நீரிழிவு நோயாளிகளே... பல் போயிடாம பார்த்துக்குங்க!
நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், பக்கவாதம் மற்றும் கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை, பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பர். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம். அதனால், பல் விஷயத்திலும், அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டைப்-1 மற்றும் டைப் -2, நீரிழிவு நோயாளிகள், 2,500 பேரிடம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது, நீரிழிவு நோய் பாதிக்காதவர்களை விட, நோய் பாதித்தவர்களுக்கு, சராசரியாக, 10 பற்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: நீரிழிவு நோய் பாதிக்காதவர்களில், 14 சதவீதம் பேர், பல் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில், நீரிழிவு நோய் பாதித்தவர்களில், 28 சதவீதம் பேர், பல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.நீரிழிவு நோய்க்கும், பல் இழப்புக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. உதாரணமாக, ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும் போது, உணவு மூலம் கிடைக்கும் சத்தானது, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சரிவரச் செல்வதில், பிரச்னை ஏற்படுகிறது.அதேபோல், பல் ஈறுகளில் இருந்து, கழிவுப் பொருட்கள் வெளியேறுவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. இது நீடிக்கும் போது, குறிப்பிட்ட காலக்கட்டத்தில், பல் நோய்கள் உருவாகி, பற்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில், அக்கறை காட்டாதவர்களுக்கு, பல் சிதைவு அதிக அளவில் ஏற்படுகிறது.அதேநேரத்தில், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே, பல் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி பல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனில், தினமும், இரு முறை பல் துலக்குவதோடு, நான்கு மாதத்திற்கு ஒரு முறை, பல் டாக்டரிடம் சென்று, பற்களும், ஈறுகளும் நல்ல முறையில் உள்ளனவா என, பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.இதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள், உணவுடன் சேர்க்கப்படும் உப்பின் அளவிலும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 2,800 மில்லி கிராம் உப்பு சேர்த்துக் கொள்வோரை விட, 5,900 மில்லி கிராம் உப்பு சேர்த்துக் கொள்வோருக்கு, இதய நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.குறிப்பாக, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காதவர்கள், உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்தால், இவர்களுக்கு, மற்றவர்களை விட, இதய நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள், 10 மடங்கு அதிகம்.உணவில், அதிக அளவில் உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது, பலருக்கும் தெரியும். அதனால், நீரிழிவு நோயாளிகள், நாள் ஒன்றுக்கு, 1,500 மில்லி கிராம் உப்புக்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.அதேநேரத்தில், ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டவர்களும், நாள் ஒன்றுக்கு, 2,300 மில்லி கிராம் உப்புக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.