய்துள்ளோம். இந்நோய் வந்த பிறகும், சரியான நேரத்தில், சரியான வாழ்வியல் மாற்றங்களை செய்தால், இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இருப்பினும் நோய் வந்த பிறகு, இந்த வாழ்வியல் மாற்றம் மட்டுமே பெரும்பாலோருக்கு போதுமானதாக இருக்காது. மருந்து அவசியம் தேவைப்படும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோயாளிகளை பொறுத்தவரை, மருந்து எடுத்து நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாலும், பின், மெதுவாக மருந்தை குறைத்து, இறுதியாக நிறுத்த இயலுமா என பார்க்க வேண்டும். ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்துக்காக, ஸ்டேட்டின் மாத்திரையை எடுத்து விட்டால், அவசியம் வாழ்நாள் முழுக்க மாத்திரைகளை எடுத்தாக வேண்டும்.இருதயத்தில் உள்ள பெரிய ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் பலூன் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது. சிறிய ரத்தநாளங்களில் அடைப்பு இருந்தால் அதற்கு என்ன சிகிச்சையை மேற்கொள்ளலாம்? எஸ்.பாலசுப்ரமணியன், வேடசந்தூர்.சிறிய ரத்தநாளங்களில் அடைப்பு குறிப்பாக பெண்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வருகிறது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதையும் சரியாக கவனிக்காவிட்டால் இருதயத்தை பாதிக்கக் கூடும். எனவே வாழ்க்கை முறை மாற்றங்கள், சர்க்கரை, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, தினசரி நடைப்பயிற்சி மிகவும் அத்தியாவசியமானதாகும். இதற்கு தற்போது நவீன மருந்துகள் வந்துள்ளன. இம்மருந்தை தொடர்ந்து எடுத்தால் இவ்வியாதியை கட்டுப்பாட்டில் வைக்கலாம். எனக்கு 2 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. இதற்காக,'Telmisartan மற்றும் Hydro chlorthiazide மாத்திரைகளை எடுக்கிறேன். எனக்கு அசதியாக உள்ளது. ரத்தப்பரிசோதனையில், சோடியம் அளவு குறைவாக உள்ளது என டாக்டர் கூறுகிறார். நான் என்ன செய்வது? எஸ். மீரான், ராமநாதபுரம்.ரத்தத்தில் உள்ள சோடியம் குறைய பல காரணங்கள் உள்ளன. அதை முதலில் கண்டறிவது முக்கியம். உங்கள் உணவில் உப்பு அளவை குறைக்காமல், வழக்கமான அளவில் உப்பு சேர்ப்பது நல்லது. இது தவிர, நீங்கள் எடுக்கும் மாத்திரையில், 'ஹைட்ரோ குளோர்தியாசைட்' மாத்திரையை நிறுத்துவது அவசியம். இதனாலும் சோடியம் குறையும் வாய்ப்பு உள்ளது. அதை நிறுத்தி விட்டு, உங்கள் டாக்டரின் ஆலோசனையுடன், வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சோடியம் அளவை அதிகரிக்கவும், தற்போது நவீன மருந்துகள் உள்ளன.எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. தற்போது சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சில் அழுத்தம் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது? எஸ்.பாண்டியன், சாத்தூர்.ஸ்டென்ட் பொருத்தப்பட்டவருக்கு நடக்கும்போது நெஞ்சில் அழுத்தம், வலி ஏற்பட்டால் அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை மறுபடியும் தேவைப்படும். இப்பரிசோதனையில் ஸ்டென்ட் எப்படி உள்ளது, ஸ்டென்டுக்குள் அடைப்பு உள்ளதா அல்லது புதிதாக அடைப்பு ஏற்பட்டு உள்ளதா என அறிய முடியும். இப்பரிசோதனை முடிவுக்கு ஏற்ப ஸ்டென்டுக்குள் மற்றொரு ஸ்டென்டோ அல்லது புதிதாக மறுபடியும் ஸ்டென்டோ அல்லது பைபாஸ் சர்ஜரியோ தேவைப்படும். அடைப்பு லேசாக இருந்தால், மருந்துகளை மாற்றி அமைத்தால் போதுமானது.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.0452- 233 7344


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்