கர்ப்ப கால சர்க்கரை கோளாறு தடுப்பது எப்படி?
சமீப காலமாக கர்ப்ப கால சர்க்கரை கோளாறு அதிகரித்து வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு சதவீதமாக இருந்த கர்ப்ப கால சர்க்கரை கோளாறு, தற்போது 20--25 சதவீதமாக அதிகரித்து உள்ளது. சிலருக்கு திருமணத்திற்கு முன், கர்ப்பத்திற்கு முன்பு கூட இந்நோய் வந்து விடுகிறது. கர்ப்ப கால சர்க்கரை கோளாறைத் தடுக்க, 20 வயதில், குறிப்பாக ரத்த சொந்தங்களுக்கு சர்க்கரைக் கோளாறு இருந்தால், ஆண்டிற்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்வது அவசியம். ரத்த சர்க்கைரயின் அளவு சாப்பிடும் முன் 100 எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக, சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், 140 எம்ஜி/டிஎல் என்ற அளவிற்கு குறைவாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது திருமணமாகி, கர்ப்பம் தரித்தபின் பரிசோதனை செய்யும் போது சிலருக்கு ஹெச்பிஏ1சி எனப்படும் சராசரி ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாக, ஏழு சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. இதனால் பிறக்கும் குழந்தைக்கு பல இன்னல்கள் வருகின்றன. திருமணத்திற்கு முன் சர்க்கரை கோளாறு இல்லாவிட்டால், திருமணத்திற்கு பின் கர்ப்பம் தரித்த, எட்டாவது வாரத்தில் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின், பரிசோதனை செய்வது நல்லது. கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சி, செயல்பாட்டிற்கு தேவையான குளூக்கோஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு செல்வதால், சாப்பிட்ட பின் தாயின் ரத்த சர்க்கரை அளவு 110 எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அதன்பின், 12, 16, 24, 32 வது வாரங்கள் என்று கர்ப்ப காலம் முழுதும் 110 எம்ஜி/டிஎல் என்ற அளவிற்குள் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும். எட்டாவது வாரத்தில் 110 --120எம்ஜி/டிஎல் இருந்தால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து, மெட்பார்மின் என்ற மாத்திரையை 250 மி.கி - 500 மி.கி வரை தினமும் இரு வேளை எடுத்துக்கொண்டு மாதம் ஒருமுறை பரிசோதனை செய்து கர்ப்ப காலம் முழுதும் 110 எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். எட்டாவது வாரத்தில் ரத்த சர்க்கரையின் அளவு 120 எம்ஜி/டிஎல் அளவிற்கு அதிகமாக இருந்தால், மெட்பார்மின் மாத்திரையுடன், இன்சுலின் ஊசி மருந்தை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கர்ப்ப காலம் முடியும் வரை, 110 எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக வைத்திருப்பது அவசியம். ஏன் எட்டாவது வாரத்தில் பரிசோதனை? தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள், 11வது வாரத்தில் செயல்பட ஆரம்பிக்கும். தாயின் சர்க்கரை அளவு 110எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தையின் பீட்டா செல்கள் இயல்பாக செயல்படும். இதற்கு மேல் இருந்தால், இன்சுலின் அதிகம் சுரந்து, தாயின் குளூக்கோஸை அதிகமாக பயன்படுத்தி, பிறவி கோளாறுகளுடன் குழந்தை பிறக்கலாம். ஆரோக்கியமாக பிறந்தாலும், 17 வயதிற்கு பிறகு சர்க்கரை நோய், உடல் பருமன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகள், திருமணத்திற்கு முன்பே சர்க்கரை நோய் உள்ளவர்களாகவும் மாறுகின்றனர். டாக்டர் அ.பன்னீர் செல்வம், நீரிழிவு நோய் மருத்துவர், சென்னை 044 23745969, 99400 42641drapselvam58@yahoo.com