சர்க்கரை அளவை கட்டுக்குள் வையுங்கள்; அலட்சியம் வேண்டாம்!
உலகில், நீரிழிவு நோய் (சர்க்கரை) பாதிப்பில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு, நம் நாட்டில் பாதிப்பின் வேகம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், பக்க விளைவுகளால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்புள்ளோர், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம்1 நீரிழிவு நோய் பாதிப்பு என்றால் என்ன?; பாதிப்பின் தன்மை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது?ரத்தத்தில், சர்க்கரையின் அளவு அதிகரிப்பதையே சர்க்கரை நோய், நீரிழிவு நோய் என்கிறோம். இதில், டைப் - 1, டைப் - 2 என, இரண்டு வகைகள் உள்ளன. 98 சதவீத பாதிப்பு, டைப் - 2 வகையைச் சேர்ந்தது தான். எளிதாக சொல்வது என்றால், ஐந்து பேரில், இரண்டு பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில், சர்க்கரை நோய் பாதிப்பில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. 2024ல், இந்தியா, இந்த பாதிப்பில் முதல் இடத்திற்கு சென்று விடும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், பாதிப்பின் வேகம் அதிகமாக உள்ளதால், 2015லேயே, இந்தியா சர்க்கரை நோய் பாதித்த நாடுகளில், சீனாவை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்திற்கு சென்று விடும் என, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? பரம்பரை நோயா?உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், காலில் ஏற்பட்ட புண் ஆறாதது ஆகியவை, இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் ஏற்படும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு அறிகுறியே தென்படாது; ஆனால், சர்க்கரை நோய் இருக்கும்.பரம்பரையாக, 50 சதவீதம் பேருக்கு பாதிப்பு வருகிறது. தாய், தந்தை குடும்பத்தில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருந்தால், சந்ததியினருக்கு வர வாய்ப்பு உள்ளது. இது போன்ற குடும்பத்தில் உள்ளோர், 30 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒரு முறை, சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வதும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெறுவதும் நல்லது.3 சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?சர்க்கரை நோய் தான், மற்ற நோய்கள் வர, 40 முதல் 60 சதவீதம் காரணம். இதய நோய், சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு, நரம்பு பாதிப்புகள், ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் வரும். எனவே, இது போன்று, பக்க விளைவுகளால் ஏற்படும் நோய் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை அவசியம்.4 கால்களை அகற்றும் நிலை வரும்; பார்வை பறிபோகும் என்பது உண்மையா?கண் பாதிப்பில் அலட்சியம் காட்டினால், பார்வை பறிபோக வாய்ப்புள்ளது. நரம்பு பாதிப்புள்ளோர், தரையில் நடந்து செல்லும் உணர்வு கூட இல்லாமல், குடிபோதையில் தள்ளாடுவது போல் நடந்து செல்வர். ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, அதை கவனிக்காமல் விட்டால், ரத்த ஓட்டம் ரத்தாகி கால்களை எடுக்கும் நிலை வரலாம்.கால் வீக்கமடைதல், சிறுநீரில் புரதம் வெளியேறுதல் போன்றவை, கிட்னி பாதிப்பின் அறிகுறிகள். கவனிக்காமல் விட்டால், 'டயாலிசிஸ்' என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வரை சென்று விடும். சர்க்கரை நோயால், இதய நோய்கள், மாரடைப்பு ஏற்பட்டு சிக்கலாகும் நிலையும் வரலாம்.5. சர்க்கரை நோய்க்கு வேறு ஏதும் காரணம் உண்டா?ஆஸ்துமா, மூட்டுவலி, கை, கால் வலிக்கென போடப்படும், 'ஸ்டிராய்டு' மாத்திரைகளும், சர்க்கரை நோய் பாதிப்புக்கு காரணமாக உள்ளன. உணவு பழக்க வழக்கத்திலும் மாற்றம், உடல் பருமன் அதிகரிப்பும் இதற்கு காரணம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்; அலட்சியமாக இருந்தால், பக்க விளைவுகளால் ஏற்படும் நோய்களால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.6. சர்க்கரை அளவு எந்த அளவில் இருக்க வேண்டும்?சாப்பிடுவதற்கு முன் எடுக்கப்படும் பரிசோதனையில், சர்க்கரை அளவு, 100க்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின் எடுக்கும் பரிசோதனையில், 140 - 160 என்ற அளவிலும் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், 130/80 என்ற அளவில் இருப்பது நல்லது.'ஹெச்பிஏ1சி' எனப்படும், 'கிளைகோஸ்டல் ஹீமோகுளோபின்' பரிசோதனை செய்யப்படுகிறது. இது, ஆறு வார ரத்தத்தில் சர்க்கரை அளவைக் காட்டிவிடும். இந்த அளவு, 7 என்ற அளவில் இருக்க வேண்டும்.7. சர்க்கரை அளவு அதிகரித்தால் என்ன செய்வது?வேறு வழியே இல்லை. இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளோர் வாழ்நாள் முழுவதும், மாத்திரை சாப்பிட வேண்டும். இடையில், சர்க்கரை அளவு எனக்கு குறைவாக இருக்கிறது என, மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடக் கூடாது. அது, எதிர்பாராத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.8. இந்த சிக்கலில் இருந்து தப்ப என்ன தான் வழி?'பாஸ்ட்புட், பீட்சா, பர்கர்' என, உணவு பழக்க வழிமுறைகள் மாறியுள்ளது ஆபத்தானது. இத்தகைய உணவுகளை கைவிடுவது நல்லது. மதியம் ஒருநேரம் மட்டுமே, அரிசி உணவை சாப்பிட வேண்டும். இரவு நேரங்களில், சப்பாத்தி, கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.உடல் பருமன் அதிகரிக்காமல், தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். பழங்கள், காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக, சர்க்கரை அளவு அதிகம் உள்ள மாம்பழம், பலாப்பழம், அன்னாசி போன்ற பழங்கள் சாப்பிடக் கூடாது. மது குடிப்பது, புகைப் பழக்கம் உள்ள சர்க்கரை நோயாளிகள், அவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வந்துள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது, பாதிப்பின் தன்மையைக் குறைக்கும்.டாக்டர். எம்.எட்வின் பெர்னாண்டோ, சிறுநீரகவியல் துறைத் தலைவர்,ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சென்னை.