கொரோனா எல்லாருக்கும் வரும்!
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், கொரோனா அனைவரையும் தாக்கும்; சிலரை அதிகமாக தாக்கும். அதனுடைய பாதிப்பு அதிகம் இருக்கும்; குணமாவது தாமதமாகும்.அதிலும் சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம், ஸ்டீராய்டு மருந்துகள் சாப்பிடுபவர்கள், கேன்சர் சிகிச்சையில் இருப்பவர்கள், ஏற்கனவே இதய, சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களை போன்றோருக்கு நுரையீரல் தொற்று இருந்து, வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.இவர்கள் தவிர, ஏற்கனவே நுரையீரலில் பாதிப்பு இருப்பவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், நுரையீரலுக்குள் தழும்பு இருக்கும் நோயாளிகளுக்கு, வைரஸ் தொற்றும் அபாயம் அதிகம்; உயிரிழப்பும் மற்றவர்களை விட அதிகம்.எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எந்த அளவுக்கு ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.ஸ்டீராய்டுஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உள்ள இன்ஹேலரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் வரலாம். அதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், ஆஸ்துமா கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், தற்காலிகமாக இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம். ஆனால், உங்கள் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.'எமோஷனல் ஸ்டிரஸ்' எனப்படும் அதிகமாக உணர்ச்சி வசப்படும் போது, ஆஸ்துமா பாதிப்பு மிகுதியாக வரலாம். ஆஸ்துமா நோயாளிகள் பலரும், தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். இந்த மன அழுத்தமே, ஆஸ்துமாவை வரவழைத்து விடும். இந்நிலையில், ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கவே பார்க்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது.ஆஸ்துமா வந்து விடாமல் இருக்க, முதலில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். வெளியில் செல்வதை தவிர்ப்பது அவசியம். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.காச நோய்பாக்டீரியா கிருமி பாதிப்பால் வரும் காச நோய், உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நுரையீரலை தாக்கும் போது, இருமல், சளி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.காச நோய் பாதிப்பு இருப்பவர்கள், இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடாமல் இருந்தால், கிருமிகள் காற்றில் பரவும். அந்த நேரத்தில் அருகில் இருப்பவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அல்லது கிருமியின் வீரியம் அதிகம் இருந்தால், அவர்களையும் தொற்றி விடலாம்.இப்படித்தான் நோய் பரவுகிறது. காச நோயாளிகள் இருமும் போது, வாயை மூடிக் கொள்ளுங்கள் என்றால், கேட்க மாட்டார்கள். கொரோனா ஏற்படுத்திய நல்ல விளைவுகளில் ஒன்று, முக கவசம் அணிவது. அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இதனால், ஒரு விதத்தில் காச நோய் பரவுவதற்கு வாய்ப்பு குறைந்து உள்ளது. அதே நேரம், காச நோயாளிகள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதால், அவர்களின் குடும்பத்தினருக்கு காச நோய் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம்.மூன்றாவதாக ஒரு விஷயம் உள்ளது. அது, இருமல், சளி இருந்தால், தற்போது கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்கிறோம். பாதிப்பு இல்லை என்றால், சரி என்று விட்டு விடுகிறோம்.இது தவறு. வைரஸ் பாதிப்பு இல்லை என்றால் சளி, இருமலுக்கு வேறு என்ன காரணம் என்று தெரிய வேண்டாமா? அதனால், காச நோய் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய வேண்டும். காரணம், கொரோனா, காச நோய் இரண்டில் எது அதிக அபாயம் என்றால், நம் நாட்டை பொறுத்தவரை காச நோய் மிகவும் அபாயம். இது வெளியில் தெரிவதில்லை. சத்தம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும். நம் நாட்டில் காச நோய்க்கு, ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் பலியாகின்றனர்.காச நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிக்கு, இந்த வைரஸ் தொற்று காலத்திலும் இலவச மருத்துவ சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சளி, இருமல் இருப்பவர்களுக்கு கூட நோய் பரிசோதனை செய்தால், புதிதாக தொற்று ஏற்பட்டு இருந்தால், உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்க ஏதுவாக இருக்கும்.எப்படி கண்டுபிடிப்பது?வீட்டில் காச நோயாளி இருந்து, மற்ற நபர்களுக்கு சளி, இருமல் இருந்தால், ஏற்கனவே காச நோய் சிகிச்சையில் இருந்தவர்கள், மீண்டும் அதே அறிகுறி தெரிந்தால், பரிசோதனை அவசியம்.காய்ச்சல்வைரஸ் பாதிப்பு இருந்தாலும் காய்ச்சல் வரும். காச நோய் தொற்று ஏற்பட்டாலும் காய்ச்சல் வரும். காச நோய் அறிகுறியாக வரும் காய்ச்சல் மிதமாக இருக்கும். பகலில் சாதாரணமாக இருக்கும். மாலை, 4:00 மணிக்கு மேல் ஆரம்பித்து, 7:00 மணி வரை இருக்கும். அதன் பின் சரியாகி விடும். பசி எடுக்காது; உடல் எடை குறையும். காச நோய் தொற்றால் மூக்கடைப்பு, தும்மல் வராது. வைரஸ் தொற்றால் வரும் காய்ச்சல் நாள் முழுவதும் இருக்கும். சில நாட்கள் இருமல் இருந்து, தானாகவே சரியாகி, குறிப்பிட்ட நாட்கள் கழித்து மீண்டும் இருமல் வரும். இரண்டிலும் இருமல் இருந்தாலும், வைரஸ் தொற்றின் பிரதானமாக வறட்டு இருமல் இருக்கும். காச நோயால் வரும் இருமல், பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளியுடன் வரும்.கடந்த நான்கு மாதங்களில், காச நோய் பரிசோதனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சளி, இருமல் என்றாலே வைரஸ் பரிசோதனை மட்டும் செய்கிறோம். இதனால், காச நோயால் புதிதாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.அதே நேரம், எல்லாருக்கும் காச நோய் பரிசோதனை செய்வதும் சாத்தியமில்லை.நோயாளியிடம் தெரியும் அறிகுறிகளை வைத்தே, காச நோயாக இருக்கலாம் என்று கணிக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனையுடன், காச நோய் பரிசோதனையும் அவசியம் செய்ய வேண்டும்.சளி, இருமலுடன் வரும், 100 நபர்களில், 30 பேருக்காவது காச நோய் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கும்.அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்படுவது போன்று, காச நோய் இருக்காது. ஏதாவது ஒரு அறிகுறி நிச்சயம் வெளியில் தெரியும்.நுரையீரல்தொண்டை, மூக்கிலிருந்து சளி எடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 80 சதவீதம் பேருக்கு தொண்டை, மூக்கில் தொற்று பாதிப்பு இருக்கும் என்றாலும், 20 சதவீதம் பேருக்கு நேரடியாக நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்லிவிட்டது. நாமும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த ஓராண்டில், நாம் அனைவருமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மிதமான அறிகுறிகள் இருக்கும் போதே, தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட வேண்டும். பாதிப்பு இல்லை என்றாலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், 'வைட்டமின் ஏ, இ, டி, கால்சியம், ஜிங்க், செலீனியம்' போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. அப்படியும் சத்து குறைபாடு இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற்று, ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிடலாம்.ஒரு முறை தும்மல் வந்ததும், கொரோனா வந்து விட்டது என்று நினைத்து பயப்படுபவர்கள் ஒரு பக்கம்; தீவிர அறிகுறிகள் இருந்தால் கூட, பரிசோதனை செய்ய முன் வராதவர்கள் ஒரு பக்கம்; இரண்டும் தவறு.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுய சுகாதாரத் துறை இருந்தால், வைரஸ் தொற்று பற்றி அச்சப்பட அவசியம் இல்லை.டாக்டர் எஸ்.பாலமுருகன்,இயக்குனர், நெஞ்சக மருத்துவப் பிரிவு,ஸ்ரீ முத்து குமரன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,சென்னை79047 20381