குழந்தைகளுக்கு வரும் ஹார்ட் - அட்டாக்!
சமீப வாரங்களில் ஹைதராபாத், பெங்களூரு என்று எதிர்பாராத விதமாக மாரடைப்பால் குழந்தைகள் உயிரிழந்த செய்திகளை பார்க்கிறோம். குழந்தைகளுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருமா டாக்டர் என்பது தான் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி.பிறவி இதயக் கோளாறுகள், குறிப்பிட்ட வயது வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் குழந்தைகளுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு உள்ளது. இதை, 'சடன் கார்டியாக் டெத் இன் சில்ரன்' என்று சொல்வோம். பெரும்பாலும் இது போன்ற குழந்தைகளுக்கு, கரு உருவாகும் போதே இதயத்தில் ஓட்டை, வலது இடது அறைகள் மாறியிருப்பது, பிரதானமான ரத்தக் குழாய் இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், வேறு இடத்தில் இருப்பது போன்ற கோளாறுகள் இருந்திருக்கலாம். இவற்றை சிக்கலான பிறவி இதயக் கோளாறுகள் என்று சொல்வோம்.வேறு சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத் தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால், இதயம் இயல்பை விடவும் பெரிதாகி விடும். இந்நிலையில், சிலருக்கு இதயத் தசைகள் மெல்லிசாக பலுான் மாதிரியும், சிலருக்கு மாட்டுக் கறி போன்றும் அடர்த்தியாகி விடலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபடலாம்.சிலருக்கு இதயத் தசைகள் சுருங்கி, விரியும் போது ரத்த நாளங்களை பாதிக்கலாம். இது போன்ற பிரச்னைகள், குழந்தைகளுக்கு மரபியல் காரணிகளால் வரும்.இது போன்ற குழந்தைகளுக்கு, இதயத்தில் துடிப்பு உருவாகும் போதே லப்-டப் என்று சீராக இல்லாமல், அசாதாரணமாக இருக்கும். மரபியல் காரணி தவிர, கால்சியம் படிவது, துடிப்பு உருவாவதிலேயே பிரச்னை இருக்கலாம். இவர்களுக்கு 'ஈசிஜி' எப்போதும் இயல்பாக இருக்காது. மேலும், கீழும் ஒரே சீராக இதயத் துடிப்பு இருந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். சீரற்ற துடிப்பு இருந்தால், ரத்தம் இதயத்தில் இருந்து வெளியில் போகாது; இதயத் தசைகள் சுருங்கி விரியும் நேரம் இயல்பைவிட அதிகமாகும். இது மாதிரி நேரங்களில் ரத்தம் எல்லா இடத்திற்கும் போகாது. இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இவையெல்லாம் அபூர்வமாக நடக்கும் சம்பவங்கள்.பிறவி இதயக் கோளாறு இருக்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளை காட்டிலும் மெதுவாக செயல்படுவர். ஓடியாடி விளையாடாமல், இருந்த இடத்திலேயே விளையாடுவதையே விரும்புவர். ஓடியாடினால் அதிகமாக மேல் மூச்சு வாங்கும். ஓடிவிட்டு தரையில் காலை மடக்கி அமர்ந்தால், இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இயல்பாகி விடுவர். சில குழந்தைகள் ஓடிவிட்டு அமர்ந்தால் உதடு, விரல் நுனி, வாய் ஊதா நிறமாக மாறும். பால் குடிக்கும் குழந்தைக்கு நெற்றியில் அதிகமாக வியர்க்கும்.கரு உருவான 18 -- 20வது வாரத்தில் செய்யப்படும் 'அனாமலி' எனப்படும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனையில், இதய செயல்பாட்டில் பிரச்னை இருந்தால் தெரியாது. குழந்தை பிறந்த பின் செய்யப்படும் பரிசோதனைகளில் பிரச்னை இருக்கிறதா என்பதை ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்தாலே, இதயத்தில் வேறுபாடு இருக்கிறதா என்பது தெரிந்து விடும்.எதிர்பாராத சமயத்தில் குழந்தை நிலைகுலைந்துவிட்டால், கழுத்தில் துடிப்பு பல்ஸ் உணர முடிகிறதா என்று பார்க்க வேண்டும். துடிப்பை உணர முடியாவிட்டால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இடைப்பட்ட நேரத்தில், சமதளமான மேஜையில் படுக்க வைத்து, விலா எலும்புகளை அழுத்தி மசாஜ் கொடுக்க ஆரம்பிக்க வேண்டியது முக்கியம். நிமிடத்திற்கு 100 மசாஜ் கொடுத்தால், இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.டாக்டர் டி.செந்தில்குமார், இதய, நுரையீரல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,ரேலா மருத்துவமனை, சென்னை info@relahospitals.com