உள்ளூர் செய்திகள்

இயற்கை உணவுக்கு திரும்புவது எப்படி?

இயற்கை முறை உணவுக்கு திரும்புவது எப்படி, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து, இயற்கையான காய், கனி ரசங்களை குடித்து வந்தால் பல நோய் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.வில்வ இலை சாறு, அருகம்புல் சாறு, கறிவேப்பிலை சாறு, புதினா, வெண்பூசணி அல்லது வாழைத்தண்டு சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஏதோ ஒன்றை, தினமும் காலையில் மாற்றி மாற்றி குடித்து வந்தால் நோய் நெருங்காது. காலையில் நேரம் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடித்து இரண்டு மணிநேரத்திற்கு பின் 2வது சாறு குடிக்கலாம். அதன் பிறகு ஒன்றரை மணி நேர இடைவெளியில் காலை உணவு உண்ணலாம். நேரம் இல்லையெனில் ஏதாவது வகை சாறு மட்டும் குடித்து விட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். வில்வ இலை சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது. காலை 9:00 மணிக்கு, பச்சைக் காய்கறி கலவை அல்லது பழங்கள், இதில் முழுமையான பச்சைக் காய்கறிகளை மட்டும் வைத்து செய்த கலவை அல்லது முழுமையான பழ வகைகள், இந்த இரண்டில் ஏதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடலாம்.புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் சிறிது நாட்களுக்கு காலையில் பழங்கள் மட்டும் உண்ணலாம். பின்னர் சிறிது நாட்கள் காய்கறி கலவை மற்றும் பழ வகைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு பழகவும். அதன் பின்னர் காய்கறி கலவை மட்டும் தொடர்ந்து காலை உணவில் சாப்பிடுவது நல்லது. கேரட், முட்டைக்கோஸ், முளைகட்டிய பச்சைப்பயறு கலவை. செளசெள, முள்ளங்கி பீட்ரூட் கலவை. காலிபிளவர் குடைமிளகாய் கலவை நல்லது. எதற்கும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காய்கறிகளில் ஆறு சுவைகளும் உள்ளன.புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் முதல், 1 அல்லது, 2 வாரங்கள் காலை உணவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது. அதன் பின்னர் காய்கறி சாலட் சாப்பிடத் தொடங்கலாம். முடிந்த வரை அந்தந்த பருவ காலத்தில் அந்தந்த பகுதிகளில் விளையக் கூடிய பழங்களை சாப்பிடுவது உத்தமம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை தவிர்க்கவும். ஏதாவது ஒரு வகையான பழம் மட்டும் உண்பது சிறந்தது. உதாரணம்: ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, மாம்பழம், சப்போட்டா ஆகியவை சாப்பிடலாம்.மதியம் 1:00 முதல் 1.30 மணிக்குள் சாத்வீக உணவு: மதியம் சாத்வீகமாக சமைத்த உணவு உண்ணலாம். சாத்வீக உணவில் எண்ணெய் மற்றும் புளி சேர்க்கக் கூடாது. சாதாரண உப்பிற்கு பதில் இந்துப்பு கல் உப்பு பயன்படுத்த வேணடும். காரம் குறைவாக சேர்க்கவும். சாம்பாரில் துவரம் பருப்பு குறைவாகவும் காய்கறி அதிகமாகவும் இருக்க வேண்டும். சாதம் செய்ய, கைக்குத்தல் அரிசி அல்லது பட்டை தீட்டப்படாத சிறுதானிய வகைகளான, வரகு, சாமை, குதிரைவாலி, தினை மற்றும் பனிவரகு, இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும். இவற்றை இட்லி செய்வதற்கும் பயன்படுத்தலாம். ரொட்டி செய்ய, கோதுமை, ராகி, கம்பு மற்றும் சோளம், இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.மாலை 5:00 மணிக்கு தேநீர் அல்லது பானம், சுக்கு மல்லி பானம், ஆரஞ்சு பானம், பச்சை தேநீர் அருந்தலாம். இரவு 7:30 அல்லது 8: 00 மணிக்குள், இரவு உணவாக பழங்கள் மட்டும் உண்ண வேண்டும். சமைத்த உணவு கூடாது. பழவகை உணவு முறைகளில் குறிப்பிட்டுள்ளதைக் கடைபிடிக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !