உள்ளூர் செய்திகள்

துாக்கம் கெட்டால்... இனப்பெருக்க ஹார்மோன்களும் பாதிக்கப்படுமா?

துாக்கம் என்பது உடலுக்கான ஓய்வு மட்டுமல்ல... அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஹார்மோன்களையும் அமைதியாக வழிநடத்தும் ஓர் இயற்கை மருந்து. இரவு இருட்டாகும்போது நம் மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதையே பலர் துாக்க ஹார்மோன் என்று அழைப்பர். ஆனால் இதன் வேலை துாக்கத்தை வரவழைப்பது மட்டுமல்ல. மூளையில் இருக்கும் ஹைப்போதாலமஸ் என்ற கட்டுப்பாட்டு மையத்திற்கும், பிட்யூட்டரி சுரப்பிக்கும் நேரத்தைச் சொல்லும் ஒரு உயிரியல் கடிகாரம் போல மெலட்டோனின்செயல்படுகிறது.இப்போது இரவு... உடலை ஓய்வுக்குத் தயார்படுத்துங்கள் என்று தகவல் அனுப்புகிறது.இதே நேரத்தில், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் GnRH என்ற ஹார்மோனும் சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். அதன்பிறகுதான் LH மற்றும் FSH என்ற ஹார்மோன்கள் சுரந்து, பெண்களில் கருமுட்டை வளர்ச்சி, மாதவிடாய் சுழற்சி, ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு உற்பத்தி ஆகியவை இயல்பாக நடைபெறும்.ஆனால் இரவு நேரங்களில் தொடர்ந்து அலைபேசி பயன்படுத்துவது, அதிக வெளிச்சத்தில் இருப்பது, இரவில் வேலை செய்வது, துாக்கமின்மை போன்ற காரணங்களால் மெலட்டோனின் சுரப்பு குறைந்தால், இந்த உயிரியல் கடிகாரம் குழப்பமடையலாம். அதன் விளைவாக GnRH சுரப்பு சீர்குலைந்து, LH மற்றும் FSH அளவிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.இதனால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கின்மை, கருமுட்டை வெளியேறுவதில் தாமதம் அல்லது கோளாறு, கர்ப்பம் தரிக்க சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவது, விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது தரம் பாதிக்கப்படுவது, பாலுணர்வு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனால் முக்கியமான விஷயம், மெலட்டோனின் மட்டும் எல்லாவற்றிற்கும் காரணம் அல்ல. மனஅழுத்தம், உடல் பருமன், தைராய்டு கோளாறு, பி.சி.ஓ.எஸ்., உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல காரணிகளும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எனவே மெலட்டோனின் சீர்குலைவு ஒரு பங்களிக்கும் காரணியாக கருதப்படுகிறது.என்ன செய்ய வேண்டும்இரவு பத்து மணிக்குள் துாங்க முயற்சி செய்யுங்கள். துாங்குவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பு அலைபேசி, டேப்லெட், லேப்டாப், டிவி போன்ற திரைகளைத் தவிர்க்கவும்.படுக்கையறையை இருட்டாக வைத்தால் மெலட்டோனின் இயல்பாக சுரக்கும்.நல்ல துாக்கம் என்பது சோர்வை போக்குவதற்காக மட்டுமல்ல; மூளை, ஹார்மோன்கள், இனப்பெருக்க ஆரோக்கியம், எதிர்கால தலைமுறையின் நலனையும் பாதுகாக்கும் ஒரு முதலீடு.-டாக்டர் எஸ். குணவதிஉடலியக்கவியல் சிறப்பு மருத்துவ நிபுணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்