உள்ளூர் செய்திகள்

டாக்டரின் டைரிகுறிப்பு

ஆகஸ்ட், 20, 2016: வசந்தாவிற்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. குழந்தைகள் இல்லை. வசந்தா தற்போது தையல் வகுப்புக்கு செல்கிறாராம். காரணம், சில மாதங்களாகவே, அடிக்கடி பிளவுஸ் மாற்ற வேண்டிய அளவிற்கு மார்புப் பகுதி பருமன் ஆகிறது. கழுத்துப்பகுதி மற்றும் கைகளில் தாங்க முடியாத வலியும் இருப்பதால் ஏதாவது பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகத்தில், பொது மருத்துவரில் ஆரம்பித்து, எலும்பு நிபுணர், நரம்பியல் நிபுணர் என பல நிபுணர்களை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். மருத்துவ பரிசோதனை முடிவுகளில் பிரச்னை ஏதும் இல்லை என்றே வந்தது. கடைசியில் தான் என்னிடம் வந்தார். நான் அவரது முழு பின்னணியையும் தெரிந்து கொண்டேன். பிறகுதான் அவரது பிரச்னைக்கான காரணத்தை கண்டுபிடித்தேன். குழந்தையின்மை பிரச்னைக்காக பல்வேறு விதமான மாற்று மருத்துவ முறைகளையும் சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளார். அதன் விளைவாக ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு மார்பகத்தில் தசைகளின் வளர்ச்சி அதீதமாகி இருக்கிறது. இதனால்தான் கழுத்து மற்றும் கைகளில் தாங்க முடியாத வலி. இதனால் மன அழுத்தத்திற்கு வேறு ஆளாகியிருக்கிறார். வசந்தாவிற்கு, 'ப்ரஸ்ட் ரிடக் ஷன்' எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அவரது வயதுக்கேற்ப மார்பக அளவு மற்றும் அதன் எடையை சீராக்கினோம். அளவுக்கதிகமாக வளர்ந்த தசைகளை அகற்றினோம். ஹார்மோன்களின் மாற்றத்தை கட்டுப்படுத்த மருந்துகள் மற்றும் உணவு மாற்றத்தை பரிந்துரைத்தோம். அறுவை சிகிச்சைக்காக சில நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தார். தன் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விட்டது என்பதாலேயே மன அழுத்தத்திலிருந்தும் விடுபட ஆரம்பித்தார். வசந்தாவின் பிரச்னை பொதுவாக அனைவருக்கும் வராது. குழந்தையின்மைக்காக எடுத்துக் கொண்ட மாத்திரைகளின் பக்க விளைவுகளே இப்பாதிப்பு வரக் காரணம். மேலும், இதுபோன்ற பாதிப்புகள் வர மரபணுக்களின் குணாதிசயங்களும் காரணமாகிறது. வசந்தா குணமடைந்ததும் தன் குழந்தையை தேடிச் சென்ற இடம் எது தெரியுமா? ஒரு கருணை இல்லம்தான். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். வசந்தாவை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. எம்.டி.தேன்மொழி , முகம், மற்றும் உடல் சீரமைப்பு நிபுணர்94896 24008


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !