உள்ளூர் செய்திகள்

கிரைப் வாட்டர் என்னும் பூச்சிக் கொல்லி மருந்து!

குழந்தை அழுதாலே 'கிரைப் வாட்டர் கொடு... நீ, குழந்தையாக இருந்தப்ப அது தான் கொடுத்தேன்...' என்று அழும் குழந்தைக்கு, கிரைப் வாட்டர் தரும் பழக்கம் பல தலைமுறைகளாக நம்மிடம் இருப்பதைப் போன்ற நம்பிக்கையை தருகின்றனர்.இதை தருவதால் எந்தவித பலனும் கிடைக்காது என்பதோடு, குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதை குடிக்கும் குழந்தைக்கு, பின்னாளில் தீவிரமான உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதில் சேர்க்கப்படும் பிரதானமான வேதிப் பொருளான 'புரோனோபோல்' அதிக நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி. இது, செரிமான மண்டலத்தில் தீவிர நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்; உடல் எடை குறையும்; கேன்சர் வருவதற்கான அபாயம் அதிகம்; சில சமயங்களில் இறப்பையும் ஏற்படுத்தலாம்.பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இது, கிரைப் வாட்டரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மற்ற வேதிப் பொருட்களான, 'மெத்தில் பாராபென், நா பென்சோயேட்' ஆகியவையும் அபாயகரமானவை.* புரோனோபோல் குறித்து, ஆய்வுக் கூடத்தில், விலங்குகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், தொடர்ந்து இதை பயன்படுத்தினால், தோலின் மேல்புறத்தில் நச்சுத் தன்மை உண்டாகிறது. தொடர்ந்து எலிகளுக்கு 90 நாட்கள் இந்த வேதிப் பொருளை கொடுத்ததில், தீவிரமான செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தியது. அதே போல நாய்களுக்கு கொடுத்த போது கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்பட்டு உள்ளது. முயல்களுக்கு கொடுத்துப் பார்த்ததில், அதன் உடல் எடையில், 1 கிலோவிற்கு 2 மி.கிராம் என்ற அளவில் நச்சு சேர்ந்து உள்ளது.நீண்ட நாட்கள் இதைக் கொடுத்ததில், வயிற்றில் புண் ஏற்பட்டதுடன், கேன்சர் செல்களும் உருவாகின. 25 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.விளம்பரங்களைப் பார்த்து கிரைப் வாட்டர் தருவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.டாக்டர் அருண்பாபு திருநாவுக்கரசு, தலைவர், குழந்தைகள் நலப் பிரிவு, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் - எய்ம்ஸ், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !