உடல் நலம் காக்க தினம் ஒரு கொய்யா!
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும், கொய்யா பழத்தை, தினமும் மதிய உணவுடன், 200 கிராம் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்திலிருக்கும், வைட்டமின் சி போல, கொய்யா பழத்தில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின், நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிடுவதால், மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, கொய்யாப் பழங்களை தினமும் சிறிதளவு கொடுப்பதால், பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாகிறது. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு, இவை பெரிதும் உதவுகிறது. கொய்யா மரத்தின் இலைகளை, அரைத்து காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறி விடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யா இலைகள் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் இரண்டு முறை, குருமிளகு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறுடன் கனிந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து குடித்தால், உடல் வலுப்பெறும். ஒரு மாதத்துக்கு தொடர்ந்து மதிய உணவுக்கு பின், 250 கிராம் கொய்யா பழத்தை எடுத்துகொண்டால் உடலில் அரிப்புகள் குணமாகும். பெண்களின் வயிற்று வலிக்கு, எட்டு முதல் பத்து கொய்யா இலைகளை நன்றாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால், வயிற்று வலி குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு, கொய்யா பழத்தின் விதைகளை நீக்கி, அதனுடன் நான்கு சொட்டு பூண்டு சாறு கலந்து வெறும் வயிற்றில் இரண்டு நாட்கள் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்து சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும். கொய்ய பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. கொய்யாவின் தோலில் அதிகசத்துக்கள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்துக்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. உணவருந்துவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிடாலம். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.