உள்ளூர் செய்திகள்

குளூக்கோசை கட்டுப்படுத்தும் பலாக்காய் பொடி!

தினசரி உணவில் அரிசி மாவு அல்லது கோதுமை மாவைக் குறைத்து, அதற்கு பதிலாக, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பலாக்காய் பொடியை சேர்த்து சாப்பிட்டால், ரத்த குளூக்கோஸ் அளவு கணிசமாகக் குறைவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த ஆராய்ச்சியில், 'டைப் - 2' சர்க்கரை கோளாறு உள்ள 40 பேர் பங்கெடுத்து உள்ளனர். தினமும் அவர்களுக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பலாக் காயின் பொடி தரப்பட்டது. அதன் பின் பரிசோதித்ததில், அவர்களின் மூன்ற மாத ரத்த குளூக்கோஸ் சராசரி அளவான 'ஹெச்பிஏ1சி' கணிசமாக குறைந்து உள்ளது. 18 - 60 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆய்வு, கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் - 2020 பிப்ரவரி வரை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர் ஏ.கோபால் ராவ், கே.சுனில் நாயக், புனேவின் செல்லா ராம் மற்றும் டயாபடிக் மையத்தின் டாக்டர் ஏ.ஜி.உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.'டைப் - 2 சர்க்கரை கோளாறு, பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் நம் நாட்டில், இது போன்ற பாரம்பரிய முறைகள் பலன் தரும் என்பது, அறிவியல் பூர்வமாக உறுதியாவது, நமக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். ஆரம்ப கட்ட முடிவுகள் மேற்கொண்டு, ஆராய்ச்சியை தொடர நம்பிக்கை தருகின்றன' என்று, இவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர். தினசரி சாப்பிடும் உணவில், பலாக்காயின் பொடியை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.- 'தி நேச்சர்' மருத்துவ இதழ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !