சர்க்கரை கோளாறு குழந்தைகளையும் பாதிக்கும்!
ஆண்டுதோறும் சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. 10 – 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சர்க்கரை கோளாறால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ‘டைப் – 1’ சர்க்கரைக் கோளாறு என்பது கணையம், இன்சுலின் ஹார்மோனை அறவே சுரக்காத நிலை இது. இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்வது ஒன்று தான் இதற்கு தீர்வு. பிறந்த குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். ‘டைப் –2’ சர்க்கரை கோளாறு என்பது கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது. சிலருக்கு இன்சுலின் சுரந்தாலும், அது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வேலையை சரிவர செய்யாது. வாய் வழியாக மருந்துகளை சாப்பிட்டு, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். மரபியல் காரணிகளால் வரும் சர்க்கரை கோளாறை டைப் – 1 அல்லது டைப் – 2 என்றும், பிறந்த ஆறு மாதங்களுக்குள் சில குழந்கைளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை, டைப் – 1 சர்க்கரை கோளாறு என்றும், பல நேரங்களில் தவறாக முடிவு செய்கின்றனர். இன்னும் சிலருக்கு, வேறு பல காரணங்களால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பது தெரிந்தாலே, டைப் – 2 சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு குறைந்த அளவு மருந்து அல்லது பல நேரங்களில் மருந்து இல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தாலேயே, ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்து விடும். எனவே, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலே, சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்யாமல், என்ன நிலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அளவிற்கு அதிகமாக தாகம், உடல் எடை குறைவது, பொதுவான அறிகுறிகள். இவற்றை கவனிக்காமல் விட்டால், ‘டயாபடிக் கீடோஅசிடோசிஸ்’ என்ற இன்சுலின் பற்றாக்குறையால் ரத்தத்தில் ‘கீடோன்’ எனப்படும் அமிலங்கள் அதிகமாக சேர்ந்து, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்படலாம். வளரும் பருவத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவை குழந்தைகளுக்கு தர வேண்டும். அதே நேரம், வெள்ளை நிற உணவுகளான வெள்ளை ரொட்டி, சர்க்கரை, மைதா, பாஸ்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன், சுத்திகரிக்கப்பட்ட மாவு, வெள்ளை சர்க்கரையில் செய்த உணவுகளான பிஸ்கட், கேக், சாக்லேட் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்; இவை ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் தர வேண்டும். இவற்றில், விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒவ்வொரு உணவிலும் முழு தானியங்கள், காய்கறிகள் இடம் பெற வேண்டும். நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால், ரத்த சர்க்கரை அளவு குறைந்து, ‘ஹைப்போகிளைசீமியா’ என்ற நிலை ஏற்படலாம். டைப் – 1கோளாறு இருக்கும் குழந்தைகள், அடிக்கடி ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப, உணவு பழக்கம் இருக்க வேண்டும். இன்சுலின் உட்பட டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை கோளாறு 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்து, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காமல் இருந்தால், ரத்த நாளங்களை அதிகமாக பாதிக்கும். இதனால், கண்கள், சிறுநீரகங்கள், நரம்பு மண்டல பாதிப்புகள் வரலாம்.