அனைவருக்கும் நோய் வரும் காலம்! உணவு பழக்கம் மாற்றினால் தப்பிக்கலாம்
கோவையில் தற்போது மழையும், வெயிலும், குளிரும், வெப்பமும் மாறி மாறி வருகிறது. இந்த கால நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு, உணவு முறைகளை மாற்றி கொள்ள வேண்டும் என்கிறார், பிரபல ஆயுர்வேத டாக்டர் விஜயப்பிரியா.அவர் கூறியதாவது:மழை, காற்று, குளிர் காலமான இந்த ஆடி மாதத்தில், வியாதி உள்ளவர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடலை சுத்தம் செய்யும் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த குளிர் காலத்தில் காய்கறி, பழ வகைகள் மாறும். இந்த காலத்தை 'ரிதுசந்தி காலம்' என்று ஆயுர்வேதத்தில் அழைப்பார்கள். இந்த சமயங்களில் அனைவரது உடலும், கஷ்டங்களை அனுபவிக்கும்.வியாதிகள் வரும்இந்த சீசனில், முதியவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் வியாதிகள் வரும். அதனால் தான் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்து, ஆரோக்கியமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஜீரணம் சார்ந்த இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆடி மாதங்களில் கோவில்களில் கூழ், கஞ்சி கொடுப்பதற்கு இதுதான் காரணம். இந்த மாதத்திலேயே, அடுத்த மாதத்திற்கு தகுந்தாற்போல உடலை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆடி மாதத்தில் இளம் வயதினரை காட்டிலும், முதியவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அவர்களது உடல் நிலை மெதுவாகதான் தேறும்.ஆவி உணவு நல்லதுஅவர்கள் ஆடி மாதத்தில் கஞ்சி, கூழ், மருந்து கஞ்சி, ஆவியில் வேகவைத்த உணவு வகைகள், நாட்டு காய்கறி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.அசைவம் தவிர்ப்பது நல்லது. இளையவர்களும் இதனை பின்பற்றலாம். இந்த சீசனில் கிழங்கு வகைகள் கிடைக்கும். அதனை உடலுக்கு பழக்கப்படுத்திக் கொண்டு, எடுத்துக்கொள்ள வேண்டும்.மழை, காற்றினால் காய்ச்சல், சளி வருவதை தவிர்க்க, தண்ணீரில் சுக்கு, சீரகம், மிளகு, ஓமம் ஆகியவற்றை காய்ச்சி குடிக்க வேண்டும்.வெயில் காலத்தில் கொத்து மல்லியை, தண்ணீரில் காய்ச்சி குடிக்க வேண்டும். ஜீரணத்திற்கு, அஷ்ட சூரணம் போன்ற சூரணம் எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.