ஒரு அம்மாவுக்கு தான் எத்தனை சந்தேகங்கள்!
குழந்தை பராமரிப்பில் தாயை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக, தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருளாக, உலக சுகாதார மையம், தாய்ப்பால் தருவதை செயல்படுத்துவதில், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் பங்கு என்று கூறுகிறது. நம்முடைய குடும்ப அமைப்பு மாறிவிட்டது. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து, 35 வயதிற்கு மேல் குழந்தை பெறுகின்றனர். பெண்ணின் தாய்க்கு 65 வயதிற்கு மேல் இருப்பதால், அவரால் உதவி செய்ய முடியவதில்லை. தற்போதுள்ள பொருளாதார நிலையில், எல்லாவற்றிற்கும் வேலைக்கு ஆள் வைப்பது முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணிற்கு மற்ற வீட்டு பொறுப்புகள் எதுவும் தராமல், வீட்டு வேலைகள் செய்வது, குழந்தையை துாக்கி வைத்து நடப்பது, சமையலில் உதவ என்று பாலின பாகுபாடு பார்க்காமல், குழந்தை பெற்ற பெண்ணின் கணவர், சகோதரர், தந்தை, மாமனார் என்று குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் உதவ வேண்டும். பிரசவ கால நலத்திட்ட விதிகள்தனியார் நிறுவனங்களால் பிரசவ கால விடுப்பு ஆறு மாதங்கள். அரசு அலுவலகங்களில் 12 மாதங்கள் விடுப்பு தரப்படுகிறது. அரசு, தனியார் அலுவலகங்களில் 'நர்சிங் பிரேக்' என்று உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்களை ஒரு நாளில் இருவேளை ஒரு மணி நேரம் சென்று வர அனுமதிக்கலாம்.ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 பெண்கள் வேலை செய்தால், குழந்தைகளை பராமரிக்கும் 'கிரச வசதி இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில், விதிகள் நன்றாகவே உள்ளன. சரியாக செயல்படுகிறதா என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. பெண்களுக்கான நலத் திட்டங்கள், வெறுமனே திட்டம், விதியோடு நிற்காமல் சரியாக செயல்படுகிறதா என்பதையும் அரசு தான் கண்காணிக்க வேண்டும். நடைமுறையில் யாரும் இதை செய்வதில்லை என்பது தான் யதார்த்தம்.ஆதரவு வாட்ஸாப் குழுகுழந்தையின் செய்கைகளை புரிந்து கொள்வதற்கு தொடர் மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. எங்கள் மையத்தில், 500 ரூபாய் கட்டணத்தில், 'சப்போர்ட் வாட்ஸாப் குரூப்' உள்ளது. இதை துவக்கிய பின்பே, குழந்தை பராமரிப்பில் ஒரு தாய்க்கு எத்தனை சந்தேகங்கள் வருகிறது என்று புரிந்தது. கர்ப்பிணியை உட்கார வைத்து ஒரு மணி நேரம் பேசி அனுப்பினால், வீட்டிற்கு சென்றதும், குழந்தைக்கு 15 நிமிடங்களாக விக்கல் நிற்கவில்லை. பால் கொடுக்கவா, விக்கல் நின்றவுடன் தருவதா என்று மெசேஜ் போடுவர். விக்கல் எடுத்தாலும் பரவாயில்லை; பால் கொடுங்கள் என்று பதில் அனுப்பினால் தருவர். தவறாக செய்து விடுவோமோ என்ற பயம். இதனாலேயே 1,000 கேள்விகள் கேட்பர். தனிப்பட்ட ஈடுபாட்டால், சிட்டி போலீஸ் மருத்துவமனையில் ஆதரவு குழுவின் அவசியம் பற்றி விளக்கினேன். உடனே செயல்படுத்தினர். அரசு மருத்துவமனைகளில் 104 என்ற உதவி எண் உள்ளது. இப்படி ஒரு உதவி எண் இருப்பதும் பலருக்கு தெரியாது. தொடர்பு கொள்பவர்களுக்கும் சரியான பதிலும் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு, பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட, சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய பெண்கள் அதிகம் வருகின்றனர். இவர்கள் நம்பி இருப்பது மருத்துவக் காப்பீடு. இதில், தாய்ப்பால் குறித்த மருத்துவ ஆலோசனையும் மேற்கத்திய நாடுகளைப் போன்று சேர்த்தால் இவர்களும் பலன் அடைவர். டாக்டர் ஜெ.ஜெயஸ்ரீ,மகப்பேறு மற்றும் பாலுாட்டுதல் மருத்துவ ஆலோசகர், சென்னை