உள்ளூர் செய்திகள்

"சைலன்ட் கில்லர் ஆகும் உயர் ரத்த அழுத்தம்

'சைலன்ட் கில்லர்' என, கூறப்படும், உயர் ரத்த அழுத்தத்தை ஆரம்ப நிலையில் கண்டு கொள்ளாமல் விட்டால், மூளைக்கு செல்லும் ரத்த குழாயை சேதமடைய செய்து, ரத்தக் கசிவு ஏற்படுத்தி, பக்கவாதத்தில் படுக்க வைத்து விடும்1. மனித உடலின் இயல்பான ரத்த அழுத்தம், 120/80 என்பதன் அர்த்தம் என்ன?இதயத்தில் இருந்து, உடலின் மற்ற உறுப்புகளுக்கு, ரத்த குழாய்கள் மூலம், ரத்தம் செல்கிறது. அப்போது, அந்த குழாய்களில், ரத்த ஓட்டத்தால் ஏற்படும் அழுத்தம், ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதய தசை சுருங்கும் போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால், குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அழுத்தமும் அதிகரிக்கிறது. இதுவே தசை விரியும் போது, ரத்தம் இதயத்தில் வந்து நிரம்புவதால், குழாய்களில் ரத்த அழுத்தம் குறைகிறது. தொடர்ந்து இப்படி நடப்பதால், சாதாரணமாக ரத்த அழுத்தத்தை குறிக்க இரண்டு எண்கள் தேவைப்படுகின்றன. உதாரணத்திற்கு 120/80 என்பது, இயல்பான ரத்த அழுத்தம் உள்ளவர்களின் அதிகபட்ச/குறைந்தபட்ச அழுத்தத்தை குறிக்கும். இதை கணக்கிட பாதரசம் நிரப்பப்பட்ட ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. கருவியில், 120 என்பது, 120 மில்லி மீட்டரை குறிக்கிறது. அதாவது, அதிகபட்ச ரத்த அழுத்தம் பாதரசத்தை, 120 மில்லி மீட்டர் வரை, கருவியில் உயர செய்கிறது. இயல்பான அளவான 120/80 என்பது, 140/90 , 160/100 என, அதிகரித்துக் கொண்டே இருந்தால், அது உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு அறிகுறியாகும்.2. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?உலகளவில், சராசரியாக, மூன்றில் ஒருவருக்கு, உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில், 20 சதவீதத்தினர், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டோர் என்பது வருந்தத்தக்கது. 'சைலன்ட் கில்லர்' என, கூறப்படும், உயர் ரத்த அழுத்தத்தை ஆரம்ப நிலையில் கண்டு கொள்ளாமல் விட்டால், மூளைக்கு செல்லும் ரத்த குழாயை சேதமடைய செய்து, ரத்தக் கசிவு ஏற்படுத்தி, பக்கவாதத்தில் படுக்க வைத்து விடும். ஒவ்வொருவரின் உடல் தன்மையை பொறுத்து, நாளடைவில், இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பது, கண் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளும், இதனால் ஏற்படும்.3. உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?தினமும் குறைந்தபட்சம், 4 கி.மீ., நடைபயிற்சி, உணவில் உப்பின் அளவை குறைப்பது, மது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், இளநீர், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றால், உயர் ரத்த அழுத்தம் வராமல் தவிர்க்கலாம்.இவற்றுடன், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.4. உயர் ரத்த அழுத்தம் எதனால் வருகிறது?அன்றாட உணவில், 2 கிராம் முதல், 4 கிராம் வரை தான், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், நம் உணவு முறையில், தினமும், 6 கிராம் முதல், 8 கிராம் வரை, உப்பு சேர்க்கப்படுகிறது. உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் உப்பு, கொழுப்பு சத்து, உடல் பருமன் போன்றவற்றால், ரத்த குழாய்களின் நெகிழ்வுதிறன், பாதிக்கப்படுகிறது. இதனால், கூடுதல் அழுத்தத்துடன் ரத்தத்தை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு, இதயம் தள்ளப்படுகிறது. இதை தான் உயர் ரத்த அழுத்தம் என்கிறோம்.5. மாரடைப்பு வர என்ன காரணம்?கொழுப்பு சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உட்கொள்வோருக்கு, இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிகிறது. இதனால், நாளடைவில், இதயத்திற்கு சீராக ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலைக்கு ஆளானவர்களுக்கு, மன அழுத்தம், அதீத கோபம் போன்றவை ஏற்படும்போது, இதய ரத்தக் குழாயில், ரத்தம் செல்வது முற்றி<லும் தடைப்பட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. எண்ணெய் வகை உணவுகள், மாமிசம் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம், மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.6. குறைந்த ரத்த அழுத்தம் எதனால் வருகிறது?மனித உடலின் இயல்பான ரத்த அழுத்தமான, 120/80, 100/70க்கும், அதற்கு கீழும் குறைவது, குறைந்த ரத்த அழுத்தம் எனப்படுகிறது. வாந்தி, வயிற்றுப் போக்கு, அதிகமான வியர்வை வெளியேற்றம் போன்றவற்றால், உடலில் நீர் சத்து குறையும் போது, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. தினமும், 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பவர்களுக்கு, இப்பிரச்னை வர வாய்ப்பில்லை. உயர் ரத்த அழுத்தத்தை, அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளாமல், அதற்கான மாத்திரையை, மாதக்கணக்கில் உட்கொள்பவர்களுக்கும், குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.7. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், நாடித் துடிப்பு எண்ணிக்கை வேறுபடுமா?பெரியவர்களுக்கு, ஒரு நிமிடத்திற்கு, 72 முறை நாடித் துடிப்பு இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, பச்சிளம் குழந்தைகளுக்கு, அவை பிறந்து, ஒரு வயது வரை, 150 வரை, இருக்கலாம். இது, படிப்படியாக குறைந்து, குழந்தைகள், 8 வயது நிரம்பும்போது, அவர்களின் நாடித் துடிப்பும், நிமிடத்திற்கு, 72 முறை என்ற நிலையை அடையும்.டாக்டர் ராமலிங்கம்,மருத்துவ துறை உதவி பேராசிரியர்,ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை. 99945 27445


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்