ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு
ஏப்ரல், 1ம் தேதி, 2000 அன்று காலையில் புனேவிலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது, 'டாக்டர் ரொம்ப நன்றி. என்னுடைய நண்பனின் குழந்தை மீனுவின் உயிரை காப்பாற்றியதற்காக' என்று, நெகிழ்ச்சியோடு தொடர்ந்தது, அந்த குரல். பேச்சின் இறுதியில், 'ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சொல்லி விஷயத்தை கூறியவுடன் நான் நெகிழ்ந்து போனேன். என் நினைவலை பின்னோக்கி சென்றது.ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம், கூடூரிலிருந்து, மீனு என்ற குழந்தையை மிகவும் ஆபத்தான நிலையில் என்னிடம் அழைத்து வந்திருந்தனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை, நோயின் தீவிரத்தில் இருந்தது. டெங்குவின் பாதிப்பால் தோல் தடித்து, சிறுநீர் குறைவாக வெளியேறியது. குழந்தைக்கு ரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்ததோடு, வாயிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்ததில், ரத்தத்தில் தட்டணுக்களின் அளவு, மிக குறைவாக இருப்பது தெரிந்தது. ஒரு மைக்ரோ லிட்டர் அளவு ரத்தத்தில், தட்டணுக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை, ஒன்றரை லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். இதனால் மீனுவுக்கு தட்டணுக்கள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அளித்த மருத்துவக் கண்காணிப்பில், டெங்குவால் ஏற்பட்ட, பல்வேறு பாதிப்புகளுக்காக மீனுவுக்கு சிகிச்சை தரப்பட்டது. ஒரு வாரத்தில் மீனு குணமடைந்து விட்டாள். மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அன்று, அவளின் தந்தை ரவி என்னிடம், 'என் குழந்தைக்கு வந்த பிரச்னை, என் ஊரில் இருக்கும் வேறு எந்தக் குழந்தைக்கும் வரக் கூடாது டாக்டர். அதற்காக டெங்குவிற்கான பாதுகாப்பு முறைகளை சொல்லுங்கள்' என்றார். பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு வருகிறது. இதன் அறிகுறிகள் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்து, திடீரென்று சரியாகி விடும். பாதிப்பு அதிகமானால் தோலில் தடிப்பு, ரத்தம் கசிவது, வயிற்று வலி, உடல் வலி, சிறுநீர் குறைவாக வெளியேறுவது, ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகள் வரும். காய்ச்சல் வந்த 24 மணி நேரத்திற்குள், 'என்.எஸ்.1 ஆன்டிஜென்' என்ற பரிசோதனையை செய்தால், டெங்கு இருப்பது உறுதியாகும். பொதுவாக எந்த வைரஸ் கிருமி உடலினுள் நுழைந்தாலும், அது ரத்தத்தில் பெருகி வளர்வதற்கு, குறைந்தது மூன்று நாட்கள் வரை ஆகலாம். அதனால் தான் வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளின் அடிப்படையில், சிகிச்சையை முதலில் ஆரம்பித்து, உறுதி செய்த பின் அதற்கான மருத்துவ சிகிச்சையை கொடுக்கின்றனர்.ஆனால், டெங்குவைப் பொறுத்தவரை, 2008ல் அறிமுகமான என்.எஸ்.,1 என்ற நவீன பரிசோதனையில், காய்ச்சல் வந்த, 24 மணி நேரத்தில் டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துவிட முடியும். காய்ச்சல் வந்த மூன்று நாட்களுக்குப் பின், ஐ.ஜி.எம்., என்ற பரிசோதனை செய்தும், டெங்கு இருப்பதை உறுதி செய்யலாம் போன்ற குறிப்புகளை சொன்னேன். அதை அவர் தெலுங்கு, தமிழ் என்று, உள்ளூர் மக்களுக்கு தெரிந்த மொழிகளில் அச்சடித்து, கூடூர் மக்களுக்கு வினியோகித்திருந்தார். மருத்துவ முகாம் ஒன்றிற்காக, அங்கு சென்றபோது, நான் சொன்ன குறிப்புகள் அச்சடித்த காகிதத்தைப் பார்த்தேன். மீனுவின் தந்தை ரவி, தன் குழந்தை கஷ்டப்பட்டதையும், சிகிச்சை அளித்த என்னைப் பற்றியும் தன் நண்பரிடம் சொல்லியிருந்தார். அதன் பின்னணி தான் அந்த அழைப்பு. ரவியின் நண்பரிடம், பல விஷயங்களை பேசிய போதுதான் தெரிந்தது நானும், அவரும், 3ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று. புனேவில் இருப்பது, என், 3ம் வகுப்புத் தோழர் வரபிரசாத், இன்று வரை தொலைபேசியில் நட்பு தொடர்கிறது.ஜெ.கே.ரெட்டி, சென்னை, 98842 12722