"சைவ உணவு சாப்பிட்டும் மாரடைப்பு வருகிறதே?
* சி.முத்துக்குமார், விருதுநகர்: 41 வயதாகிய நான், பல ஆண்டுகளாக சைவ உணவையே சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும், சமீபத்தில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது எதனால்?பிறநாடுகளில், அசைவ உணவு உண்போரை ஒப்பிடுகையில், சைவ உணவு உண்பவருக்கு, மாரடைப்பு வரும் தன்மை, பலமடங்கு குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவில், சைவம் உண்போருக்கும், அசைவம் உண்போருக்கும், மாரடைப்பு வரும் தன்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை.இந்தியாவில், சைவ உணவு முறை உள்ளவர்கள், பால், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக உண்கின்றனர். இனிப்பு வகைகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் நெய்யை அதிகளவில் சேர்த்துக் கொள்கின்றனர். அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுகின்றனர். நிறைய அரிசி சாதம் உண்டு, காய்கறி பழங்களை குறைவாக எடுக்கின்றனர். இவை அனைத்தும், சைவ இந்தியருக்கு, மாரடைப்பு வரும் தன்மையை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. ஆகவே, சரியான உணவு, உப்பு, எண்ணெய், இனிப்பை நன்கு குறைத்து, காய்கறி, பழங்களை நிறைய எடுத்து, தினசரி நடைப்பயிற்சியும் செய்தால், மாரடைப்பை தவிர்க்கலாம்.* எல்.பிரசாத், மதுரை: எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆறு மாதங்களாகிறது. என் தொழிலில் இரவுப் பணியையே நான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தினமும் நான்கு மணி நேரமே தூங்க முடிகிறது. நான் என்ன செய்வது?சமீபத்திய ஆய்வின்படி, தொடர்ந்து 3 நாட்களுக்கு தூக்கம் வெகுவாக குறைந்தால், மாரடைப்பு வரும் தன்மை பலமடங்கு அதிகரிக்கும் என, தெரிய வந்துள்ளது. ஆகவே, உங்கள் மாரடைப்புக்கு, தூக்கம் இன்மை காரணமாக இருந்திருக்கக் கூடும்.ஒவ்வொரு மனிதருக்கும், தினமும் ஏழு மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் சரியாக இல்லாவிட்டாலும், உள்ளுறுப்புகள், குறிப்பாக, இதயம் உட்பட பலவும், பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு வந்த பிறகும், இப்படி தூங்காமல் இருப்பது மிகவும் தவறு. உங்கள் பணிகளுக்கு சாத்தியம் இல்லையெனில், அதை விட்டுவிட்டு, வேறு பணிக்கு மாறுவதே சிறந்தது. இதய ஆரோக்கியமே முதன்மையானது என்பதை, நீங்கள் மறந்துவிடக் கூடாது.டாக்டர் விவேக்போஸ், மதுரை.