எலும்புகளை வலிமைப்படுத்துமா கால்சியம்?
பல நோய்களுக்கும் காரணமாக விட்டமின் குறைபாடு தான் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா... விட்டமின் சி மாத்திரை, எலும்புகள் வலிமையாக இருக்க, விட்டமின் டி, கால்சியம் மாத்திரைகள் என்று எந்த உடல் பிரச்னையாக இருந்தாலும், சரி செய்வதற்கு அல்லது வருமுன் தடுப்பதற்கு விட்டமின் மாத்திரைகளும், 'சப்ளிமென்ட்' என்று சொல்லப்படும் இணை உணவுகளும் தான் பரிந்துரைக்கப்படுகின்றன.இவை எந்த அளவு பலன் தரும்?சமீபத்தில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வில், விட்டமின் மாத்திரைகளும், இணை உணவுகளும் மிகச் சிறிய சதவீதமே பலன் அளிப்பதாக கூறுகிறது. இந்த ஆய்வில், விட்டமின்களால் பலன் இருக்கிறதா என்பதற்கு, எந்த ஆதாரமும் உறுதியாக கிடைக்கவில்லை; ஆனால், பலன் தரும் என்று உபயோகத்தில் உள்ள சில விட்டமின் மாத்திரைகளால், எந்த பலனும் இல்லை என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.உதாரணமாக, 'பீட்டா கரோட்டின்' சேர்ந்த அல்லது சேராத விட்டமின் ஏ மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவதால், இதய நாளங்களில் பிரச்னை ஏற்படும். விட்டமின் இ மாத்திரை சாப்பிடுவது, எந்த விதத்திலும் 'கேன்சர்' வருவதைத் தடுக்காது. ஆனால், கர்ப்பிணிக்கு இரும்பு சத்து, போலிக் அமில மாத்திரை சிபாரிசு செய்வதை, இந்த ஆய்வு எந்த விதத்திலும் தவறாக சொல்லவில்லை. விட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களை பெற சிறந்த வழி, காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் இடம் பெறும் சமச்சீரான உணவு தான்.- 'ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்!'