"குறட்டையால் ஆப்பரேஷன் தடைபடுமா
* ஐம்பது வயதான எனது வயிற்றில் கட்டி இருந்தது. 10 நாட்களுக்குள் அதை அகற்ற வேண்டும் என டாக்டர் கூறினார். ஆனால் உடல் எடை, குறட்டை அதிகமாக உள்ளது போன்ற காரணங்களால், அவற்றை ஒருமாதத்திற்குள் குறைத்துவிட்டு, பின்னர் ஆப்பரேஷன் செய்தால் முன்னேற்றம் இருக்கும் என்கிறார். குறட்டைக்கும், ஆப்பரேஷனுக்கும் என்ன தொடர்பு உள்ளது?பொதுவாக ஆப்பரேஷனுக்குப் பின்னர், நோயாளிகளிடம் குறட்டை காணப்படும். இதற்கு காரணம், ஆப்பரேஷனுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளும், வலி மருந்துகளும்தான். இதனால் தொண்டையின் தசைகள் மிகவும் தளர்வதால், குறட்டை ஏற்படுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை ஆக்ஸைடு அளவு கூடுகிறது.இதனால் 'நான் இன்வேசிவ் வென்டிலேட்டர்' போன்ற கருவிகளின் உதவி தேவைப்படுகிறது. உங்களுக்கு ஆப்பரேஷனுக்கு முன்னரே குறட்டை ஏற்படுவதால், உங்கள் உடல்நிலை மேலும் நலிவடையக் கூடும். ஆகையால் ஒரு மாதத்திற்குள் உங்கள் குறட்டை மற்றும் உடல் எடையை குறைத்தால் ஆப்பரேஷனுக்கு பின்னர் உங்கள் உடல்நிலை மிகவும் எளிதாக சீரடையும். ஆகையால் பொதுவாக அனைவரும் எப்போதும், தம் உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை வைத்துக் கொள்வது நல்லது.* எனது வயது 35. பத்து ஆண்டுகளாக ஆஸ்துமா உள்ளது. மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, உறங்குவது மூலமாக ஆஸ்துமா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதா? ரத்ததானம் மூலம் ஆஸ்துமா பரவுமா?நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக உறங்குவது மூலமாகவோ, சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது மூலமாகவோ கண்டிப்பாக ஆஸ்துமா பரவாது. ஆனால் பரம்பரை வழியாக உங்களுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்தும் 'ஜீன்', உங்கள் குழந்தைகளுக்கும் இருந்தால் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்ததானத்தால் ஆஸ்துமா கண்டிப்பாக பரவாது.* எனது வயது 45. கடந்த ஒருமாதமாக இரவில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?இரவில் மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் இருதயத்தில் நோய் ஏற்பட்டு இருந்தால், இரவில் மூச்சுத் திணறல் ஏற்படலாம். காது, மூக்கு, தொண்டையில் இன்பெக்ஷன் இருந்தால், படுத்தவுடன் தொண்டையில் இருந்து நீர், நுரையீரலுக்குள் சென்று மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். நுரையீரல் சம்பந்தமான நோய் இருந்தாலும், உங்களுக்கு இரவில் படுத்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் நீங்கள் உங்கள் நுரையீரல், காது, மூக்கு, தொண்டை மற்றும் இருதய பரிசோதனைகளை செய்து, மூச்சுத் திணறலுக்கான காரணத்தை கண்டறிவது நல்லது.டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147