கரு சிதைவிற்கும், மூட்டு வாதத்திற்கும் சம்பந்தம் உள்ளதா?
ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் என்ற மூட்டு முடக்குவாதம், நம் உடல் அணுக்களை, நம் நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கும் ஆட்டோ இம்யூன் குறைபாடு. அதாவது, சுய எதிர்ப்பு நோய்.இது, 20 -- 40 வயது வரை உள்ள பெண்களையே அதிகம் தாக்குகிறது. இளம் வயதில் இப்பிரச்னை இருந்தால், குழந்தை பெற திட்டமிடும் போதே டாக்டரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.முடக்குவாத பாதிப்பிற்கான சில மருந்துகள் சாப்பிட்டால் கருத்தரிக்க முடியாது. கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மருந்து களை சிபாரிசு செய்வோம். நோயின் தீவிரம் குறைவாக இருப்பதை கணித்து, அந்த நேரத்தில் குழந்தை பெற திட்டமிடச் சொல்வோம்.குழந்தை பிறந்த பின், சில வகை மருந்துகள் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றையும் தவிர்க்க வேண்டும்.கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்று, தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரையிலும், எந்தெந்த மருந்துகளை தவிர்க்க வேண்டும்என்பதற்கு, டாக்டரின் ஆலோசனை அவசியம்.ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் போன்றே ரத்தம் உறையும் தன்மை உடைய ஆன்டி பாஸ்போலிபிட் சிண்ட்ரோம் என்ற ஒரு குறைபாடு பெண்களை அதிகம் பாதிக்கிறது. பிளசெண்டா எனப்படும் தாய் -சேய் இணைப்பு திசுவான நஞ்சுக்கொடி வழியாகவே ரத்தம், ஊட்டச்சத்துகள் கருவிற்கு செல்லும்.இப்பிரச்னை இருந்தால், பிளசெண்டாவில் ரத்தம் உறைந்து விடும். தாயிடம் இருந்து சில அணுக்கள் கருவின் இதய ரத்தக் குழாயில் சென்று, கருவிற்கு ரத்தம் செல்வது தடைபடும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம்.குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் போதே, இது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தால், ஹெப்பாரின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை மகப்பேறு, ருமட்டாய்டு என்ற இரு பிரிவு டாக்டர்களும் ஆலோசனை செய்து தருவர். இந்த இரு பிரிவு டாக்டர்களின் கண்காணிப்பில் கருவிற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.வி.கிருஷ்ணமூர்த்தி, மூட்டு முடக்குவாதம் சிறப்பு மருத்துவர், மீனாட்சி மருத்துவமனை, சென்னை044 - 4293 8938drvk56@gmail.com